Published:Updated:

`விஜய், வடிவேலுவை விசாரித்த பிரபாகரன்!' - சீமான் அன்று விகடனிடம் பகிர்ந்ததும் இன்று மேடைகளில் சிலாகிப்பதும்!

அவருக்கு `ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப் போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார். #VikatanOriginals

பிரபாகரனுடன் சீமான்
பிரபாகரனுடன் சீமான்

விக்ரமாதித்யனிடம் வேதாளம் சொன்ன கதைகளுக்கோ, காலம் காலமாகப் பேரன்களிடம் பாட்டிகள் சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளுக்கோ இனியும் மவுசு இருக்குமா எனத் தெரியாது. ஆனால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிக்டாக், ட்விட்டர் என எல்லா வலைதளங்களிலும் `அண்ணன்' சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளுக்கு மவுசு இருக்கிறது. அந்த `அண்ணன்' தன் தொண்டர்களால் அப்படி அன்புடன் அழைக்கப்படும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

``சீமானும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சந்தித்துக்கொண்டபோது என்ன நடந்தது. சீமான் அந்தச் சமயத்தில் அவரிடம் என்ன பேசினார். அந்த அனுபவம் எப்படி இருந்தது?'' இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சீமானின் பெரும்பாலான மேடைகளில் தமிழக மக்கள் கேட்டுவிட்டார்கள். ஒவ்வொரு மேடையிலும் அதே கதைதான் என்றாலும், அவ்வப்போது ஆமைக்கறி, ஏ.கே.74, உணவு லிஸ்ட் எனப் புதிது புதிதாகச் சில விஷயங்கள் உள்ளே நுழைகின்றன. இந்தக் கதைகளும் பேச்சுகளும் சீமானின் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால், 2009-ல் சீமான் சொன்ன இந்த விஷயங்களை யாரும் அவ்வளவு எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பிரபாகரனை சந்தித்தது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் சீமான்.

பிரபாகரனுடன் சீமான்
பிரபாகரனுடன் சீமான்

23.09.2009 ஆனந்த விகடன் இதழுக்கு சீமான் அளித்த பேட்டியிலிருந்து...

``அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. `புலி உறுமிக்கொண்டு வருகிறது!' என்றார் நடேசன் சிரித்தபடி. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்ன சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இவற்றையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது. பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்தக் காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

`சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுகிட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. 'அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்' அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, 'கிருஷ்ணர் என் பக்கம்'னு நினைத்தேன்.

எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்' என்றார்.

சீமான்
சீமான்
`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா?’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்

அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து 'கோபம்'னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். 'அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்' என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ' 'கோபம்'னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால 'கோபம்'னே இருக்கட்டும்!' என்றார். மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். 'பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்... நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்' என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன்.

இந்தப் பேட்டியை முழுமையாகப் படிக்க: http://bit.ly/2taTdvL

சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிகிட்டு இருந்தப்ப, `யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்' என்று நினைவுபடுத்திக்கொண்டார். 'பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே' என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப் போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார். 'பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்'னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்ன நினைத்தாரோ, 'சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்!' என்றார்.

இவைதவிர,

  • எம்.ஜி.ஆர் குறித்து பிரபாகரன் பகிர்ந்துகொண்டது என்ன?

  • சமையல் குறித்து இருவரும் பேசிக்கொண்டது..?

இந்தப் பேட்டியை முழுமையாகப் படிக்க: http://bit.ly/2taTdvL