
தனிப்பட்ட முறையில், மாரிதாஸ் என்னைத்தான் அதிகம் விமர்சித்திருக்கிறார். ஆனாலும்கூட நான் அவர் குறித்து எதுவும் பேசவில்லை
“யாரைப் பாத்துடா `சங்கி’ என்கிறாய்... தி.மு.க-தான்டா உண்மையான சங்கி, சொங்கிப்பயலுகளா!’’ - சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் நரம்பு புடைக்க இப்படிப் பேசியதுடன், காலில் அணிந்திருந்த கறுப்பு, சிவப்பு வண்ணச் செருப்பைக் கையிலெடுத்து தி.மு.க-வை எச்சரித்திருப்பது தி.மு.க-வினரை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் உஷ்ணமாக்கியிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில்தான் சீமானைச் சந்தித்தோம்...
“பொதுக்கூட்ட மேடையில் செருப்பைத் தூக்கிக்காட்டி தி.மு.க-வை விமர்சித்திருக்கிறீர்களே... இது நாகரிகமா?’’
“இதிலென்ன நாகரிகம், அநாகரிகம் வேண்டியிருக்கிறது? 100 விழுக்காடு இந்துக்கள் பா.ஜ.க-வில் இருக்கிறார்களென்றால், 90 விழுக்காடு இந்துக்கள் தி.மு.க-வில் இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவரே திரும்பத் திரும்பச் சொல்கிறார். அப்படியென்றால், உண்மையான சங்கி தி.மு.க-தானே? நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகனுக்கு நான்கு மாதங்களாகப் பிணை வழங்காமல், இழுத்தடித்த இதே தி.மு.க ஆட்சியில்தான், மாரிதாஸ் கைது விவகாரத்தில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து பேசவே இல்லை. ஹெச்.ராஜாவைச் சட்டசபைக்குள் அழைத்துச் சென்றதே தி.மு.க-தான். இப்படிப்பட்ட தி.மு.க., திடீரென புனிதர் வேடம் போடுகிறது. ‘சீமானுக்கு ஓட்டுப் போட்டால், பா.ஜ.க உள்ளே வந்துவிடும்’ என்று தொடர்ச்சியாக சில நாய்கள் பேசிவருகின்றன... வெறுப்பு வருமா, வராதா? பழைய ஆளாக இருந்திருந்தால், செருப்பைக் காட்டிக் கொண்டிருக்க மாட்டேன்... அடித்துவிட்டுத்தான் மேடையைவிட்டே இறங்கியிருப்பேன். கெட்டபய இந்த சீமான் என்பது தெரியாமல் பேசிக்கொண்டு திரிகிறார்கள்!”
“எண்ணற்ற தம்பிகளுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் சீமானே தரக்குறைவாக விமர்சிப்பதும், தலைவர்களை ஒருமையில் பேசிவருவதும் சரிதானா?’’
“இதில் இப்போது என்ன பிரச்னை? யாரையும் நான் ஒருமையில் பேசவில்லை. சரி, அப்படியே ஒருமையில் பேசினால்தான், என்ன? ‘எங்கள் தலைவன் பிரபாகரன்; அவன் அந்த முருகனுக்கே நிகரானவன்’ என்று பாடுகிறோம். இதில் ‘அவன்’ என்று ஒருமையில் குறிப்பிட்டது தவறா? அன்பின் மிகுதியில் பேசுவதுதான் இது.’’
“மாரிதாஸ் கைது விவகாரத்தில், தி.மு.க அரசை விமர்சிப்பது ஏன்?”
“தனிப்பட்ட முறையில், மாரிதாஸ் என்னைத்தான் அதிகம் விமர்சித்திருக்கிறார். ஆனாலும்கூட நான் அவர் குறித்து எதுவும் பேசவில்லை. என் தம்பிமார்கள் பதில் கொடுக்கவும் அனுமதிக்கவில்லை. மாறாக, ‘கடந்து போங்கள்’ எனக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால், கருத்துரையைப் பற்றிப் பேசுகிற ஐயா ஸ்டாலின் ஆட்சியில்தான் கைதுசெய்கிறார்கள். இது தவறு இல்லையா?’’

“மாரிதாஸ் விவகாரத்தில், தி.மு.க அரசு பின்வாங்கிவிட்டது என்கிறீர்கள். ஆனால், மாரிதாஸ் மீது அடுத்தடுத்து புதிய வழக்குகள் பதியப்பட்டு வருகின்றனவே?’’
“ஐய்யய்ய... அவையெல்லாம் சும்மா கண் துடைப்பு. முதலில் மாரிதாஸ் வழக்கில், ஏன் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்வாதம் செய்யவில்லை என்பதற்கு தி.மு.க பதில் சொல்லட்டும். சென்ற ஆட்சியில், அவர்களால் எஸ்.வி.சேகரைக் கைதுசெய்ய முடியவில்லை. இந்த ஆட்சியில் இவர்களால் ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய முடியவில்லை. ஆனால், ‘நாங்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கிறோம்’ என்று நாடகமாடுகிறது தி.மு.க.’’
“நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார்கள். அப்படியிருக்கும்போது தி.மு.க அரசை `சங்கி’ என்று கூறுவது சரிதானா?”
