Published:Updated:

சசிகலா சொன்ன பொது எதிரி... தி.மு.க-வா, பா.ஜ.க-வா?

சசிகலா
சசிகலா

பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் பேசியபோது, `பொது எதிரியை ஆட்சிக்கு வரவிடக் கூடாது’ என்று பேசினார். பொது எதிரி என்று அவர் குறிப்பிட்டது தி.மு.க-வையா, பா.ஜ.க-வையா?

ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, விடுதலையாகி சென்னை திரும்பினார். பெங்களூரு முதல் சென்னை வரை அவருக்கு அவரின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற ஒருவருக்கு இந்த அளவுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றால், தமிழ்நாட்டின் அரசியல் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை பொதுநலனில் ஆர்வம்கொண்டவர்கள் முன்வைக்கிறார்கள்.

மோடி
மோடி

பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார். மேலும், அங்கு கூடியிருந்தவர்களிடம் சில கருத்துகளை அவர் பேசினார்.

``அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, இந்தத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடம் அவசரமாக மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் செல்வேனா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பயம் காரணமாகத்தான் காவல்துறையிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தெய்வ அருளாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் என் அக்கா ஜெயலலிதா ஆசியாலும், கொரோனாவிலிருந்து மீண்டுவந்திருக்கிறேன். ஜெயலலிதா சொன்னதுபோல, எனக்குப் பின்னாலும் அ.தி.மு.க நூறு ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும். அவரது எண்ணத்தைத் தொடர என் வாழ்நாள் முழுவதையும் கட்சியின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பேன். கட்சி எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம், ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுந்திருக்கிறது.

நம் அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதைக் காப்பது நம் கடமை. எம்.ஜி.ஆர் கட்டிக் காத்து, ஜெயலலிதாவின் வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்துவிடக் கூடாது” என்று பேசினார் சசிகலா.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, ``நம் பொது எதிரியை தமிழக ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று சசிகலா குறிப்பிட்டார். கட்சிப் பெயரைக் குறிப்பிடாமல் பொது எதிரி என்று அவர் கூறினார். `பொது எதிரி’ என்று அவர் குறிப்பிட்டது தி.மு.க-வைத்தான் என்று பலரும், பா.ஜ.க-வை என்று சிலரும் கூறுகிறார்கள்.

`பொது எதிரி’ என சசிகலா குறிப்பிட்டது பா.ஜ.க-வைத்தான் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகிறார். இது பற்றி அவரிடம் பேசினோம்.

`` `பொது எதிரி’ என்று பா.ஜ.க-வைத்தான் சசிகலா குறிப்பிட்டார் என்று கருதுகிறேன். ஏனென்றால், இன்றைக்கு சசிகலா அனுபவித்திருக்கிற அனைத்துக்கும் பா.ஜ.க-தான் காரணமாக இருந்திருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டை வைத்து டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது பா.ஜ.க-தான். ஒரே நாளில் சசிகலா மற்றும் அவருக்குச் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் ரெய்டு செய்தது பா.ஜ.க-தான். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வருகிற நாளில் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆவதற்கும் பா.ஜ.க-தான் காரணம்.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவைத் தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்காமல் மௌனம் காத்ததன் மூலம் சசிகலாவுக்கு எதிரான ஜனநாயகப் படுகொலையைச் செய்தது பா.ஜ.க-தான். அ.தி.மு.க-வை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டது பா.ஜ.க-தான். இன்னும் உடைக்கப்போகிறது என்ற நிலையில் பொது எதிரி அவர்களாகத்தான் இருக்க முடியும். தி.மு.க கிடையாது. தி.மு.க., தான் உண்டு, தன் கடமை உண்டு என்று பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில், பொது எதிரி பா.ஜ.க-தான். ஒருவேளை பா.ஜ.க-வை ஆதரிக்கிற மாதிரியான நிலைப்பாட்டுக்கு சசிகலா வந்தால், அழிவுநிலைதான் அவர்களுக்கு ஏற்படும்” என்றார் நாஞ்சில் சம்பத்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

``எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி... மத்திய அரசுடன் மிகவும் இணக்கமாகத்தான் இருந்தனர். அந்த அணுகுமுறையில் பெரிய மாற்றம் வராது. பா.ஜ.க-வை அவர்கள் எதிரிக் கட்சியாகப் பார்க்க மாட்டார்கள். அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப்போல சசிகலா நடந்துகொள்ள மாட்டார். அதாவது, தமிழகத்தின் தன்மானத்தை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு அவர் போக மாட்டார் என்று நினைக்கிறேன்.

சசிகலா
சசிகலா

டி.டி.வி.தினகரன் மீது வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியது உட்பட அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜ.க மேற்கொண்டது உண்மைதான். அ.தி.மு.க-வுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து பா.ஜ.க ஈடுபடுகிறது என்பதும் உண்மைதான். ஆனாலும், பொது எதிரி என்று சசிகலா குறிப்பிட்டது தி.மு.க-வைத்தான். எம்.ஜி.ஆருக்குப் பிறகான தமிழக அரசியலில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் எதிர்க் கட்சிகளாக அல்லாமல், எதிரிக் கட்சிகளாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன.

'தனியாகக் கத்தட்டும்'... தே.மு.தி.கவை அ.தி.மு.க கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி?#TNElection2021

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, தி.மு.க-வை எதிரிக் கட்சி என்ற நிலையில்தான் தீவிரமாக எதிர்த்தார். `எதிர்க் கட்சியாகத்தான் பார்க்க வேண்டும்' என்று கருணாநிதி சொல்லிக்கொண்டாலும், அவரும்கூட அ.தி.மு.க-வை எதிரிக் கட்சியாகத்தான் பார்த்தார். எனவே, அ.தி.மு.க-வாக இருந்தாலும், அ.ம.மு.க-வாக இருந்தாலும் சசிகலாவாக இருந்தாலும் அவர்களின் முதல் எதிரி தி.மு.க-தான். எனவே, பொது எதிரி என்று சசிகலா சொன்னது பா.ஜ.க-வை அல்ல, தி.மு.க-வைத்தான்” என அடித்துச் சொல்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

சசிகலா
சசிகலா

சசிகலா, தினகரன் தரப்பு பா.ஜ.க-வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற போதிலும் பா.ஜ.க-வை வெளிப்படையாக விமர்சிக்கவோ, எதிர்க்கவோ சசிகலா, தினகரன் முன்வர மாட்டார்கள். தினகரன் சிறைக்குச் சென்று வந்ததிலிருந்து பா.ஜ.க-வை அவர் விமர்சிப்பதில்லை. மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வை அவர்கள் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். பொது எதிரி என்று சொல்வதன் மூலம் அ.தி.மு.க தொண்டர்களைக் கவர்வதற்கு சசிகலா நினைக்கலாம். அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கிறது என்ற கோபமும் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களிடம் இருக்கிறது என்ற கருத்து அரசியல் அரங்கில் வைக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு