Published:Updated:

நாம் தமிழர் கட்சியை முந்திய ஹரி நாடார்... இடைத்தேர்தல் நிலவரத்துக்கு சீமானின் பதில் என்ன?

நாங்குநேரியில் கிடைத்திருக்கும் இந்த அதிர்ச்சி முடிவை, நாம் தமிழர் கட்சி எப்படிப் பார்க்கிறது, இடைத்தேர்தலில் சோபிக்கத் தவறியது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்கனியை தன் வசமாக்கியிருக்கிறது அ.தி.மு.க. நாங்குநேரியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வனும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். `இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி' என தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினோ ``மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்'' எனவும் ``வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற தொடர்ந்து உழைப்போம்'' எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Hari nadar
Hari nadar
நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

இது ஒருபுறமிருக்க நாங்குநேரி தொகுதியில், நாம் தமிழர் கட்சியினர் பெற்ற வாக்குகளைவிட, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹரி நாடார் அதிக வாக்குகள் பெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜநாராயணனைவிட, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹரி நாடார் 749 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். இது நாம் தமிழர் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. ஆனால், 4,243 வாக்குகள் பெற்ற ஹரி நாடார், மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

யார் இந்த ஹரி நாடார்? அவர் ஏன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டார்?

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள மேல இலந்தைக் குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். தொழில் நிமித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் குடியேறிவிட்டார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. நீண்ட தலைமுடியுடனும் உடல் முழுவதும் நகைகளுடனும் வலம் வரும் ஹரி நாடார், கடந்த சில ஆண்டுகளாக, நாடார் சமுதாய மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார். நாடார் சமுதாய அரசியல் கட்சிப் பிரபலங்கள் சிலருடன் இவரைக் காணலாம். சசிகலா புஷ்பா அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவருக்குப் பக்கபலமாக துணை நின்றவர் ஹரிநாடார்தான். நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துவந்தார்.

hari nadar
hari nadar

அதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக, ராக்கெட் ராஜா மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆகியோருடன் இணைந்து `பனங்காட்டுப் படை கட்சி' என்னும் அமைப்பை உருவாக்கினார். அக்கட்சிக்கு ராக்கெட் ராஜா தலைவராகவும், ஹரி நாடார் தென் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.

இந்த நிலையில், நாங்குநேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதில் போட்டியிட முடிவு செய்தனர். ஹரி நாடாரே வேட்பாளராகவும் களமிறங்கினார். ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில், பல்வேறு கிராமங்களில் வலம் வந்து வாக்கு சேகரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடார் சமுதாய மக்களின் வாக்குகளை நம்பி மட்டுமே போட்டியிட்ட அவருக்கு, 4243 வாக்குகள் கிடைத்துள்ளன.

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய ஹரி நாடார்,

``கட்சி தொடங்கி ஆறு மாதங்களிலேயே, ஆளுங்கட்சியான அ.தி.மு.க மற்றும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க ஆகிய இரு பெரிய கட்சிகளை எதிர்த்து இடைத்தேர்தலைச் சந்தித்தோம். எங்கள் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்தோம். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எங்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே எங்களை மூன்றாம் இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். எங்களை நம்பி வாக்களித்த அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். அரசிடம் பேசி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வோம். எங்களின் அரசியல் பயணம் தொடரும்'' என நம்பிக்கை வார்த்தைகளோடு விடைபெற்றார்.

hari nadar
hari nadar

நாங்குநேரியில் கிடைத்திருக்கும் இந்த அதிர்ச்சி முடிவை, நாம் தமிழர் கட்சி எப்படிப் பார்க்கிறது, இடைத்தேர்தலில் சோபிக்கத் தவறியது ஏன்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்:

``பாராளுமன்றத் தேர்தலில் 8,000-க்கும் அதிகமான வாக்குகளை அந்தத் தொகுதியில் மக்கள் எங்களுக்கு அளித்திருந்தார்கள். இப்போது இடைத்தேர்தல்தானே என நினைத்து மக்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஓர் அமைச்சருக்கு ஐம்பது பேர் வீதம் பிரித்துக்கொண்டு, ஆளுக்கு இரண்டாயிரம் பணம் கொடுத்து, வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் தமிழர் கட்சி எந்தச் சாதிக்குமான கட்சியல்ல, தமிழினத்துக்கான கட்சி என்றுதான் பார்க்க வேண்டும். இங்கு பணமா, இனமா என்கிற சண்டைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒருநாள் மாறும். இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் படித்த இளைஞர்களை எரிச்சலூட்டும், சிந்திக்க வைக்கும்.
சீமான்
சீமான்
சீமான்

சாதிக்கட்சிகளைவிட நாங்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு தமிழினம்தான் வெட்கப்பட வேண்டும். நான் இல்லை. திராவிடக் கட்சிகள் பல காலமாக, இங்கே பல சாதிக்கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. இதில் எனக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. பலர் ஒதுங்கிக்கொண்டபோதும் நான் துணிச்சலுடன் தேர்தலைச் சந்தித்தேன். இப்போது வந்த முடிவுகளில் நான் தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றிருக்கிறார்கள். அதைக் காலம் ஒருநாள் மக்களுக்கு உணர்த்தும். ஒரு தலைமுறை வெகுவாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தல் இதுபோல இருக்கப் போவதில்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கின்றன. அப்போது தெரியும்.

இந்த வாக்குகள் பெறப்பட்டதா வாங்கப்பட்டதா என்பது அனைவருக்கும் தெரியும். இரட்டை இலை ஜெயிக்கவில்லை, 2,000 ரூபாய்தான் ஜெயித்திருக்கிறது. குறைவாகப் பணம் கொடுத்த தி.மு.க தோற்றிருக்கிறது. பணம் கொடுக்காமல் நாங்கள் வாங்கிய ஒவ்வொரு வாக்குகளும் புரட்சிக்கான விதையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

``எதையும் சந்திக்கத் தயார்!'' - சீமான்

படித்த இளைஞர்களிடம், மக்களிடம், எவ்வளவு நல்ல செய்திகளை எடுத்துச் சொன்னாலும் ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள் எனச் சந்தேகம் வருகிறது. அதற்காக இப்படியே விட்டுச் செல்ல மாட்டேன். கடைசிவரை களத்தில் நிற்பேன்'' என வெடிக்கிறார் சீமான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு