Published:Updated:

''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்!'' - சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்

''தமிழுக்காக, தமிழர்களுக்காக தி.மு.க அரசு செய்துவரும் சாதனைத் திட்டங்களை நேற்று வந்தவர்களெல்லாம் உரிமை கொண்டாடுவது புளுகு மூட்டைகளின் உச்சம்!'' என்கிறார் அமைச்சர் நாசர்.

''தி.மு.க உறுப்பினர்கள் என்னையும் தலைவர்களையும் புகழ்வதைக் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சட்டசபையிலேயே கடுமை காட்டியிருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆனால், ''கீதை, குர்ஆன், பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு.க.ஸ்டாலின்தான்'' என அண்மையில் தமிழக முதல்வரைப் புகழ்ந்திருக்கிறார் பால்வளத்துறை அமைச்சரான சா.மு.நாசர். அவரிடம் பேசினேன்...

''கீதை, குர்ஆன், பைபிள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறீர்களே..?''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''முதல்வரோடு 40 ஆண்டுக்காலம் பயணித்துவருகிறேன். அவருடைய சொல்தான் எனக்கு வேத வாக்கு. அவருடைய புனிதப் பயணத்தில், முதன்மைச் சிப்பாய் நான். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அவர் போட்ட முதல் கையெழுத்தே ஆவின் பால் விலைக் குறைப்புக்கானதுதான். இதன் மூலம் தமிழக மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் முதல்வர்.

'என்னைப் புகழாதீர்கள்' என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர். ஆனாலும் இது போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும் முதல்வரை எப்படிப் பாராட்டாமல் இருப்பது?''

''ஆவின் நிறுவன பால் கொள்முதலில், தனியார் நிறுவனங்களும் கலந்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறதே?''

''ஆவின் நிறுவனத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் சந்தையில் அந்தப் பாலை விற்பனை செய்யக் கூடாது. அதேசமயம், கொள்முதல் செய்யப்பட்ட பாலை மதிப்பூட்டப்பட்ட பொருளாக உருமாற்றம் செய்து சந்தையில் விற்பனை செய்துகொள்ளலாம். இதனால் ஆவின் விற்பனை எந்தவிதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை. எனவேதான், இந்த விதிமுறையில் திருத்தம் செய்திருக்கிறோம்.

அதற்கு முன்னதாக ஆவினின் செயல்பாடுகள் குறித்து எல்லோரும் அறிந்துகொள்வது நல்லது. குழந்தையில் ஆரம்பித்து பெரியோர் வரை பால் என்பது இன்றைக்கு அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இருக்கிறது. எனவே, பால் விவசாயிகளின் ரத்த நாளமாக ஆவின் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுக்க 4 லட்சத்து 30 பேர் ஆவினுக்கு பால் சப்ளை செய்துவருகிறார்கள். சொசைட்டி மூலமாகத்தான் ஆவினுக்கு பால் வந்து சேர்கிறது.

ஆவின்
ஆவின்

தனியார் நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்கு ஏற்ற அளவில் மட்டுமே விவசாயிகளிடமிருந்து பாலைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவின், சேவை அடிப்படையிலான நிறுவனம். எனவே, பால் உற்பத்தி செய்துவரும் விவசாயிகளை ஏமாற்றக் கூடாது என்ற நோக்கில், தேவையைவிடவும் அதிகமான அளவில் கொள்முதல் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இல்லையென்றால், 'பால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின்' என அதையும்கூட நீங்களே செய்தியாக வெளியிடுவீர்கள்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி 'ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறோம்.’ இதனால், ஒரு நாளைக்கு ஆவினுக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டமாகிறது. இந்த நிலையில், பால் விவசாயிகளிடமிருந்து தேவைக்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்படும் பாலை, தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடும் முடிவு என்பது ஆவின் லாபத்துடன் செயல்பட வழிவகுக்கும்!''

ஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''கொரோனா விதிமுறைகளைக் காட்டி, 'கோயில்களைத் திறக்க மறுக்கும் தி.மு.க அரசு, டாஸ்மாக் கடை, தியேட்டர்களை மட்டும் திறக்கலாமா' என்று தமிழக பா.ஜ.க கேள்வி எழுப்பி போராட்டம் நடத்திய பிறகுதானே வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன?''

