Published:Updated:

குடியரசுத் தலைவரின் கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நாளை குடியரசுத் தலைவர் செல்லும் வழியில், போலீஸார் இன்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடத்தினர். மேலும், அந்தப் பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

Published:Updated:

குடியரசுத் தலைவரின் கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

நாளை குடியரசுத் தலைவர் செல்லும் வழியில், போலீஸார் இன்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடத்தினர். மேலும், அந்தப் பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் வந்திருக்கிறார். நேற்று கொச்சியிலுள்ள ஐ.என்.எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக நாளை கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்துக்கு வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து கார் மூலம் அருகிலுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்குச் செல்கிறார். பின்னர் தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் குடியரசுத் தலைவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடுகிறார்.

கன்னியாகுமரியில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரியில் போலீஸ் சோதனை

பின்னர் படகு மூலம் கரைக்குத் திரும்பும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திலுள்ள ராமாயண கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிடுகிறார். மேலும், அங்குள்ள பாரதமாதா கோயிலில் வழிபடுகிறார். அதைத் தொடர்ந்து, கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். நாளை குடியரசுத் தலைவர் செல்லும் வழியில், போலீஸார் இன்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடத்தினர். மேலும், அந்தப் பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீஸார்
பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீஸார்

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை கன்னியாகுமரி நகர பகுதியில் ட்ரோன் கேமரா பறக்க போலீஸார் தடைவிதித்திருக்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் மூன்று மணிநேரம் கன்னியாகுமரி கடற்கரை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக காலை 8 முதல் மாலை 5 மணிவரை விவேகானந்தர் பாறைக்கு படகு இயக்கப்படும். நாளை காலை 8 முதல் 11 மணி வரை... அதாவது, குடியரசுத் தலைவர் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் நேரம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.