Published:Updated:

``விவசாயத்தை வாழவைக்க வேண்டுமென்றால், 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கணும்!" - சீமான்

சீமான்

``தமிழகத்திலுள்ள இந்த இரண்டு கட்சிகளிடையே பெரிய மாறுதலை எதிர்பார்க்க முடியாது. இருவரும் ஓட்டுக்குக் காசு கொடுப்பார்கள், லஞ்சம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். ஒரு கொடியில் அண்ணா இருப்பார்... மற்றொன்றில் இருக்க மாட்டார்... அவ்வளவுதான்" - சீமான்.

``விவசாயத்தை வாழவைக்க வேண்டுமென்றால், 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கணும்!" - சீமான்

``தமிழகத்திலுள்ள இந்த இரண்டு கட்சிகளிடையே பெரிய மாறுதலை எதிர்பார்க்க முடியாது. இருவரும் ஓட்டுக்குக் காசு கொடுப்பார்கள், லஞ்சம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். ஒரு கொடியில் அண்ணா இருப்பார்... மற்றொன்றில் இருக்க மாட்டார்... அவ்வளவுதான்" - சீமான்.

Published:Updated:
சீமான்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கோலியனூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதுதான் வெற்றி. மாறாக சமரசம் செய்துகொண்டு, அவரோடு இவரோடு சேர்ந்துகொண்டு, வாக்குகளுக்கு காசு கொடுத்துப் பெறுவது வெற்றி கிடையாது. நாங்கள் அடுத்த தேர்தல் வெற்றியை எண்ணி நிற்கிறோம். நிரந்தரமான வெற்றியைத் தேடி போராடிக்கொண்டிருக்கிறோம். வாக்கு சதவிகிதத்தின்படி வளர்ந்துகொண்டுதானே இருக்கிறோம்... 'அவை சீட்டாக மாறவில்லையே?' என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சீட்டைப் பெற வரவில்லை, நாட்டைக் கைப்பற்ற வந்திருக்கிறோம்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்
செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்

இப்போது ஆட்சி மாற்றம் என்பது, எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலின் வந்திருக்கிறார் அவ்வளவுதானே... `நீட்' டுக்கு எதிராக நம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை, `நாங்கள் ஏற்கவேண்டியது இல்லை' என்று கூறுகிறார்கள் மத்தியில். அப்போ... `நீங்க மதிக்கலைன்னா, நீங்க கொண்டு வருகின்ற சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்?' என இவர்கள் சண்டை போட வேண்டும். மதிக்க முடியாது என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரியெல்லாம் இவங்க சண்டை போட மாட்டாங்க. ஆனால் நாங்க போடுவோம், பொறுத்திருந்து பாருங்க. நாம் தமிழர் வேட்பாளர்களை இந்த உள்ளாட்சித் தேர்தலின்போது வாபஸ் பெறும்படி கூறியதும், மிரட்டப்படுவதும் உண்மைதான். செஞ்சி தொகுதியில் ஒன்றியச் செயலாளரை கடத்திச் சென்று வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள் என்கின்றனர். காவல்துறை, மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் புகார் கொடுக்கிறோம். ஆனால் யாரும் புகாரை எடுப்பதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாவட்ட ஆட்சியர்களை நியமித்தது அரசு. அப்போது அவர்களுக்கு ஆதரவாகத்தானே இயங்குவார்கள்... இந்தச் செயல் இந்த ஆட்சியில் என்பதல்ல... எந்த ஆட்சி வந்தாலும் நடக்கும். அதனால்தான் இவர்களை ஒழிக்க நினைக்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையும் நேர்மையுமாக தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லையென்றால்... நீங்கள் என்ன நிர்வாகம் செய்கிறீர்கள்... அனைவருக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும் அல்லவா! சின்னப் பசங்களாகிய எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?

தொடர்ந்து வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டுக் குடிகளுக்கும் எதிரானது.

சீமான்
சீமான்

`இந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றால்... கூட்டிணைவு நிறுவனங்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம்’ என்று அமைச்சரே கூறுகிறார். அப்போ, இது யாருக்கான திட்டம் எனப் பார்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் என் தம்பிகள், தங்கைகள் வெற்றிபெற்றால் ஊழலற்ற, லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை கிராமங்களில் செய்யலாம்.

