Published:Updated:

அதிமுக பொன்விழாவையொட்டிய சசிகலாவின் 'நகர்வுகள்': வெற்றியா தோல்வியா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையான சசிகலா 8 மாதங்கள் கழித்து ஜெயலலிதாவின் நினைவிடம் சென்றிருக்கிறார். அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் அவரது முயற்சிக்காக இந்த நகர்வு எந்தளவு உதவியது.?

அ.தி.மு.க-வின் பொன்விழாவையொட்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று சசிகலா மரியாதை செலுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட நாள்களாக நடக்கும் எனக் காத்திருந்தது இன்று நடந்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா முதல்வராகும் கனவிலிருந்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நான்கு ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் மட்டுமல்ல அ.தி.மு.க-விலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ‘சசிகலாவைத் தியாகத் தலைவி, சின்னம்மா’ என அழைத்தவர்கள் எல்லாம் ‘ஜெயலலிதா இறப்புக்குக் காரணமே சசிகலாதான். கட்சியில் இனி அவருக்கு இடமே இல்லை’ எனப் பேசத் தொடக்கினர். சசிகலாவும் கட்சியில் தனக்குத் துரோகம் நடந்துவிட்டது என்பதாகப் பேசத் தொடங்கினார். சிறையிலிருந்து வந்ததும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவேன் என்றெல்லாம் பேசினார். தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலாவுக்குத் தமிழ்நாடு அரசியல் சூழல் சாதகமாக இல்லை. மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போதிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா நினைவிடத்துக்குக்கூடச் செல்ல முடியாத அளவு அவரை முடக்கியது.

சசிகலா
சசிகலா

அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன் என அறிக்கைவிட்ட சசிகலா இடையிடையே கட்சியை மீட்பேன் எனக் கூறி தொண்டர்களிடையே தொலைப்பேசியில் பேசிய ஆடியோக்களும் வெளியாகின. ஆனால், இவை எதுவும் அவரின் அரசியல் நகர்வுக்கு கை கொடுக்காததால் விடுதலையாகி எட்டு மாதங்கள் கழித்து ஜெயலலிதா நினைவிடம் சென்றிருக்கிறார். தற்போது சசிகலா எடுத்திருக்கும் அரசியல் நகர்வின் பின்னணி என்ன இது அவருக்குக் கை கொடுத்ததா இல்லையா?

சசிகலா: ''நான்கு வருட பாரத்தை இறக்கிவைத்தேன்!'' - அவர் சொல்ல வருவது என்ன?

அ.தி.மு.க-வின் பொன்விழாவையொட்டி ஜெயலலிதா நினைவிடத்திலும் அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் இல்லத்துக்குச் சசிகலா செல்கிறார் என்பது முன்பே திட்டமிட்டப்பட்டு நிகழ்ச்சி நிரல் எல்லாம் தயார் செய்யப்பட்டிருந்தது. அதேபோல அக்டோபர் 16-ம் தேதி காலையில் தி.நகரிலிருக்கும் தன்னுடைய வீட்டிலிருந்து அ.தி.மு.க கொடி பொருத்திய காரில் கிளம்பிய சசிகலா காலை 11 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார். “நினைவிடத்துக்கு நான் ஏன் இத்தனை நாள் கழித்து தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக என் மனதிலிருந்த பாரத்தை இன்று இறக்கி வைத்துள்ளேன். அதிமுக கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதிமுக-வையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” எனச் செய்தியாளர்களிடம் பேசினார்.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க தொடர்பாகவும் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு அது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாதது அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலாவின் நடவடிக்கை குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம், “தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறித்து அறிவிப்பு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சசிகலா எதிர்பார்த்த அளவுக்குத் தொண்டர்கள் கூடாததும் நினைவிடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் அவரை எரிச்சலுக்குள்ளாக்கியது. வீட்டு வாசலில் மிகப்பெரிய தொண்டர்கள் கூட்டம் ஒரு சில மாவட்டச் செயலாளர்களின் மரியாதை, தி.நகரிலிருந்து நினைவிடம் செல்லும் வழியெல்லாம் அ.தி.மு.க கொடியோடு தொண்டர்கள் வரவேற்பு, நினைவிடத்தில் மிகப்பெரிய கூட்டம் என எதிர்பார்த்திருந்தவருக்கு அது நடக்கவில்லை என்பதால் மிகப்பெரிய ஏமாற்றத்துக்குள்ளானார் சசிகலா.

மேலும், தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களை நினைவிடத்துக்கு அனுப்பவில்லை என்பதும் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க-வினர் விமர்சனம் செய்ததுக்கு ஏற்றா மாதிரியே எல்லாம் நடந்திருப்பதும் அவருக்குப் பெரிய உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்சி தன் கட்டுப்பாட்டுக்கு வரும் முக்கிய நிர்வாகிகள் தன் பக்கம் வருவார்கள் என்ற கணக்கெல்லாம் பொய்யாய் போனதால் கோபத்தின் உச்சியிலிருக்கிறார். அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்துக்குச் சென்று கொடியேற்றலாம் என நினைத்திருந்தவர் தற்போது அங்கிருந்து நேராக வீட்டுக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். வழக்கம்போல தன்னுடைய இந்த அரசியல் கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டதில் சசிகலா மிகப்பெரிய அப்செட்” என்றனர்.

ஜெ. நினைவிடதில் சசிகலா
ஜெ. நினைவிடதில் சசிகலா

அரசியல் வட்டாரத்தில் கருணாநிதி மறைவுக்குப்பின் மெரினாவில் மு.க.அழகிரி நடத்திய பேரணியின் தோல்வியோடு இதை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் சிலர். சசிகலாவின் அடுத்த அஸ்திரம் என்ன... அது எந்தளவு வலுவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு