Published:Updated:

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு... ஒப்புக்கொண்டாரா ஸ்டாலின்?!

ஸ்டாலின்

`பொங்கல் தொகுப்பில் குளறுபடிகள் நடந்தது உறுதியானால் பொருள்கள் வழங்கிய நிறுவனங்கள் து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு... ஒப்புக்கொண்டாரா ஸ்டாலின்?!

`பொங்கல் தொகுப்பில் குளறுபடிகள் நடந்தது உறுதியானால் பொருள்கள் வழங்கிய நிறுவனங்கள் து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:
ஸ்டாலின்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பது ஆளும் கட்சிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் 2,500 ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு தி.மு.க ஆட்சியில் கரும்பு, ஏலக்காய், சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1,200 கோடி ரூபாய் செலவில், 2.15 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரத்தில் ஸ்டாலின் எதிர்பார்த்தது நல்ல பெயர்... ஆனால், கிடைத்திருப்பது என்னவோ கெட்ட பெயர்தான் என்று பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு

இது குறித்து நம்மிடம் பேசிய உணவு மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள், ``பொங்கல் பரிசுத்தொகுப்பை முதலில் ரொக்கமாகக் கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் முதல்வர் இருந்திருக்கிறார். அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மற்றும் துறை அதிகாரிகள்தான் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் கொடுக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளனர். அதனால் முதல்வரும் பொருள்கள் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அது சொதப்பி ஆட்சிக்கே அவப்பெயரைத் தேடித்தந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

இதற்காக டெண்டர் விட்டதிலிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. பார்ட்டி ஃபண்ட், பி.ஏ ஃபண்ட், அமைச்சர் தரப்பு ஃபண்ட் என தாறுமாறாகப் பிரிக்கப்பட்டு எஞ்சிய பணத்தில் பொருள்களே கொள்முதல் செய்யப்பட்டன. 21 பொருள்களுக்கும் மொத்தமாக டெண்டர் விடாமல் தனித்தனியாக விட்டனர். இந்தத் துறையில் அனுபவமே இல்லாத நிறுவனம் ஒன்று பினாமி பெயரில் 60 சதவிகித டெண்டரைப் பெற்றது. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் இந்த சப்ளையர்களிடம்தான் பொருள்களை வாங்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது. அமைச்சர் சக்கரபாணியின் உறவினரும், உதவியாளரும் சேர்ந்து இதை கவனித்தனர் என்கிற பேச்சும் அடிப்பட்டது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 4-ம் தேதி பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் விநியோகிக்கப்படத் தொடங்கின. இரு தினங்கள் சரியாக விநியோகிக்கப்பட்ட நிலையில், பின்னர் பொருள்களை நிரப்பிக் கொடுக்கும் பைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து வெல்லம் உருகியதாக புகார் வந்தது. ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் எடை குறைவாக இருந்ததாகவும் புகார் சொல்லப்பட்டது. இன்னும் சில பகுதிகளில் 21 பொருள்களுக்கு பதில் 17, 18 பொருள்கள்தான் இருந்ததாகவும் கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, இதில் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க அரசை வெளுத்து வாங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் ஸ்டாலின் மறுத்துப் பேசினார். அமைச்சர் சக்கரபாணியும் மறுத்துப் பேட்டி கொடுத்தார். ஆனால், விவகாரம் கைமீறிச் சென்றுவிட்டதைத் தெரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். பின்னர் பகிரங்கமாக இது பற்றி அறிவிப்பு வெளியிட்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். அப்போதுதான் எந்தெந்த நிறுவனங்கள் தரமில்லாத பொருள்களைக் கொடுத்தன என்பதை ஆராய்ந்து அந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

அனிதா டெக்ஸ்காட் நிறுவனர் சந்திரசேகர்
அனிதா டெக்ஸ்காட் நிறுவனர் சந்திரசேகர்

திருப்பூரைச் சேர்ந்த அனிதா டெக்ஸ்காட் நிறுவனம், கேதர் பண்டாரி என்ற நிறுவனம் மூலமாக 60% பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள்களைக் கொடுத்தது. அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தை சந்திரசேகர் என்பவர் நடத்துகிறார். மக்கள் நீதி மய்யத்தில் முன்பு பொருளாளராக இருந்தவர் இவர். சென்ற ஆட்சியில் கொரோனா காலத்தில் பி.பி.இ கிட் உள்ளிட்ட பொருள்களுக்கான டெண்டரை எடுத்தது அனிதா நிறுவனம்தான். வருமான வரித்துறை ரெய்டுக்கு ஆளான இந்த நிறுவனம்தான், இந்த தி.மு.க ஆட்சியிலும் பி.பி.இ கிட்களைத் தயாரித்துக் கொடுத்தது. உணவுத்துறையில் முன் அனுபவமே இல்லாத இந்த நிறுவனத்துக்குப் பெரும்பான்மையான பொங்கல் தொகுப்பு டெண்டர் வழங்கியதுதான் இத்தகைய மோசமான பெயரை தி.மு.க அரசுப் பெறக் காரணம்.

வெளியில் தெரிந்துவிட்டது என்பதால், அமைச்சர்களும், அதிகாரிகளும், நிறுவனங்களும் செய்த தவற்றுக்கு தேவையின்றி பொறுப்பேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பாடப் புத்தகத்தில் எடப்பாடி, ஜெயலலிதா படம் இருக்கட்டும் என்று சொல்லி எப்படிப் பெருந்தன்மையாக நடந்துகொண்டாரோ, அதே போன்றுதான் இந்த விவகாரத்திலும் பெருந்தன்மையுடன் நடந்திருக்கிறார் ஸ்டாலின். இது கிட்டத்தட்ட ஒப்புதல் வாக்குமூலம் போன்றதுதான்!" என்று முடித்தனர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது பற்றி தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் 5% எரர் என்பது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதி. ஒருவேளை தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இப்போது சொல்லவில்லை, முன்பிருந்தே முதல்வர் ஸ்டாலின் இதைத்தான் சொல்லிவருகிறார். 2.15 கோடி ரேஷன் அட்டைதாதர்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் மிகப்பெரிய திட்டம் என்பதால், எங்கோ சிறு தவறு நடக்கத்தான் செய்யும். முதல்வர் தனது வீட்டிலிருந்து ஒன்றும் எடுத்துக் கொடுக்கவில்லை, முறையாக டெண்டர் விட்டுத்தான் கொடுக்கப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனங்களோ, சப்ளையர்களோ, அதிகாரிகளோ சிறு தவறு செய்திருக்கலாம். வேறு ஆட்சியாக இருந்தால் மூடி மறைத்திருப்பார்கள். முதல்வர் இதற்குப் பொறுப்பாக மாட்டார் என்கிறபோதும் வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் மிகுந்த முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல ஒப்புக்கொண்டார் என்றே வைத்துக்கொள்ளுங்களேன். அதில் என்ன தவறு இருக்கிறது? பலகோடிப் பொருள்களில் சில இடங்களில் தவறு நடப்பது என்பது இயல்பு. இதை பொதுமக்களே ஏற்றுக்கொள்கிறார்கள்!" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism