Published:Updated:

``எஸ்சி/எஸ்டி பிரிவினரை பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும்!’’ - திருமா சீற்றத்தின் பின்னணி

திருமாவளவன்

`திருமாவளவன் பேசியது சரிதான்’ என அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், பாஜக-வினர் மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவருகின்றனர். திருமாவளவன் மதவாதத்தைத் தூண்டுவதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

``எஸ்சி/எஸ்டி பிரிவினரை பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும்!’’ - திருமா சீற்றத்தின் பின்னணி

`திருமாவளவன் பேசியது சரிதான்’ என அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், பாஜக-வினர் மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவருகின்றனர். திருமாவளவன் மதவாதத்தைத் தூண்டுவதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

Published:Updated:
திருமாவளவன்

``எஸ்சி/எஸ்டி மக்கள் இந்துக்கள் இல்லை என அரசு பிரகடனப்படுத்த வேண்டும்'' என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியுள்ளது. ` மதரீதியான மோதலை உருவாக்கி, மதவாத அரசியலுக்கு வித்திடுகிறார் திருமாவளவன்' என பாஜக-வினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். தவிர, சமூக வலைதளங்களிலும் விசிக-பாஜக தொண்டர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதலாக இந்த விவகாரம் வெடித்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. `அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022’ என்று அழைக்கப்படும் இந்த மசோதாவின் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி-யுமான தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, ``எஸ்.சி/எஸ்.டி சமூகப் பிரிவினர் மதமில்லா, சாதியில்லா மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மதமும் இல்லை, சாதியும் இல்லை. ஆனால் இந்துப் பெரும்பான்மை என்று காட்டிக்கொள்வதற்காக எஸ்.சி/எஸ்.டி மக்களை இந்துக்கள் எனச் சான்றிதழ் வழங்கிவருகிறோம். இந்துக்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டிருக்கிறோம். இது அந்த மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பெரும்பான்மை எனக் காட்டிக்கொள்வதற்காக அவர்களை இந்துக்களாக இணைத்துக்கொண்டிருக்கிற நாம் அல்லது நமது அரசு, அவர்களைப் பொருளாதாரரீதியாக மேம்படுத்துவதற்கு, கல்வி- வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கு, அவர்களுக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்டுவருகிற இழிவுகளிலிருந்தும், வன்கொடுமைகளிலிருந்தும் பாதுகாப்பதற்குத் துளி அளவும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் இந்த 75 ஆண்டுக்கால சுதந்திர இந்தியா நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது.''
திருமாவளவன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் எஸ்சி/எஸ்டி மக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் விரும்பியபடி, பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று நான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். அல்லது இவர்கள் அனைவரையும் `பூர்வ பௌத்தர்கள்’ என்று அறிவிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள 25 விழுக்காட்டுக்கு மேலான எஸ்சி/எஸ்டி சமூகப் பிரிவினரை `பூர்வ பௌத்தர்கள்’ என்று அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்'' எனப் பேசியிருந்தார் திருமாவளவன்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

திருமாவளவன் பேசியது சரிதான் என அவருக்கு ஆதரவாகப் பலர் பேசிவரும் நிலையில் அவர் மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்துப் பேசும்போது,

`` திருமாவளவன் கடந்த பல வருடங்களாக இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்தபோதெல்லாம், `நானும் இந்துதான், என் அம்மாவும் இந்து, என்னைச் சுற்றியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்’ என்றுதான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென்று அந்தர்பல்டி அடித்து `பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்கள் அல்ல’ என்று கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திருமாவளவனுக்கு சரித்திரம் தெரியாமல், இந்தியா குறித்த எந்தவிதமான வரலாறும் தெரியாத காரணத்தினாலேயே இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். மனுதர்ம நூல் குறித்து அவர் பேசியபோதும், அது இந்து மதம் சார்ந்த நூல் என்பதைப்போல அவர் பேசியதும் தவறானது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மனுதர்ம நூலை எழுதியது சர் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர். அந்த நூலை எதிர்த்து அதைக் கொளுத்தினார்கள். வில்லியம் ஜோன்ஸ் எழுதிய அந்த நூலை எரிக்க நானும்கூட தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், வரலாறு என்னவென்று தெரியாமல் இல்லை தெரிந்துகொண்டு வேண்டுமென்றே இந்து மதத்தோடு அதைத் தொடர்புபடுத்தி அவர் பேசுவது யாரை மகிழ்விக்க என்பதுதான் என் கேள்வி. இப்போதும்கூட `பட்டியலின மக்கள் இந்துக்கள் அல்ல’ என்கிற முத்துக்களை உதிர்த்திருக்கிறார். `இந்து என்பது மதமே அல்ல’ என்பதை நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது ஒரு வாழ்வியல் முறை. அதனால்தான், யார் கிறிஸ்தவர், இஸ்லாமியர், பார்சி இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று அரசியலமைப்புச் சட்டத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து என்பது சாதிரீதியான அடையாளமோ, மதரீதியான அடையாளமோ அல்ல. அது பண்பாட்டுரீதியான அடையாளம்.

