Published:Updated:

சசிகலா டி.டி.வி-க்குக் கொடுத்த அசைன்மென்ட்; பிப்.8 பெங்களூர்- சென்னை பயணத் திட்டம்!

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

சசிகலாவை வரவேற்க தமிழகமெங்குமிருந்து தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக வரும்போது, இஸ்லாமிய மக்களைத் திரட்டி சசிகலாவுக்கு வரவேற்பளிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தைப் பரபரப்பு குறையாமல்வைத்திருக்கிறது சசிகலாவின் பெயர். சிறையிலிருந்து வெளியாகி, சிகிச்சை முடிந்து பிப்ரவரி 7-ம் தேதி சென்னை வருவதாகத் திட்டமிட்டிருந்தது சசிகலா தரப்பு. ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதற்காக சென்னை வருகையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு மாற்றிவிட்டார்களாம். திங்கட்கிழமையன்று மொத்த மீடியாவும், மக்களும் சசிகலா மீது மட்டுமே கவனத்தை குவித்திருக்க வேண்டுமென்பதால், இப்படிப் பயணத் திட்டம் மாற்றப்பட்டதாம். தற்போதுவரை சசிகலா 8-ம் தேதி கிளம்புவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பயணத் திட்டம் மாற்றப்படலாம் எனவும் சொல்கின்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் தற்போது திட்டமிட்டிருக்கும் பயணத் திட்டத்தை நம்மிடையே தெரிவித்தனர்.

பெங்களூர் தேவனஹல்லி அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் சசிகலா, காலைச் சிற்றுண்டியை ரிசார்ட்டிலேயே முடித்துவிட்டுக் கிளம்புகிறார். பிப்ரவரி 8-ம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணி வரை எமகண்டம் வருகிறது. காலை 9 மணிக்கு முன்னதாக அல்லது எமகண்டம் முடிந்தவுடன் நல்ல நேரத்தில் தமிழகப் பயணத்தைத் தொடங்குகிறாராம் சசிகலா.

சசிகலா
சசிகலா

சசிகலா பயணம் செய்வதற்காக, ஏற்கெனவே ஜெயலலிதா பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் பெங்களூரில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ``இது வேண்டாம். அக்கா பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வேனை ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் தொண்டர்கள் என்னை எளிதாகப் பார்க்க முடியும்" என்று சசிகலாவே கூறியிருப்பதால், வேனும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.

சசிகலா பயணம் செய்யும் வாகனத்தில் கண்டிப்பாக அ.தி.மு.க கொடி கட்டப்படும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு வரத் திட்டமிட்டிருக்கும் சசிகலாவை வரவேற்க தமிழகமெங்குமிருந்து தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக வரும்போது, இஸ்லாமிய மக்களைத் திரட்டி சசிகலாவுக்கு வரவேற்பளிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

`2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள்

சசிகலா வரும் ரூட் தேசிய நெஞ்சாலையிலேயே வந்துவிடும் என்பதால், வரவேற்பு அளிப்பதில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஒருசிலர் சசிகலாவிடம் கூறியிருக்கிறார்கள். இதற்காக, தருமபுரி, அரூர், திருவண்ணாமலை, திண்டிவனம் வழியாக சென்னைக்கு வரலாம் என மாற்றுத் திட்டத்தை முன்வைத்திருக்கும் அவர்கள், ``இந்த ரூட்டுல வந்தா சென்னை வந்துசேர லேட் ஆகிடும். ஆனால், கட்சிக்காரங்க எல்லாம் உங்களுக்கு சந்தோஷத்தோட வரவேற்பளிக்க முடியும்" எனக் கூறியுள்ளனர். இதுவரை, ரூட் மேப் இறுதி செய்யப்படவில்லை.

தன்னை வரவேற்க திரளும் தொண்டர்களின் கையில் கண்டிப்பாக அ.தி.மு.க கொடியும், இரட்டை இலைச் சின்னப் பதாகையும் இருக்க வேண்டுமென சசிகலாவே உத்தரவிட்டிருக்கிறாராம். அப்போதுதான், எடப்பாடி அண்ட் கோ-வுக்கு பயம் ஏற்படும் என்பதால், இந்த ஏற்பாட்டை அவரே செய்யச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

இதுபோக, சசிகலா பயணம் செய்யும் வழித்தடத்தில் ஏழு இடங்களில் அ.தி.மு.க கொடியை அவர் ஏற்றுவதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். இந்த விவரம் தெரிந்ததால்தான், அவசர அவசரமாக கடந்த 4-ம் தேதி டி.ஜி.பி திரிபாதியைச் சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், `அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகாரளித்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் `அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்த சசகிலாவுக்கு உரிமை உண்டு’ எனக் கூறியிருக்கிறார்.

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சசிகலா பயணமாகும் வாகனத்திலிருந்து அ.தி.மு.க கொடி கழற்றப்பட்டால், பிரச்னை வெடிக்கும் என்று காவல்துறை கருதுகிறது. அப்படி வெடித்தால், அது சசிகலாவுக்கு மைனஸாகிவிடும், `கலவரத்தைத் தூண்டுகிறார்’ என்று சசிகலா மீது வழக்கு பதியலாம் என்று ஆளுந்தரப்பு திட்டமிட்டிருப்தாகத் தெரிவிக்கிறார்கள் ஆளும்தரப்புக்கு நெருக்கமானவர்கள்.

``சசிகலா அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்!'' - நாஞ்சில் சம்பத் பிடிவாதம்

சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தனக்காகத் தயாராகியிருக்கும் வீட்டுக்கு வரவிருக்கிறார் சசிகலா. அங்கு கட்சி நிர்வாகிகளை அவர் சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன. அன்றைய தினத்திலிருந்து, பிரதமர் மோடி தமிழகம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை சென்னையை உச்சகட்ட பாதுகாப்பில் வைத்திருக்கும்படி காவல்துறைக்கு ஆட்சி மேலிடத்திடமிருந்து உத்தரவு போயிருக்கிறதாம். குறிப்பாக, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள மெரினா ரோடு, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க அலுவலகம், வேதா நிலையம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பின்னி சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். கூடுதல் பாதுகாப்புக்காக 500 ஆயுதப்படை காவலர்களை பணியமர்த்தவும் சென்னை மாநகரக் காவல்துறை தயாராகிவருகிறது.

 போயஸ் கார்டன் - வேதா நிலையம்
 போயஸ் கார்டன் - வேதா நிலையம்

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே அ.ம.மு.க தலைமைக் கழக அலுவலகம் செயல்படுகிறது. `ஒருமுறை இங்கே வந்துட்டுப் போங்கம்மா...’ என்று சில அ.ம.மு.க நிர்வாகிகள் சசிகலாவிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு, `நான் அ.தி.மு.க பொதுச்செயலாளர்ப்பா. என் கட்சி ஆபீஸ் லாயிட்ஸ் ரோட்டுல இருக்கு. நான் ஏன் அ.ம.மு.க ஆபீஸ் வரணும்’ என்றாராம் சசிகலா. கட்சியை கன்ட்ரோல் எடுப்பதில் சசிகலா உறுதியாக இருப்பதால், வரும் நாள்களில் கண்டிப்பாக விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு