Published:Updated:

அயோத்தி தீர்ப்பும் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய நிலையும்!

அயோத்தி தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி
அயோத்தி

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வந்தன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் இன்று அதன் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அயோத்தி
அயோத்தி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி மட்டும் சுமார் 12,000 துணை ராணுவப்படையினரும் 4,000 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி எந்த அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக, அயோத்தி சர்ச்சையான நிலத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இணையம், தகவல் தொடர்பு சேவைகள் போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் முழுவதும் பொது இடத்தில் நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் சேர்ந்து நடக்கவும் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
ANI

உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று முதல் வரும் திங்கள் கிழமை வரை அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி, லக்னோ போன்ற பகுதிகளில் ரோந்துக்காகவும் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு செல்லவும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், லக்னோவில் ஒரு விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

`40 நாள்கள் தொடர் விசாரணை; 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு?' - அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு

அயோத்தியில் உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப்பட்டு அனைத்திலும் தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள 78 முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பிற வழிப்பாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் விடிய விடிய, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலிருந்து நேபாளம் செல்லும் எல்லை மூடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
ANI

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று, அங்கு டி.ஜி.பி மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் இணைந்து மாநில பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்கள் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு துணை ராணுவப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.