Published:Updated:

சாலைமார்க்கமாக சீன அதிபர் பயணம்!- சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

ஜின்பிங் பயன்படுத்தும் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தில் 4 கார்கள் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தது.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

சென்னையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை மற்றும் நாளை மறுநாள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இது தொடர்பாக, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் மற்றும் ஜி.எஸ்.டி சாலைகள் இரண்டு நாள்கள் மூடப்படும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழிப் பயணத்தின் போது, ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆய்வு
ஆய்வு

எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12.10.2019 அன்று காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.

மேலும், மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழிப் பயணத்தின் போது போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்திலிருந்து, கத்திப்பாரா, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு காரணமாக சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள், இந்தியா - சீனா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாமல்லபுரத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னைக்கு விமானம் மூலம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது பிரத்யேக கார் மூலமாகவே மாமல்லபுரம் செல்கிறார். ஜின்பிங் பயன்படுத்தும் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தில் 4 கார்கள், அதிபருக்கு தேவையான பொருள்கள், போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தது. இந்த கார்தான் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

இருநாட்டுத் தலைவர்களுக்கான குண்டு துளைக்காத கண்ணாடி அறை, கலைநிகழ்ச்சிகளுக்கான மேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாமல்லபுரத்தில் மட்டும் 2 ஐ.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 ஏ.எஸ்.பி-க்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குதிரைகள் மூலமாக காவலர்கள் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, கடலிலும் இந்தியா - சீனா போர்க்கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியுள்ளவர்களின் விவரத்தைச் சேகரிக்கும் போலீஸார், புதிதாக யாரேனும் அறை எடுத்துத் தங்கினால் உடனடியாக அவருடைய விவரங்களை தெரிவிக்குமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.