திருமாவளவன் வேண்டுமென்றே மதவாதத்தைத் தூண்டுவதாகத்தான் நான் கருதுகிறேன். போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டு, சாதிரீதியாக, மதரீதியாக மக்களைத் தூண்டிவிட்டு திருமாவளவன் உள்ளிட்டோர் அரசியலில் குளிர்காய நினைப்பது தவறு என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இந்து தர்மத்தில் எங்குமே சாதிரீதியிலான குறிப்புகள் கிடையாது. நம்மை சாதிரீதியாகப் பிரித்து பிளவுபடுத்தியது ஆங்கிலேலேயர்கள்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்களின் வழியில் திருமாவளவன் நடக்கிறார் என நான் நேரடியாகவே குற்றம்சாட்டுகிறேன்'' என்கிறார் தடாலடியாக.

திருமாவளவன்
திருமாவளவன்

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

`` `பூர்வ பௌத்தர்கள்’ என்று அறிவிக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் தற்போது முன்வைத்திருக்கும் கோரிக்கை புதிதல்ல. புரட்சியாளர் அம்பேத்கர், 1932, செப்டம்பர் 24 பூனா ஒப்பந்தத்துக்கு முன்பாகவே இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல, அவர்களைத் தனிப்பிரிவாக அறிவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷாரிடம் பேசியிருக்கிறார். இந்துக்கள், தலித்துகள் என அப்போதே இரு வகைப்படுத்தினார்கள். அதேபோல, அப்போதைய நாடாளுமன்றத்தில் 10 சதவிகிதம் தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் பேசியிருக்கிறார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்துக்கள் சார்பாக, மதன் மோகன் மாளவியாவும், தலித்துகள் சார்பாக அம்பேத்கரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, காந்தியார் தலித்துகளை இந்துக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனச் சொன்னபோது அம்பேத்கர் அதைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்களைவிட இந்துக்கள் என்பவர்கள் சிறுபான்மையாக இருக்கவும், தலித்துகளையும் காந்தியார் முயற்சியில் இந்துக்களாக இணைத்து இன்று பெரும்பான்மையாகக் காட்டுகிறார்கள். `நான்கு வர்ணங்களிலும் அடைபடாதவர்கள் தலித்துகள்’ என்கிற கோட்பாட்டு அடிப்படையில்தான் அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்து `தலித்துகள் இந்துக்கள் அல்ல’ என்பதை வலியுறுத்திவந்திருக்கிறார். அதேபோல. அயோத்திதாச பண்டிதரும் வரலாற்றுரீதியாக `தலித்துகள் பூர்வ பௌத்தர்கள், இந்துக்கள் அல்ல’ என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்துக்குள் அடைபட்டிருப்பதால், பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருகின்றனர். அதனால்தான், இந்துக்கள் என்பதிலிருந்து வெளியேற்றி பூர்வகுடி பௌத்தர்கள் அல்லது மதமற்றவர்கள் என்று அறிவியுங்கள் என எங்கள் தலைவர் பேசியிருக்கிறார். இந்து மதத்தில் இருப்பதால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவமானம்தான் மிஞ்சுகிறது. இது அரசியல்ரீதியாக இல்லை கோட்பாட்டுரீதியாக விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கும் கோரிக்கை.

வன்னி அரசு
வன்னி அரசு

எந்தவொரு மதத்துக்கு எதிராகவும் நாங்கள் இதுவரை நடந்துகொண்டதில்லை. நாங்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என யாரையும், எங்கேயும் தடுக்கவில்லை, எங்களைத்தான் மற்றவர்கள் தடுக்கிறார்கள். பார்ப்பனியம்தான் அப்படியொரு வேலையைச் செய்கிறது. நாங்கள் யாரையும் `ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் போடச் சொல்லியோ, மாட்டுக்கறி வைத்திருக்கிறார்கள் என அடித்துத் துன்புறுத்தவோ இல்லை. `நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு வர்ணங்களில்தான் நாலாயிரம் சாதிகள் இருக்கின்றன. பகவத் கீதையை பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லி சாதியக் கட்டமைப்பை, வருணாசிரமக் கட்டமைப்பை காப்பற்ற நினைப்பவர்கள் பாஜக-வினர்தான். அவர்கள் இந்து மதமல்ல என்றும் அதில் சாதி இல்லை என்றும் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது. தவிர, எங்கள் தலைவரின் வரலாற்று அறிவை நாட்டு மக்கள் அறிவார்கள், படித்த இளைஞர்கள் அறிவார்கள். இவர்கள் சான்றிதழ் தரவேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கோரிக்கை நியாயமானது. கோட்பாட்டுரீதியிலானது'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism