
பா.ஜ.க என்பது வடமாநிலக் கட்சி. வடஇந்தியத் தலைவர்கள் இந்தியைப் பரப்புபவர்கள் என்கிற முத்திரை பா.ஜ.க-மீது இருக்கிறது. இதனாலேயே தொடர்ந்து தமிழ் குறித்து பா.ஜ.க-வினர் பேசிவருகிறார்கள்
காசி தமிழ் சங்கமத்தை அடுத்து, ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை ஏப்ரல் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை குஜராத்தின் பல பகுதிகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. இதையடுத்து, ``தமிழ் மொழி... தமிழினம்... தமிழ்நாடு என்ற சிந்தனையை மட்டுப்படுத்தி, தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் பா.ஜ.க-வின் அடுத்தகட்ட முயற்சிதான் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’' என்கிற பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு, மொழி உணர்வு ஆழமாக வேரூன்றியிருப்பதால், வேறு வழியில்லாமல் தாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை என்று காட்ட பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் பா.ஜ.க-வினர். ஒருபக்கம், `திருக்குறள் சொல்கிறோம், புறநானூறு பாடுகிறோம்’ என்று மேடைகளில் பாவ்லா காட்டுகிறார்கள். மறுபக்கம் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் போக்கைத் தொடர்கிறார்கள். எப்படி சாதிய உணர்வை ஒரு பக்கம் தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்களோ, அதேபோல ஆன்மிக அரசியலையும் மொழியில் கலந்து வியாபாரப் பொருளாக்குகிறார்கள்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மையமாகவைத்து காசி தமிழ் சங்கமத்தைத் தொடர்ந்து, சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள். `ஒரே நாடு... ஒரே மதம்... ஒரே மொழி’ என்ற லட்சியத்தோடு செயல்படும் பா.ஜ.க., இந்தியையும், அதன் தாயான சம்ஸ்கிருதத்தையும் மட்டுமே வளர்க்க நினைக்கிறது. அவர்களின் மொழி - இன அரசியல் திட்டங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது” என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேரா.இராம ஸ்ரீநிவாசன், “தமிழின், தமிழகத்தின் பெருமையை தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து வருகிறார். காசி தமிழ் சங்கம வெற்றியைத் தொடர்ந்து, இப்போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெறவிருக்கிறது. சௌராஷ்டிரர்கள் குஜராத்திலுள்ள சோமநாதரை வணங்கினர். தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து வந்த பிறகு, மதுரை சொக்கநாதரை வணங்கினார்கள். கலாசாரம் மாறியதே தவிர அவர்களின் பண்பாடும் தேசிய உணர்வும் மாறவில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான்... இந்தியர்கள் ஒரே பண்பாட்டைச் சார்ந்தவர்கள்தான்’ என்கிற அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையாக இருக்கின்றன” என்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பா.ஜ.க என்பது வடமாநிலக் கட்சி. வடஇந்தியத் தலைவர்கள் இந்தியைப் பரப்புபவர்கள் என்கிற முத்திரை பா.ஜ.க-மீது இருக்கிறது. இதனாலேயே தொடர்ந்து தமிழ் குறித்து பா.ஜ.க-வினர் பேசிவருகிறார்கள். ஒரு பக்கம் சம்ஸ்கிருதம், இந்தி மொழி பரப்புவதில் தெளிவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் வாக்குவங்கியைப் பெறுவதற்கு இதுபோல இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார்கள். தமிழர்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்துவது, அதேநேரம் வட இந்தியாவில் பா.ஜ.க-தான் தமிழர்களுக்கு நெருக்கமான கட்சி என்று பரப்புவது உள்ளிட்ட காரியங்களைச் செய்கிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் தொன்மை, கலாசாரத்தில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று காட்டுகிறார்கள். மற்றபடி தமிழ் மொழிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பா.ஜ.க என்ன செய்திருக்கிறது என்பது கேள்விக்குறிதான்” என்றார்.
வொர்க்‘அவுட்'டாகுமா பா.ஜ.க பிளான்!?