Published:Updated:

`நான் ஒண்ணும் வேலைக்காரன் இல்லை’ - மாற்றுத்திறனாளியிடம் கடுகடுத்த சாத்தூர் எம்.எல்.ஏ - நடந்தது என்ன?

எம்.எல்.ஏ ரகுராமன்

``மனுவின் நிலை என்னவாச்சு எனத் தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது." - மாற்றுத்திறனாளி.

`நான் ஒண்ணும் வேலைக்காரன் இல்லை’ - மாற்றுத்திறனாளியிடம் கடுகடுத்த சாத்தூர் எம்.எல்.ஏ - நடந்தது என்ன?

``மனுவின் நிலை என்னவாச்சு எனத் தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது." - மாற்றுத்திறனாளி.

Published:Updated:
எம்.எல்.ஏ ரகுராமன்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, காயல்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பாண்டீஸ்வரி, மாற்றுத்திறனாளி. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார். பிழைப்புக்காக திருமலைக்குமார் - பாண்டீஸ்வரி இருவரும் ஊறுகாய் வியாபாரம் செய்துவருகின்றனர். இந்நிலையில் தொழில் விருத்திக்காக மூன்று சக்கர வாகனம் வாங்க எண்ணிய திருமலைக்குமார், இதற்காக உதவிகேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல முறை விண்ணப்பம் செய்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

ஆவண நகல்
ஆவண நகல்

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் காயில்பட்டிக்கு வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம், மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு கொடுத்திருக்கிறார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மனு கொடுத்து 20 நாள்களுக்கு மேலான நிலையில், மனுவின் நிலை குறித்து அறியவும், நினைவூட்டலுக்காகவும் மாற்றுத்திறனாளி திருமலைக்குமார், மதிமுக எம்.எல்.ஏ ரகுராமனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

நகல்
நகல்

அப்போது பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ரகுராமன், "அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் ஒண்ணும் உங்க வேலைக்காரன் கிடையாது. இப்பல்லாம் சூழ்நிலையே மாறிப்போச்சு. வேலைக்காரன்கிட்ட பேசுறதுக்குக்கூட யோசிச்சுதான் பேசவேண்டியியிருக்கு. அதிகாரிங்கள்லாம் நாம சொன்ன உடனே செய்யுற ஆளும் கிடையாது. என்னால உங்ககூட இருந்து உதவிதான் பண்ண முடியும். நீங்க, இப்படியெல்லாம் அவசரப்படுத்துறதா இருந்தா நீங்க வேற ஆள்வெச்சு பாத்துக்கோங்க. நான் உங்க ஃபைலை எடுத்து வெளியே வெச்சிருதேன். நீங்க வேற ஆள் பார்த்துக்கோங்க" என அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மாற்றுத்திறனாளி திருமலைக்குமாரிடம் பேசினோம். ``மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக் கூடாது என்பதற்காகவே மாநில அரசு நலத்திட்டத்தின் மூலமாக பல்வேறு உதவிகள் செய்துவருகிறது‌. அதன்படியே, எனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு விண்ணப்பித்தேன். அரசு மனதுவைத்து மூன்று சக்கர வாகனத்தை வழங்குமெனில் அது என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். இந்தப் பேருதவியை செய்துதருவார் என நம்பியே எம்.எல்.ஏ-விடம் மனு கொடுத்தேன். மனுவின் நிலை என்னவாயிற்று எனத் தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது" என்றார்.

சாத்தூர் எம்.எல்.ஏ ரகுராமனிடம் பேசினோம். "பதவியேற்ற நாள்முதல் தொகுதி மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்துவருகிறேன். பல்வேறு மக்கள் பணிகளுக்கும் சாத்தூர் தொகுதியை முன்னோடியாகத் திகழச் செய்திருக்கிறேன். ஆனால் இந்த விவகாரம் என்னைப் பெரும் சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் விஷயமாக ஏற்கெனவே மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பேசியிருக்கிறேன். குறைந்தது 70 சதவிகிதம் அளவுக்கு மாற்றுத்திறன் உள்ளவர்களுக்குத்தான் மூன்று சக்கர வண்டி வழங்க முடியும் என அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.

எம்.எல்.ஏ ரகுராமன்
எம்.எல்.ஏ ரகுராமன்

திருமலைக்குமார் 60 சதவிகித மாற்றுத்திறன் உடையவர். எனவே, அவருக்கு வழங்க முடியாது என்பதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மேலும், மாற்றுத்திறனாளியிடம் செல்போனில் பேசிய விவகாரத்தில், திட்டமிட்டே என்னை கோபப்படுத்தியுள்ளனர். கோபத்தில் இவர் வார்த்தைகளை எப்போது விடுவார்... எப்போது இவரை மாட்டிவிடலாம் என்று காத்திருந்து போனை ரெக்கார்டு செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதனால், உண்மையான மனதுடன் உதவி என்று போன் செய்பவரின் அழைப்புகளை எடுக்கக்கூட பயமாக இருக்கிறது" என்றார்.