(சிரிக்கிறார்.) “காமெடி செய்துகொண்டு அலைகிறார்கள். நீட்டைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசுதான். குழந்தையைப் பெற்று, பெயர்வைத்தது காங்கிரஸ் என்றால், இப்போது அதை வளர்த்து ஆளாக்குவது மத்திய பா.ஜ.க அரசு. தட்ஸ் ஆல் யுவர் ஹானர். ஆளுநரைப் பார்த்துவிட்டு வந்து, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். மறுபடியும் ஆளுநரைப் பார்த்துவிட்டு, ‘புதிய கல்விக் கொள்கையில் நல்லவற்றை எடுத்துக்கொள்வோம்’ என்கிறார்கள். இவையெல்லாம்தான் எனக்குக் கோபத்தை வரவழைக்கின்றன. ‘கொரோனா ஊரடங்கு முடிந்துவிட்டது. ஆன்லைனில் தேர்வு கிடையாது’ என்று மறுக்கும் அரசு, என் கட்சிப் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? அதனால்தான் சட்டத்தையும் மீறி நான் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்... வழக்கு வரட்டும் என்றுதான் அதையும் நடத்தினேன்.’’
“இப்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் பேசிவருவதைத்தானே நாம் தமிழர் தம்பிகளும் பின்பற்றுகிறார்கள்?”
“அதெல்லாம் இல்லை.... 2009 காலகட்டங்களில் நான் உணர்ச்சிவயப்பட்டுத்தான் பேசிவந்தேன். ‘உணர்ச்சிவயப்படுவது இயல்பு; அறிவுவயப்படுவதுதான் உயர்வு’ என்ற பக்குவம் எனக்கு இப்போது வந்துவிட்டது. இதைத்தான் என் பிள்ளைகளுக்கும் நான் கற்றுத்தருகிறேன். ஆனால், திரும்பத் திரும்ப என்னை ‘சங்கி, சங்கி’ என்று தி.மு.க பேசுவதால்தான் எனக்கு வெறுப்பு வருகிறது. பொய்யை உண்மை என்று நிரூபித்துக்கொண்டே வருவதுதான் இந்த திராவிட அரசியல். அந்த வெறுப்பில்தான், ‘பிச்சுப்புடுவேன்... இதையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கிறேன். ஆனால், ‘நாங்கள் சி.பா.ஆதித்தனாரையே பார்த்துவிட்டோம்; ம.பொ.சிவஞானத்தையே பார்த்துவிட்டோம்’ என்றெல்லாம் பேசுகிறவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.... சீமானை இப்போதுதான் நீங்கள் பார்க்கிறீர்கள்... ரோட்டில் மல்லுக்கட்டி உருண்ட ரௌடி நான்! கேடுகெட்ட மனுஷன் நான்... காட்டான்! அதனால்தான் என்னை ஜனநாயகவாதியாக இருக்க விடுங்கடா... என்று கெஞ்சுகிறேன்.’’
“சமீபத்தில், ‘நாட்டையே ஆளத் துடிக்கிற எனக்கு வாழ ஒரு வீடு இல்லை என்பது பெரிய வரலாற்றுத் துயரம்’ என்று சொந்தக் கஷ்டங்களை பொதுவெளியில் பேசியிருக்கிறீர்களே?”
“சொல்லித்தானே ஆக வேண்டும்... இதோ இப்போது இந்த வீட்டை மாற்றப்போகிறேன். யாருமே எனக்கு வீடு தராதபோது, இந்த வீட்டின் உரிமையாளர்தான் எனக்கு வீடு தந்தார். இப்போது அவரே கேட்கிறார். எனவே, வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இதையெல்லாம் என் பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டும் இல்லையா...’’

“ஆனால், ‘சீமானுக்கு ஊட்டியில் எஸ்டேட் இருக்கிறது; இன்னும் பல சொத்துகள் நாடெங்கும் இருக்கின்றன’ என்றெல்லாம் கூறப்படுகிறதே?”
“என் மாமியார் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரின் மகள்களுக்குச் சொத்துகளை எழுதிவைத்திருக்கிறார். அந்த வகையில் என் மனைவியின் பெயரிலும், அவரின் அக்காள் பெயரிலும் கொடைக்கானலில் ஆறு ஏக்கரில் தோட்டம் இருக்கிறது. மற்றபடி என் பெயரில் ஒரு எழவும் கிடையாது. ஆனால், நான் பிறந்த ஊரில் என் தந்தை எனக்கு எழுதிவைத்த காடு இருக்கிறது. அங்கே போய் நான் என்ன பண்ணப்போகிறேன்? என் மாமனார் (முன்னாள் சபாநாயகர் மறைந்த காளிமுத்து) உயிரோடு இருந்தபோது, வேளாண் கல்லூரி ஆரம்பிப்பதற்காக 85 ஏக்கர் நிலத்தை என் மாமியார் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தில் நம்மாழ்வார் பெயரில் அல்லது என் மாமாவின் பெயரிலேயேகூட வேளாண் பண்ணையை உருவாக்கும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், அந்த நிலத்தை எனக்குத் தரவில்லை என்று மாமியார்மீது எனக்குக் கோபம் இருக்கிறது. இப்போதுகூட இது விஷயமாக எனக்கும் என் மனைவிக்கும் இடையே சண்டையும் இருக்கிறது. இந்த சொத்துகளைத்தான் ‘சீமான் பெயரில் சொத்து இருக்கிறது’ என்று பேசிவருகிறார்கள்.’’
“தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்தாலும்கூட, சீமான் பா.ஜ.க ஆதரவாளராக இருப்பதால், அவர்மீது தேசத்துரோக வழக்கு பாய்வதில்லை என்கிறார்களே?’’
“அதெல்லாம் சும்மா... ஸ்டேன் லூர்துசாமி மீது தொடுக்கப்பட்டது போன்றதொரு வழக்குதான் என் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட வழக்கு, சிறைக்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை. புத்தகத்தை மட்டும் என் கையில் கொடுத்துவிட்டால், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நான் சிறையில் இருப்பேன். ஒரு பிரதமரையே ‘இன்டர்நேஷனல் புரோக்கர்’ என்று என்னைப்போல், விமர்சிக்கிற ஓர் ஆண் மகன் இந்தியாவில் இருக்கிறானா?’’