Published:Updated:

`ஜூலை 1-ம் தேதி டார்கெட்; உச்ச நீதிமன்ற அழுத்தம்!’ - சூடுபிடிக்கும் 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்

ஓ.பி.எஸ் - எடப்பாடி
ஓ.பி.எஸ் - எடப்பாடி

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் தனபால் உடனடியாகச் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

11 எம்.எம்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தேன் என்று ஓ.பி.எஸ். சபாநாயகருக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்று தகவல் மெல்ல மெல்ல கசியத்தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து தி.மு.க-வும் இவ்வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, சசிகலா தரப்பில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது தர்மயுத்தம் நடத்தி வெளியில் சென்ற ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களான கே.பாண்டியராஜன், செம்மலை, சரவணன், சண்முகநாதன் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தனர். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.

சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மணிப்பூர் மாநில வழக்கு போன்று இந்த மனுவையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர அவசரமாகக் கருதி விசாரித்து ஒரு இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தி.மு.க தரப்பில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தேன் என்பது குறித்துக் கடந்த மார்ச் மாதம் சபாநாயகர் தனபாலுக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கக் கடிதம் அளித்துள்ளார். இவ்விவகாரம்தான் தற்போது மெல்ல மெல்லக் கசியத்தொடங்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் விளக்கக் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நான்தான் முதல்வராகப் பதவி ஏற்றேன். சசிகலா உள்ளிட்ட ஒரு சிலரால்தான் கட்சி இரண்டாகப் பிரிந்தது. இருப்பினும் தேர்தல் ஆணையம் இரு பிரிவையும் ஒரு கட்சியாகத்தான் பார்த்தது. தற்போதும் நான் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறேன்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

எங்களது பிரச்னைகளை மறந்து மீண்டும் இருவரும் ஒன்றிணைந்து முதல்வர் பழனிசாமிக்கு உறுதுணையாகவும் இருக்கிறேன். அத்தோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன், தற்போது கூட, நாங்கள் ஒரே அணியாகச் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் ஆணையமும் எங்களை அங்கீகரித்துள்ளது. 11 சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க-வில் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தமக்கு எந்தவித உத்தரவையும் சபாநாயகர் பிறப்பிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தாம் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை’’ என்றும் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

மேலும்,`தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் தங்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்றும் ஓ.பி.எஸ் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள். அதேபோல், கொறடா உத்தரவு தொடர்பாக 122 எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், அந்தக் கடிதத்தில், `அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படவில்லை. எனவே, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இவ்வழக்கில் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளால் சபாநாயகர் தனபாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதைத்தொடர்ந்து, வழக்கை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். குறிப்பாக ஜூலை 1-ம் தேதிக்குள் 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனபால் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அடுத்த கட்டுரைக்கு