36 சிறிய தீவுகளைத் தன்னகத்தேகொண்டது லட்சத்தீவு. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்துவரும் லட்சத்தீவில், பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசும் இஸ்லாமியர்கள். கடந்த டிசம்பர் மாதம், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை நியமித்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. இவர் பதவியேற்ற நான்கே மாதங்களில் பல அதிரடிச் சட்டங்களைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டங்கள் அனைத்துமே அங்கு வசித்துவரும் மக்களுக்கு எதிரானவை என்பதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
வெளிநபர்களுக்கு நிலத்தை விற்பது, காரணமின்றி கைதுசெய்வது, மாட்டிறைச்சிக்குத் தடை, மதுக்கடைகள் திறப்பு என பிரஃபுல் படேல் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களையும், பிரஃபுல் படேலையும் லட்சத்தீவிலிருந்து நீக்க வேண்டுமென இந்தியா முழுவதும் குரல்கள் எழுந்தன.

தேசத்துரோக வழக்கு!
இந்தநிலையில், மலையாள நியூஸ் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவைச் சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தான் கலந்துகொண்டு பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஆயிஷா, ``பயோ ஆயுதங்கள்கொண்டு, மத்திய அரசு லட்சத்தீவில் கொரோனா நோய்த் தொற்றைப் பரப்பிவருகிறது. லட்சத்தீவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையே இருந்தது. ஆனால், இப்போது தினசரி 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பிரஃபுல் படேல் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவுதான் இது'' என்று பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த லட்சத்தீவு பா.ஜ.க-வினர் ஆயிஷாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். லட்சத்தீவு பிரிவின் பா.ஜ.க தலைவர் அப்துல் காதர் ஹாஜி, ``ஆயிஷா பேசியது தேசத்துக்கு எதிரானது'' என்று சொல்லி அவர்மீது லட்சத்தீவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருக்கிறது லட்சத்தீவின் கவரத்தி நகர் காவல்துறை.

ஆயிஷாவின் ஃபேஸ்புக் பதிவு!
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,``டி.வி சேனல் விவாதத்தில் `பயோ ஆயுதம்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருந்தேன். படேலையும் அவரது கொள்கைகளையும்தான் நான் `பயோ ஆயுதம்’ என்று கூறினேன். படேல் மற்றும் அவரது பரிவாரங்கள் மூலம்தான் கொரோனா நோய்த் தொற்று லட்சத்தீவில் பரவியது. நான் படேலைத்தான் பயோ ஆயுதத்தோடு ஒப்பிட்டேனே தவிர, அரசாங்கத்தையோ நாட்டையோ அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பதிவிட்டிருக்கிறார் ஆயிஷா. மற்றொரு பதிவில்...
என்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மைதான் எப்போதும் வெல்லும். பிறந்த நிலத்துக்காக நான் தொடர்ந்து போராடுவேன். நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம். என் குரல் இப்போது இன்னும் சத்தமாக இருக்கும்.ஆயிஷா சுல்தானா
யார் இந்த ஆயிஷா?
ஆயிஷா சுல்தானாவுக்கு நடிகை, மாடல், சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள் உண்டு. அதில் தற்போது புதிதாக இணைந்திருக்கும் முகம் இயக்குநர். மலையாள சினிமாவின் லால் ஜோஷ் உள்ளிட்ட சில முக்கிய இயக்குநர்களிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய இவர், தற்போது `FLUSH' என்ற பெயரில் புதிய மலையாளப் படம் ஒன்றை எழுதி, இயக்கிவருகிறார்.

லட்சத்தீவின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையும் ஆயிஷா சுல்தானாவுக்கே உண்டு.
லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டங்களுக்கு எதிராக முதன்முதலாகக் குரல் எழுப்பியவர்களில் ஆயிஷா சுல்தானாவும் ஒருவர். தற்போது அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், லட்சத்தீவு மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

லட்சத்தீவு சாகித்ய பிரவர்த்தக சங்கம் (Lakshadweep Sahitya Pravarthaka Sangam), ``ஆயிஷாவை தேசத்துரோகியாகச் சித்திரிப்பது தவறானது. அவர் பிரஃபுல் படேலின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக நின்றவர். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த லட்சத்தீவின் கலசார சமூகமும் துணை நிற்கும்'' என்று ஆயிஷாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் ஆயிஷாவுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் நிலையில், பா.ஜ.க-வினர் பலரும் அவருக்கு எதிராகக் கருத்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். கேரளத்தின், திருச்சூர் மாவட்ட பா.ஜ.க-விலிருந்தும் ஆயிஷாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.