''முழுக்க முழுக்க நிர்வாகம் சம்பந்தப்பட்ட கேள்வி இது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சேகர் பாபுவே இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். அதாவது, 'வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவதென்பது எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அடிபணிந்து அல்ல. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தே திறக்கப்படுகிறது' என்று.

கோயில்கள் மட்டுமல்ல... சர்ச், மசூதி என அனைத்துமே ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான் வார இறுதி நாள்களில் திறக்கப்படவில்லை. ஏனெனில், பக்தி முத்திப் போகும்போது வழிபாட்டுத் தலங்களில், ஒருவரையொருவர் இடைவெளி இல்லாமல் இடித்துக்கொண்டு சென்றால், கொரோனா காலகட்டத்தில் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும் என்பதாலேயே குறிப்பிட்ட நாள்களில் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தது. அதுவே, டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் இடைவெளிவிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக காவல்துறையும் உதவி செய்துவருகிறது. எனவே இதை நாம் குறைசொல்ல முடியாது.''

சேகர் பாபு
சேகர் பாபு

''தி.மு.க-ஆட்சிக்கு வந்திருப்பது நாங்கள் போட்ட பிச்சை' என்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சை நிரூபிப்பதுபோலவே, 'கிறிஸ்தவ மக்களின் ஜெப வலிமையால்தான் இன்றைக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது" என்று அண்மையில் நீங்களும் பேசியிருக்கிறீர்களே?''

''கொள்கைரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒருவரையொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதுதான் அரசியல் நாகரிகம்; சபை மரபு. அதேபோல், என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்த ஒரு கூட்டத்தில், அந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நாகரிகமாகப் பேசியிருந்தேன்.

அதாவது, சர்ச் கட்டப்பட்டு 40 ஆண்டுக்காலம் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள். அங்கேதான், 'தி.மு.க-வின் வெற்றிக்கு கிறிஸ்தவ மக்களின் ஜெபமும் ஒரு காரணம்' எனப் பேசியிருந்தேன். மற்றபடி 'கிறிஸ்தவ மக்களின் ஜெபம் மட்டுமே காரணம்' என்று பேசவில்லை. ஆனால், பத்திரிகைகள்தான் அப்படிச் செய்திகள் வெளியிட்டுவிட்டன.

குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, அங்கு வந்திருக்கும் மக்கள் மகிழ்ச்சியடையும்விதத்தில் பேசுவதுதான் சபை நாகரிகம். அந்தவகையில்தான் அப்படிப் பேசியிருந்தேன். எனவே, தி.மு.க என்ற மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதத்தினரின் வேண்டுதல்களும் வாக்குகளும்தான் காரணம்!''

``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா..? கழகம் காக்கப்படும்!” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

'' 'நாம் தமிழர் கட்சிதான் தி.மு.க ஆட்சியை வழிநடத்துகிறது' என்கிறாரே சீமான்?''

''நாட்டுப்பற்றால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் நாங்கள். ஜனநாயகத்தைக் காப்பதற்காக உயிரையும் இழப்போம். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய ஆளும்கட்சியாக இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்தோம். இதன் தொடர்ச்சியாக தி.மு.க ஆட்சியே பறிபோனது. எனவே, கொள்கையில் சமரசம் செய்யாத துணிச்சலைக்கொண்ட கட்சி தி.மு.க.

சீமான்
சீமான்

அந்தவகையில், தமிழ் மொழிக்காகவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட தி.மு.க எந்நாளும் துணிச்சலுடன் போராடிக்கொண்டிருக்கிறது. வாழையடி வாழையாக தமிழுக்கு முன்னுரிமை அளித்து, தொண்டு செய்துவருகிறது கழகம். தமிழுக்காக, தமிழர்களுக்காக தி.மு.க அரசு செய்துவரும் சாதனைத் திட்டங்களை நேற்று வந்தவர்களெல்லாம் உரிமை கொண்டாடுவது புளுகு மூட்டைகளின் உச்சம்!

தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தினந்தோறும் பொய்க் கதைகளாகப் பேசிக்கொண்டிருக்கிறார் சீமான். பெரியார் கைப்பிடித்து வளர்ந்தேன் என்றெல்லாம்கூட அவர் பேசியிருக்கிறார். சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்! முழுக்க முழுக்கப் பொய்யை மட்டுமே பேசிவரும் சீமானைப் போன்ற ஒரு மனிதரை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு