Published:Updated:

``என்னை வெளியே கொண்டு வந்தால் போதும்!’’- சசிகலாவின் சிறைத்துயரம்

சசிகலா 
(சிறையில்)
சசிகலா (சிறையில்)

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான எந்தவிதமான சட்டப்பணிகளும் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அவ்வளவு ஏன்... கர்நாடக சிறைத்துறைக்கு இதுகுறித்து சசிகலா தரப்பிலிருந்து கோரிக்கை மனுகூட வைக்கப்படவில்லை.

“சசிகலா- எடப்பாடி இடையே பேச்சுவார்த்தை... வெளியே வந்ததும் முக்கியப்பொறுப்பு” என்றெல்லாம் தொடர்ந்து சசிகலாவைப் பற்றி செய்திகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா, ‘‘முதலில் என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டுவரும் வேலையைச் சீக்கிரமாகச் செய்யுங்கள்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெங்களூரு சிறைக்குள் சென்றார் சசிகலா. இரண்டரை ஆண்டுகளைக் கடந்துவிட்டது அவருடைய சிறை வாழ்க்கை. சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இதற்கிடையில், சசிகலாவை விடுதலை செய்யும் வேலைகள் வேகமெடுத்து இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதற்கு உறுதி கொடுப்பதுபோன்று, எடப்பாடிக்கு நெருக்கமான ஒருசிலர் சசிகலாவை சந்தித்ததையும் இதற்கு காரணமாகச் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக சீராய்வு மனுவிற்கான வேலைகள் ஒருபுறம் நடந்துவந்தன. வழக்கறிஞர்கள் குழு, இதுதொடர்பான வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தது. மறுபுறம் பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர் சுப்பிரமணிய சுவாமியும் சசிகலாவின் விடுதலைக்குத் தேவையான சட்டஆலோசனைகளை வழங்கிவந்தார். சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதனால் சசிகலாவின் விடுதலைக்கான வேலைகள் வேகமெடுப்பதாகக் கூறப்பட்டது.

TTV Dinakaran, Sasikala
TTV Dinakaran, Sasikala

இந்நிலையில், சசிகலாவின் விடுதலை என்பது அவ்வளவு எளிதானதல்ல என்கிறார்கள் சட்டத்துறையினர். குறிப்பாக, சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான எந்த விதமான சட்டப்பணிகளும் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கர்நாடக சிறைத்துறைக்கு இதுகுறித்து சசிகலா தரப்பிலிருந்து கோரிக்கை மனுகூட இன்னும் வைக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவருடைய நன்னடத்தை காரணமாக, அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுவந்தது. முன்கூட்டியே என்றாலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை அந்த காலக்கெடு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் விடுதலைக்கு உதவிவருகிறார் என்கிற செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டுவருகிறது. அவரால் எந்த வகையில் இந்த விடுதலை விவகாரத்தில் உதவ முடியும் என்று தெரியவில்லை” என்று புதிய தகவலைச்சொல்கிறார்கள்.

இதற்கிடையே, தினகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையே மனவருத்தம் இருக்கிறது. சசிகலாவின் அறிவுறுத்தலில்தான் தினகரன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சசிகலாவை சந்திக்க மீண்டும் சிறைக்குச் செல்கிறார் தினகரன். இந்த சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகள் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது. சுப்பிரமணிய சுவாமியின் மூவ், சசிகலாவை விடுதலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், அதற்கு பா.ஜ.க தரப்பு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தினகரன் சசிகலாவிடம், 'ஒருபோதும் பா.ஜ.க நமக்கு உதவி செய்யாது' என்பதைப் புரியவைக்க இருக்கிறார். அதேபோல், சசிகலாவிடம் பணம் வாங்கிய பலரும் இப்போது பின்வாங்கிவிட்டார்கள். அவர்களிடம் பணத்தை மீட்பது குறித்தும் தினகரன் தரப்பு தீவிரமாக இருக்கிறது.

Sasikala, Edappadi
Sasikala, Edappadi

அதேநேரம், தன்னை சந்திக்க வரும் உறவினர்களிடம் “என்னால் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது. ஏதாவது செய்து என்னை வெளியே கொண்டுபோய்விடுங்கள். உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்துவருகிறது. எத்தனை நாள்கள்தான் இந்த வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்” என்று கண்ணீர் விட்டுள்ளார். சசிகலா உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்திருக்கிறார். இரண்டாண்டுகள் இந்த கொட்டடி வாழ்க்கை, குடும்ப உறவுகள் இழப்பு, மறுபுறம் யார் சொல்வது உண்மை, எது பொய் என்று தெரியாதநிலையில், பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறார்.

அரசியல், ஆளுமை போன்றவற்றை சிந்திக்கும் மனநிலையில் சசிகலா இப்போது இல்லை. சிறையிலிருந்து வெளியே வந்தால் போதும் என்கிற மனநிலை அவரிடம் இருக்கிறது என்கிறார்கள். இந்தத் தகவல் சுப்பிரமணிய சுவாமிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர், சில சட்டவிதிகளைச் சொல்லி, நான் சொல்லும்போது சசிகலாவின் விடுதலைக்கான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யுங்கள் என்ற அறிவுறுத்தியுள்ளார்.

மறுபுறம் எடப்பாடி தரப்பு, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் தினகரனுக்கும் அவருக்குமான நெருக்கம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆழம்பார்த்துவருகிறது. சிறையிலிருந்து வந்தால், அ.ம.மு.க-வை கலைக்கச் சொல்லும் எண்ணத்தில் எடப்பாடி தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால், எடப்பாடி-பன்னீர் இரண்டுபேருமே நமக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களை ஒருபோதும் நாம் நெருங்கவிடக்கூடாது என்பதை சசிகலாவிடம் தெளிவுபட சொல்லவிருக்கிறார் தினகரன். அ.ம.மு.க என்ற கட்சியைக் கலைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை” என்று உறுதியாக இருக்கிறார் தினகரன். ஆனால், என்னை விட்டால் போதும் என்கிற மனநிலையில் இப்போது இருக்கிறாராம் சசிகலா.

subramanian swamy
subramanian swamy

சிறை வாழ்க்கையில் யோகா, தியானம், நடைப்பயிற்சி, கட்டுப்பாடான உணவு போன்றவற்றால் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சில நாள்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதுதொடர்பாக ஒரு புகைப்படமும் வெளியானது. ஆனால் இப்போது, அவரின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உடல்நலத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று நடக்கும் தினகரன் – சசிகலா சந்திப்பில் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது. சசிகலாவை சிறையிலிருந்து சிகிச்சைக்காக வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் அது இருக்கலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் `திடீர்' ரெய்டு! - சசிகலா அறையில் செல்போன் பறிமுதல்?
அடுத்த கட்டுரைக்கு