Published:Updated:

`நிர்வாகத்தில் தலையிட உங்களுக்கு அதிகாரமில்லை'- கிரண் பேடிக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் `ஷாக்'

ஜெ.முருகன்

``புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை” என்று கூறி ஆளுநர் கிரண் பேடியின் வழக்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்திருக்கிறது.

கிரண் பேடி
கிரண் பேடி

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 வருடங்களாக அதிகார மோதல் நீடித்துவருகிறது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், ``அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின்படிதான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியுமே தவிர, அவருக்கென பிரத்யேகமான சிறப்பு அதிகாரம் எதுவுமில்லை.

கிரண் பேடி
கிரண் பேடி

சட்டப்பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. சட்டப்பேரவையில் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடுசெய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்குச் சிறப்பு அதிகாரம் அளித்து, மத்திய அரசு 2017-ல் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தார், நீதிபதி ஆர்.மகாதேவன்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது, மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் புதுச்சேரி அரசு செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அதனால் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கிரண் பேடி - நாராயணசாமி
கிரண் பேடி - நாராயணசாமி

கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த வழக்கில், `` `இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது' என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைப்பதாக அதிரடியாகக் கூறியதோடு, அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் இருக்கும்" என்றும் தெரிவித்திருந்தது.

அதேபோல தனது அதிகாரத்தைப் பறிக்கும் விதமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் கிரண் பேடி செய்த மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை எதிர் மனுதாரராகச் சேர்க்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும், வரும் 7-ம் தேதி நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை செயல்படுத்தக் கூடாது” என்றும் உத்தரவிட்டிருந்தார்கள்.

நாராயணசாமி
நாராயணசாமி

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், கிரண் பேடியின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவரை சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி முறையிடவும் அறிவுறுத்தினர். அதேபோல அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டிருக்கின்றனர். இதன்மூலம் ஆளுநர் கிரண் பேடிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தையும், புதுச்சேரி மக்களின் உரிமையையும் நிலைநிறுத்தியிருக்கிறது.
- நாராயணசாமி

இதுகுறித்து விகடனுக்கு முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தையும், புதுச்சேரி மக்களின் உரிமையையும் நிலை நிறுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அங்குதான் மேல்முறையீடு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் கிரண் பேடி, சென்னை உயர் நீதிமன்றத்தைத் தவிர்த்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கிரண் பேடி
கிரண் பேடி

ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், இங்கு மேல்முறையீடு செய்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் எந்தவிதமான தடை உத்தரவையும் கொடுக்க முடியாது என்றும் கூறி, அவரது மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்திருக்கிறது. இது புதுச்சேரி மக்களுக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் கிடைத்த வெற்றி” என்றார்.