Published:Updated:

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய முறை `சட்டவிரோதம்’ - பிரியங்கா காந்தி

ஆ.பழனியப்பன்

ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்கிய முறை, ‘முற்றிலும் சட்டவிரோதமானது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார், பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பா.ஜ.க அரசு பிரித்துள்ள விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள் கருத்துவேறுபாடு நிலவிவருகிறது.

காஷ்மீர் வரைபடம்
காஷ்மீர் வரைபடம்

காங்கிரஸ் தலைவர்களில் பலர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடாவான புவனேஸ்வர் கலிடா, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து தன் பதவியையே ராஜினாமா செய்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோதிர் ஆதித்யா சிந்தியா, பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் முதன்முறையாக இன்றைக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

``ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானவை. அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை, இங்கு பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தைக் காப்பதற்காக காங்கிரஸ் கட்சி எப்போதுமே போராடும்” என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

``விமானம் வேண்டாம், அனுமதியுங்கள், நானே வாறேன்!'- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்

இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கும் மக்களைச் சந்திப்பதற்கும் அனுமதித்தால், தாமும் எதிர்க் கட்சித் தலைவர்களும் ஜம்மு - காஷ்மீர் வருவதற்குத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.