உலகில் ஆண்ட பெருமை வரலாறுகளை எல்லாம் ஆண்களே ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பெண் ஆளுமைகள் வந்து போயிருக்கிறார்கள். மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு அரசியலமைப்பின் மூலம் அமல்படுத்தப்படும் ஆட்சியிலும் அதே நிலைதான் நீடித்து வந்திருக்கிறது. அதிபர், பிரதமர் போன்ற நாட்டின் உச்சபட்ச பதவிகளின் அதிகாரங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் பெண்களை அரியணை ஏறுவதில் பல நாடுகள் தயக்கம் காட்டியே வந்திருக்கின்றன.
உலகில் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறிய வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் தற்போது வரை ஒரு பெண்ணை கூட அதிபர் நாற்காலியை நெருங்கவிடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கே பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது ஒட்டுமொத்த உலகமும், இந்தியப் பெருங்கடலில் இலை போல் மிதந்துகொண்டிருக்கும் இலங்கைத் தீவை உற்று நோக்கியது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் திரௌபதி முர்மு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகளாக, முதன்முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரிக்க இருக்கிறார். அதுவும் ஆண்டாண்டு காலமாக ஜமீன்களாலும் ஆங்கிலேயர்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட சாந்தாளி பழங்குடி இனத்தில் இருந்து வந்த இவர், இந்திய தேசத்தின் இமய உச்சத்தை தொட்டிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

கணவனை இழந்து அடுத்தடுத்து மகன்களையும் பறிகொடுத்தாலும் அரசியல் வேட்கையை கைவிடாமல் தனி ஆளாகப் போராடி அரசியலில் உயர்ந்திருக்கிறார் முர்மு. இந்திய தேசத்தின் முதல் பழங்குடி ஆளுநர் என்ற வரலாற்றுச் சாதனையை ஒரு பெண்ணாக நிகழ்த்திக் காட்டிய முர்மு, இன்றைக்கு நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார். இந்த உயரத்தை அவ்வளவு எளிதில் அடைந்து விடவில்லை.
1997-ம் ஆண்டு ராய்ரங்பூர் பகுதியில் உள்ள ஒரு வார்டில் பா.ஜ.க கவுன்சிலராக முதல் அடியை எடுத்து வைத்த முர்மு 2002-ல் ராய்ரங்பூர் சட்டமன்ற உறுப்பினரானார். ஒடிசாவின் போக்குவரத்து அமைச்சராக 2 ஆண்டுகளும் மீன்வளத்துறை அமைச்சராக 2 ஆண்டுகளும் பதவி வகித்திருக்கிறார். ஒடிசாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற விருதை 2007-ம் ஆண்டு பெற்றார். இந்தியாவின் முதல் பழங்குடி ஆளுநர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற வரலாற்றுச் சாதனையை கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கினார். நேர்மையாகவும் திறம்படவும் மக்கள் தொண்டாற்றி வந்த முர்மு இன்றைக்கு குடியரசுத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் பெண் குடியரசு தலைவர் எண்ணிக்கையை இன்று இரண்டாக உயர்த்தியிருக்கிறார் நம் முர்மு. இதுவரை 15 குடியரசு தலைவர்களை கண்டிருக்கும் நம் நாட்டில், 12வது குடியரசு தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவர் நமக்குக் கிடைத்தார். இப்போது இரண்டாவதாகக் கிடைத்திருக்கிறார் திரௌபதி முர்மு.
அரசவை உயர் பதவிகளில் பாலின இடைவெளி குறைப்பதற்கான தூரம் குறையட்டும், பயணம் தொடரட்டும்.