Published:Updated:

நம்பர் 2 சிறைவாசி; நெருக்கும் நோய்கள்; குடும்ப குளறுபடி! - எப்படியிருக்கிறார் சசிகலா?

ஆ.விஜயானந்த்

ஒருமுறை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம், `ஒரு லிட்டர் பால் வாங்கித் தர முடியுமா... சிறையில் கேட்டால் தர மறுக்கிறார்கள்' என வேதனைப்பட்டார் சசிகலா. இந்த வகையில்தான் அவருடைய நிலைமை இருக்கிறது.

சசிகலா
சசிகலா

பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவைச் சந்தித்துப் பேச இருக்கிறார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். `ஒவ்வொரு சிறைச் சந்திப்பிலும் பெங்களூரு புகழேந்தியும் உடன் செல்வார். இந்த முறை அவர் செல்லவில்லை. கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களால் சசிகலாவும் அதிருப்தியில் இருக்கிறார்' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க சார்பில் கதிர் ஆனந்தும் அ.தி.மு.க வேட்பாளராக ஏ.சி.சண்முகமும் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் மக்கள் நீதி மய்யமும் பின்வாங்கிவிட்டது. `கட்சியாகப் பதிவு செய்த பிறகே போட்டியிடுவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எனவே, வேலூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என அறிவித்துவிட்டது அ.ம.மு.க. தினகரனின் இந்த முடிவு குறித்துப் பேசும் மன்னார்குடி குடும்ப உறவினர்கள் சிலர், "கடந்த சில வாரங்களாக அ.ம.மு.க-வுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவையும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் மாற்றுக் கட்சிகளை நோக்கிப் படையெடுப்பதையும் சசிகலா ரசிக்கவில்லை.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடந்த சந்திப்பிலும், `கொஞ்ச நாள் அமைதியா இரு. நீ எதையும் செய்ய வேண்டாம்' எனச் சற்று கோபத்துடனேயே கூறிவிட்டார் சசிகலா. அதன் விளைவாகத்தான் சில நாள்களாக அமைதியாக இருக்கிறார் தினகரன். தவிர, டாக்டர் வெங்கடேஷ், விவேக் ஜெயராமன் என குடும்பத்தினரும் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். புதிய நிர்வாகிகள் தொடர்பாக வெளியான பட்டியலும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சி.ஆர்.சரஸ்வதிக்கு அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்த தினகரன், பெங்களூரு புகழேந்திக்கு எந்தப் பொறுப்பையும் வழங்கவில்லை. இதனால் கடும் மன வருத்தத்தில் இருக்கிறார் புகழேந்தி" என விவரித்தவர்கள்,

தினகரன்
தினகரன்

"நன்னடத்தை விதிகளின்படி டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்துவிடுவார் என எதிர்பார்க்கிறோம். கர்நாடக மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்காது என நம்புகிறோம். சிறை வாழ்க்கையால் தொடர் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. கழுத்தின் பின்புற மூட்டு தேய்மானம், இதன் காரணமாகத் தலைச்சுற்றல் உட்பட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முதுகுத்தண்டில் ஏற்படும் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார் சசிகலா.

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வழிந்துகொண்டிருக்கிறது. சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் போல இந்தப் பிரச்னைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. சிறையிலும் அவருக்குப் பெரிதாக எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாராவில் நம்பர் 1 சிறைவாசி, நம்பர் 2 சிறைவாசி என இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். நம்பர் ஒன் சிறைவாசி என்றால் முதல் வகுப்பில் இடம் ஒதுக்கப்படும். நம்பர் 2 என்பது சாதாரண கைதிகளுக்கான பிளாக். தற்போது சாதாரண கைதிகளுக்கான வசதிகளைத்தான் சசிகலாவும் இளவரசியும் சுதாகரனும் அனுபவித்து வருகின்றனர்.

`அ.ம.மு.க அமைப்புச் செயலாளர்; ஆனா, அழைப்பிதழே இல்லை!' 
- தி.மு.க-வில் இணைந்த வேலூர் ஞானசேகரன்

முதல் வகுப்பு வசதியைத் தரக் கோரி சுதாகரன் மட்டுமே நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதற்காக வருமான வரிக்கணக்கு தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதன்பேரில் உத்தரவிட்ட நீதிபதி, `முதல் வகுப்பு வசதியைக் கொடுப்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். மேலும், ` முதல் வகுப்பு வசதியைக் கொடுப்பதற்குச் சட்டத்தில் இடம் இருந்தால் அளிக்கலாம். இல்லாவிட்டால் தரத் தேவையில்லை' எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் காட்டினோம். அவர்களோ, சிறைத்துறை டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதினர். டி.ஜி.பி-யோ, மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறை
பரப்பன அக்ரஹாரா சிறை

இந்த மனுவால் கடுப்பான நீதிபதி, `இதுதொடர்பாக, ஏற்கெனவே நாங்கள் கூறிவிட்டோம். மீண்டும் எதற்காக நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள். இப்போதும் அதையே சொல்கிறோம். நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். இதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான முயற்சிகளில்கூட தினகரன் தரப்பினர் ஈடுபடுவதில்லை. இதைப் பற்றிக் கேட்டால், `எங்களுக்கு இல்லாத அக்கறை, உங்களுக்கு எதுக்கு?' என எரிச்சல்படுகின்றனர். ஒருமுறை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம், `ஒரு லிட்டர் பால் வாங்கித் தர முடியுமா... சிறையில் கேட்டால் தர மறுக்கிறார்கள்' என வேதனைப்பட்டார் சசிகலா. இந்தவகையில்தான் அவருடைய நிலைமை இருக்கிறது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

"அதேநேரம், கட்சிப் பதவிகளில் தன்னை முன்னிறுத்தாததால் அனுராதாவின் சகோதரரான மருத்துவர் வெங்கடேஷும் கடும் கொதிப்பில் இருக்கிறார். `குடும்பத்தைக் கட்சிக்குள் கொண்டுவந்தால் மக்கள் மத்தியில் பெயர் கெட்டுவிடும்' என நினைக்கிறார் தினகரன். ஆனால், உண்மை அதுவல்ல. தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணம்தான் காரணம்.

சசிகலா
சசிகலா

ஜெயலலிதாவே ஒருமுறை தினகரனுக்கும் வெங்கடேஷுக்கும் கட்சியில் பதவி வழங்கினார். குடும்பத்தினர் கட்சிக்குள் இருந்திருந்தால் தேர்தல் செலவுகளில் எந்தவிதக் குளறுபடிகளும் நேர்ந்திருக்காது. இந்த வேதனையை சசிகலாவிடமும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சசிகலா" என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.