Published:Updated:

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை

அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஸ்

துறை சார்ந்த அரசாணைகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது. மாணவர்களின் கல்வி விஷயங்களில் கவனம் செலுத்தவே முடியவில்லை

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை

துறை சார்ந்த அரசாணைகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது. மாணவர்களின் கல்வி விஷயங்களில் கவனம் செலுத்தவே முடியவில்லை

Published:Updated:
அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறையில் சர்ச்சைகள் எழும்போதெல்லாம், “அமைச்சர் எங்கப்பா காணோம்..?” என்று அதிகாரிகளே தேடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி.பி.ஐ வளாகத்துக்குள் நுழைந்தாலே அமைச்சரைப் பற்றிய புலம்பல் சத்தம்தான் அதிகமாகக் கேட்கிறது. “திட்டங்களை அறிவிப்பார்... உடனடியாக அதிலிருந்து பின்வாங்குவார்; கருத்துகளைச் சொல்வார்... அதிலிருந்தும் உடனடியாகப் பின்வாங்குவார். பள்ளி திறக்கும் தேதி முதல் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை வரை குழுப்பியடித்தார் அமைச்சர். மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கவேண்டிய லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட மாணவர்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை இன்னும் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. பல இடங்களில் வழங்க ஆரம்பிக்கவே இல்லை. சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் பதில் சொல்லவேண்டிய, நடவடிக்கை எடுக்கவேண்டிய அமைச்சரோ இதற்கெல்லாம் அலட்டிக்கொள்வதாகவே தெரியவில்லை” என்று கூப்பாடு போடுகிறது பள்ளிக்கல்வித்துறை வட்டாரம். என்னதான் நடக்கிறது அமைச்சரின் துறையில்? விசாரணையில் இறங்கினோம்...

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது இப்படியான விமர்சனங்கள் எழுவது புதிதல்ல. தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில், கலவரமெல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகே கள்ளக்குறிச்சிக்குச் சென்றார் அன்பில் மகேஸ். “மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தவர்கள்மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” என உத்தரவாதமும் அளித்தார். “நீதி வேண்டி நான்கு நாள்களாகப் போராட்டம் நடந்தது. இந்த உத்தரவாதத்தைக் கலவரம் ஏற்படுவதற்கு முன்னதாகச் சொல்லியிருந்தால், பிரச்னையே வந்திருக்காதே...” எனச் சமூக வலைதளங்களில் அமைச்சரைக் காய்ச்சி எடுத்தார்கள்.

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை

உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர் விழாவில், அன்பில் மகேஸ் கலந்துகொண்டது சர்ச்சையானது. ‘ஓர் அமைச்சர் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால், உதயநிதி ரசிகர் மன்றத்தின் பேனர்களில் அன்பில் மகேஸின் புகைப்படங்கள் இடம்பெறுவதும், தேசியக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காத அமைச்சர், உதயநிதியின் பட புரொமோஷன்களுக்குத் தீவிரம் காட்டுவதும் சரியா?’ என விமர்சனத் தீயைப் பற்றவைத்தார்கள் விமர்சகர்கள். `11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடரும்’, `மாணவர்களைத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது’ போன்ற அறிவிப்புகள், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் என அன்பில் மகேஸ் தொட்ட அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகின.

நியமன சர்ச்சை!

பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் பேசினோம். பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், “தமிழ்நாட்டிலுள்ள 37,554 அரசுப் பள்ளிகளில், 13,331 பணியிடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை 2,300 பேர் மட்டுமே தேர்வுசெய்யப் பட்டிருக்கிறார்கள். அறிவிப்பின்படி ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும், எப்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நடக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘கல்வி தொலைக்காட்சி’யை மேம்படுத்த சி.இ.ஓ என்கிற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டது. இந்தப் பொறுப்புக்கு மணிகண்டன் பூபதி என்பவர் தேர்வுசெய்யப்பட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி அறிவிப்பும் வெளியானது. இந்தச் சூழலில், ‘மணிகண்டன் பூபதி வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர். அவரை எப்படிப் பணியமர்த்தலாம்?’ எனப் பெருமளவில் விமர்சனங்கள் எழுந்தன. மணிகண்டன் பூபதியோ ‘நான் எந்தச் சித்தாந்தமும் கொண்டவனல்ல. பல ஊடகங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். அதன்பேரிலேயே, கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டேன்’ என்று விளக்கமளித்திருக்கிறார். சர்ச்சை ஓயாததால், சி.இ.ஓ நியமனத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

சைக்கிள் முதல் லேப்டாப் வரை... தேங்கிக்கிடக்கும் பணிகள்!

