திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
பட்டினப் பிரவேசத்தை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்டக் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, `தருமபுர ஆதீனம் விவகாரம் தொடர்பாகப் பிற ஆதீனங்களுடன் பேசி தமிழக அரசு சுமுக தீர்வு காணும்' என அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் 108-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பல்லக்கில் மனிதனை மனிதன் தூக்கிச் சுமப்பது மாண்பாக இருக்காது. எப்படி பார்த்தாலும் இதை ஏற்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாமல் இருந்ததால் தூக்கிச் சுமந்தோம். ஆனால் தற்போது நவீன வாகனங்கள் வந்துவிட்டன. முதலில் பிரவேசம் என்பதையே நான் ஏற்கவில்லை, எதற்கு மறுபடியும் சம்ஸ்கிருதத்தைப் பிடித்து தொங்க வேண்டும்'' என்றார்.