விவசாயத்தை வாழவைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கணும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்கு தனி பட்ஜெட்... அதனால் பயன் என்ன வரப்போகிறது... அது ஏமாற்றுதானே... 100 நாள் வேலை திட்டம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன... எத்தனை மரங்களி நடவு செய்திருக்கிறீர்கள்... ஏரி, குளங்களைத் தூர்வாரியிருக்கிறீர்கள்... சாலையைச் சீரமைத்திருக்கிறீர்கள் என்றால்... ஒண்ணும் கிடையாது. கூட்டமாகப் பல்லாங்குழி ஆடுவது, சீட்டாடுவது, புரணி பேசுவது... இதற்கு தண்டமாக ஒரு சம்பளம். ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டில், மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றி வேடிக்கை பார்ப்பது என்ன அர்த்தம். நீங்கள் ஊதியமாக 100, 200 ரூபாய் தரலாம். ஆனால், அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டைக்காய் எங்கிருந்து வரும்... காசைப் பிய்த்துச் சாப்பிட முடியுமா? வறுமையை போக்க வேண்டுமென்றால்... வேளாண்மை செய்யணும்.

100 நாள் வேலை
100 நாள் வேலை

இங்குள்ள இரண்டு கட்சிகளைப் பொறுத்தவரையில் ஆள் மாறுமே தவிர ஆட்சி மாறாது. இவங்க வந்தாலும் ஓட்டுக்குக் காசு, அவங்க வந்தாலும் ஓட்டுக்குக் காசு. இரண்டு பக்கமும் லஞ்சம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். டாஸ்மாக் இயங்கும். அதனால் பெரிய மாறுதலை எதிர்பார்க்க முடியாது. ஒரு கொடியில் அண்ணா இருப்பார், மற்றொன்றில் இருக்க மாட்டார் அவ்வளவுதான்" என்றார்

`இந்து இல்லாமல் தமிழ் எங்கே வளர முடியும்' என்று ஹெச்.ராஜா பேசியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், ``சைவத்துக்கும், தமிழுக்கும்தான் சம்பந்தம் உள்ளது. 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் இந்துக்களா... அவர் என்னுடன் பேசுவதற்கு தயாரா... தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இன்று பனைவிதைகளை நடுவோம், படித்த இளைஞர்களை முனைவர்களாக கொண்டு வருவோம் என்கிறார்கள். அன்று நாங்கள் சொல்லும்போது சிரித்தார்கள். இப்போ 'மேட் இன் தமிழ்நாடு' என்கிறார்கள். ஒரு குண்டூசியைக்கூட நாம உற்பத்தி பண்ணுவது கிடையாது. தயாரிப்பு முழுக்க மதுபானங்கள்தான். இந்தியாவே 'மேக் இன்' திட்டத்தைத்தான் வைத்திருக்கிறது. இதைத்தான் நாங்கள் 'வாடகைத்தாய் பொருளாதாரக் கொள்கை' என்கிறோம். அது தகர்க்கப்பட வேண்டும். இந்த நாட்டில் காரை ஏற்றுமதியும், சோறு இறக்குமதியும் செய்றீங்க. தற்சார்பு என்பது மிக அவசியமானது.

சீமான் - எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
சீமான் - எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

ராணுவ தளவாடங்களை வெளிநாட்டிலிருந்து வாங்குகிறீர்கள். 'எங்கே ஃபைல்' என்று நீதிமன்றம் கேட்டால், காணவில்லை என்கிறீர்கள். ஒரு ஃபைலைக்கூடப் பாதுகாக்கத் தெரியாதவர்கள்... எப்படி நாட்டைப் பாதுகாப்பார்கள். தேசத்தை நேசிப்பவரை துரோகி என்றும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவனை தலைவன் என்றும் கூறிக்கொள்வது. இது ஒரு போக்கா! ராணுவ ரகசியம் இங்கு எங்கே இருக்கிறது? அதானி துறைமுகத்தில் தற்போது 21,000 கோடி ஹெராயின் வந்திருக்கிராது. அதற்கு இரண்டு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும்தான் இதற்கெல்லாம் காரணமா... எந்தக் கேள்விக்கு இவர்கள் பதில் கூறியிருக்கிறார்கள்?" என்றார் காட்டமாக.