அரசுப் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகம், நோட்டு, பை, காலணி, புவியியல் வரைபடம், க்ரேயான்ஸ், கலர் பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ், ஷூ உள்ளிட்ட 13 வகையான கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கிவருகிறது அரசு. இந்த உபகரணங்களைப் பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்குள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் வழங்கவில்லை. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நான்கு செட் சீருடைகளை அரசு வழங்குவது வழக்கம். முதல் செட் சீருடை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த செட் சீருடைகள் தயாரிப்புக்கான பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. 11-ம் வகுப்பு பயிலும் 6.35 லட்சம் மாணவர்களில், இதுவரை 15 சதவிகிதம் பேருக்குக்கூட சைக்கிள் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதற்கான கொள்முதல் பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை. இதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முடிந்த பின்னர்தான் லேப்டாப் கையில் கிடைக்கும் சூழல் உள்ளது.

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் 1.81 லட்சம் தன்னார்வலர்கள் பணியாற்றிவருகிறார்கள். அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யாததால், மூன்று, நான்கு மாதங்கள் சேர்த்துத்தான் ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. துறைக்குள் இத்தனை பிரச்னைகள் நிலவுகின்றன. ஆனால், எதற்கும் சுமுகமான, விரைவான தீர்வு காண அமைச்சர் அன்பில் மகேஸ் முயல்வதில்லை. 15 நாள்களுக்கு ஒரு முறைதான் துறையின் செயல்பாடுகளை கவனிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார். பள்ளிக்கல்வியின் ஓட்டுமொத்தப் பணிகளை ஆய்வுசெய்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சருக்கு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அந்த அறிக்கைகளைக்கூட அவர் முழுமையாகப் படிப்பதாகத் தெரியவில்லை. அவரின் அலுவலக மேசையிலேயே ஏராளமான அறிக்கைகள் உறங்கிக்கிடக்கின்றன. உண்மையைச் சொல்வதனால், துறை சார்ந்த பணிகளில் அவரின் கவனமே இல்லை” என்றனர்.

சமீபகாலமாக, பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் ஆசிரியர்களுக்கும் மன அழுத்தத்தைக் கூட்டியிருக்கின்றன என்கிறார்கள். “துறை சார்ந்த அரசாணைகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது. மாணவர்களின் கல்வி விஷயங்களில் கவனம் செலுத்தவே முடியவில்லை” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் ஆசிரியர்கள்.

அமைச்சர் ஃபெயில்! - சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை

அழுத்தத்தில் ஆசிரியர்கள்... அந்தரத்தில் பயிற்சி மையம்... அமைச்சர் ஃபெயில்!

நம்மிடம் பேசிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், “தங்களது பாடப் பணிகள் குறித்து, வாரம் ஒரு முறை ஆசிரியர்கள் குறிப்பு எழுதுவது வழக்கமாயிருந்தது. அதை, ‘ஒவ்வொரு பாட வேளைக்கும் எழுத வேண்டும்’ என அரசாணை போடப்பட்டுள்ளது. இதுபோக, மாணவர்களின் செயல்பாடுகள், அவர்களின் விளையாட்டுத்திறன், வருகைப் பதிவேடு என ஒவ்வொன்றையும் ஆன்லைனில் தினமும் பதிவேற்றச் சொல்கிறார்கள். இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது போய்விடுகிறது. அன்றாடப் பணிகளைச் செய்வதற்குக்கூட அரசாணை வெளியிட்டு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், கற்பிக்கும் நேரம் குறைந்துபோய்விட்டது. கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களின் குறைகளைக் கேட்காமல், குறைகளை இ-மெயிலில் அனுப்பச் சொல்கிறார்கள். எங்கள் மன அழுத்தத்தை கம்ப்யூட்டர் தீர்த்துவைத்துவிடுமா?

