Published:Updated:

திருவண்ணாமலை: கொட்டும் மழையில் ஒலிம்பியாட் பேரணி; குடையில் மக்கள் பிரதிநிதிகள், மழையில் மாணவர்கள்!

ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியில், மாணவ - மாணவியர் மழையில் நனைய வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: கொட்டும் மழையில் ஒலிம்பியாட் பேரணி; குடையில் மக்கள் பிரதிநிதிகள், மழையில் மாணவர்கள்!

திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியில், மாணவ - மாணவியர் மழையில் நனைய வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருவண்ணாமலை

187 நாடுகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்குபெறும் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழகத்தில் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட தொடக்க விழாவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது. எனவே, இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு சதுரங்க போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல், ஒலிம்பியாட் ஜோதியும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணமாகி கொண்டிருக்கிறது.

ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி - மழையில் சிலர் குடை ஏந்திய நிலையில்
ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி - மழையில் சிலர் குடை ஏந்திய நிலையில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில், நேற்றைய தினம் (26.07.2022) ஒலிம்பியாட் ஜோதி திருவண்ணாமலை மாவட்டத்தை வந்தடைந்தது. அதற்கு முன்பாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்திக்கொண்டு திருவண்ணாமலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடத்துவது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், 25-ம் தேதி இரவு முதல் திருவண்ணாமலை நகரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெறும் நாளான 26-ம் தேதி அன்று காலையிலும் நகரில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்படுமா... என பொதுமக்கள் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், திட்டமிட்டபடியே பேரணியை நடத்துவதற்கான வேலைகள் விறுவிறுத்தன. மாணவ - மாணவியர் திருவண்ணாமலைக்கு வாகனங்கள் மூலம் அழைத்துவரப்பட்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டும் மழையில் இறக்கி விடப்பட்டனர். இப்படியாக ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இந்த ஒலிம்பியாட் ஜோதி பேரணியை, நேற்று (26th) காலை 8 மணி அளவில் அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார். வழி நெடுகிலும் மேள தாளங்கள், கரகாட்டம், செண்டை மேளம் உட்பட பல்வேறு கலை நிகழ்சிகளுடன் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சதுரங்க கட்டம் - திருவண்ணாமலை
சதுரங்க கட்டம் - திருவண்ணாமலை

பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணி செல்ல செல்ல ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் உட்பட பலரும் பேரணியை பின்தொடர்ந்து செல்ல வேண்டும். இப்படியாக கொட்டும் மழையில் பெரியார் சிலை, காந்தி சிலை, ராஜகோபுரம், பூத நாராயண கோயில் உள்ளிட்ட முக்கிய பாதைகளின் வழியாக 5 கி.மீ தூரம் நடைபெற்ற பேரணி, அண்ணா நுழைவு வாயில் அருகே நிறைவுபெற்றது. ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து, அண்ணா நுழைவாயில் அருகே ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மாணவ - மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்போதும் மாணவர்கள் கொட்டும் மழையில் சுமார் ஒரு மணிநேரம் வரை நனைந்தபடி, குளிரில் நடுங்கி காத்துகிடந்தனர். ஆனால், அமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் என பெரும்பாலானோர் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றைக் கொண்டு தங்களை தற்காத்துக்கொண்டனர். ஒலிம்பியாட் ஜோதி பேரணி நிகழ்ச்சியை மழை நின்ற பின்புகூட நடத்தாமல், பள்ளி மாணவர்களை கொட்டும் மழையில் வரவழைத்து அந்தப் பேரணி நடத்தப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஆர்.ஓ மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி.
பி.ஆர்.ஓ மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி.

ஒலிம்பியாட் ஜோதி கொண்டு செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாணவ மாணவியரைக் கொட்டும் மழையில் ஈடுபடுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷை தொடர்புகொள்ள முயன்றபோது அழைப்பு இணைக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு பேசினோம். "மழை நின்ற பிறகுதான் ஆரம்பித்தோம். மாணவர்கள் பங்கேற்கும் போது மழையே இல்லையே! யார் சொன்னது, அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, எந்த மாணவர்கள் நனைந்தார்கள்..!" என மழுப்பலான பதிலோடு முடித்துக்கொண்டார்.

ஆனால், இதே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், இந்த ஒலிம்பியாட் பேரணி நிகழ்ச்சி குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் எ.வ.வேலு, நிகழ்ச்சியை துவங்கி வைத்து கொட்டும் மழையில் ஒலிம்பியாட் ஜோதியை கையில் ஏந்தியபடி 5 கி.மீ வரை நடந்தே சென்று பேரணியில் பங்கேற்றார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.