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், 12,000 பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை தி.மு.க அரசு மறந்துவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸிடம் மனு அளித்தபோது, ‘படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என அவரும் நம்பிக்கையளித்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. வெறும் 10,000 ரூபாய் சம்பளத்தை வைத்து பகுதி நேர ஆசிரியர்கள் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள்?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குப் பயிற்சி வழங்கும் திட்டம், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு வைத்து, அதன் மூலமாக ஐந்து மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாவட்ட அளவில் நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆனால், நடப்பாண்டில் நீட் பயிற்சிக்கான மாணவர் தேர்வுப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகளைக்கூடச் சரியாக நடத்தவில்லை. இந்த அலட்சியத்தின் விளைவு, இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் நீட் தேர்வு முடிவுகளில் அம்பலமாகும். தொடர்ச்சியான செயல்பாடின்மையால், குழப்பமான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் ஓர் அமைச்சராக அன்பில் மகேஸ் ‘ஃபெயில்’ ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று கொதிக்கிறார்கள்.

“துறையில், தான் ‘ஃபெயில்’ ஆனதாக வரும் விமர்சனங்களையெல்லாம் அன்பில் மகேஸ் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வருக்கும் தனக்குமான நெருக்கத்தில், உதயநிதிக்கும் தனக்குமான நட்பில் இந்த விமர்சனங்களெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம்போலக் காணாமல்போய்விடும் என்றே நினைக்கிறார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் வலம்வருவதில் யாருக்கும், எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், அந்தப் பெருமிதத்தில் பள்ளிக்கல்வித்துறையைச் ‘சொதப்பல்துறை’யாக மாற்றுவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல” என்கிறார்கள் தி.மு.க சீனியர்களே.

“அரசியல் காரணங்களால் எதிர்க்கிறார்கள்!”

பள்ளிக்கல்வித்துறையிலிருக்கும் சிக்கல்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸிடம் விளக்கம் கேட்டோம். “கள்ளக்குறிச்சி கலவரம் தொடங்கும்போதே, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கலவரம் நடந்தபோதே அந்தப் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டேன். ஆனால், பள்ளிக்கல்வித்துறையை மீறி பல துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரமாகி விட்டதால், மறுநாள் மூத்த அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் அந்தப் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியில் ஆய்வுசெய்து இறந்த மாணவிக்கு நீதி கிடைக்கவும், அதேநேரத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 3,000 மாணவர்களின் நலனுக்காகவும் செயல்படத் தொடங்கினோம்.

உதயநிதி சம்பந்தப்பட்ட சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே நான் கலந்துகொள்வதாக விமர்சிக் கிறார்கள். சமூகநீதிக்கு ஆதரவான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட விழாவில் மட்டுமே கலந்துகொண்டேன். சமூகநீதி என்றாலே அவர்களுக்குத்தான் பிடிக்காதே... கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பள்ளிக் குழந்தைகளுக்காகவும், பள்ளிகளுக்காகவும் எண்ணற்ற உதவிகளைச் செய்துவருகிறார் உதயநிதி.

தற்காலிகப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்த சில நாள்களில், உயர் நீதிமன்றங்களில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்னர் தற்காலிகப் பணியிடங்களுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் செய்து முடித்து வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். கல்வி டி.வி சி.இ.ஓ நியமன விவகாரத்தையும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற விவகாரத்தையும் அரசியல் காரணங்களால் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

2014-லிருந்து 2021-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு வருடமும் பல மாதங்கள் தாமதமாகத்தான் கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், கொரோனா பொருளாதார நெருக்கடி களுக்குப் பின்னரும்கூட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரையில், 1,039 கோப்புகளில் கையெழுத்திட்டு நிறைவேற்றியிருக்கிறேன்” என்றார்.

‘75 லட்சம் மாணவர்கள்... அதாவது, நாளைய தமிழ்நாட்டின் முகமாக மாறப்போகிறவர்களின் இதயத்தையும் மூளையையும் தீர்மானிக்கும் துறை, பள்ளிக்கல்வித்துறை. அதைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர் இத்தனை குழப்பமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் தொடர்ச்சியாக இயங்குவது ஒட்டுமொத்தமாகச் சமூகத்தையே பாதிக்கும்’ என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். விரைந்து மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, ஆசிரியர்களின் குமுறல்களுக்குச் செவி கொடுத்து, மிகச் சிறப்பு வாய்ந்த ‘பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்’ எனும் தன் பொறுப்பை இனியேனும் உணர்ந்து செயல்படுவாரா அன்பில் மகேஸ் பொய்யாமொழி?