Published:Updated:

`அ.தி.மு.க நேரடிக் கூட்டு; தி.மு.க மறைமுகக் கூட்டு!' - பா.ஜ.க உறவைச் சுட்டிக்காட்டும் சீமான்

ஆ.விஜயானந்த்

வேலூர் தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் இருக்கின்றன. `இந்த வாக்குகள் எல்லாம் வராமல் போய்விடக் கூடாது' என்ற நடுக்கத்தில்தான், `இஸ்லாமியனாகவே வந்து வாக்கு கேட்கிறேன்' எனப் பேசுகிறார் ஸ்டாலின்.

சீமான்
சீமான்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளை மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைய இருக்கிறது. பணவிநியோகம், ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு, அமைச்சர்களின் திண்ணைப் பிரசாரம் என வேலூர் தொகுதியே அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது.

பிரசாரத்தில் சீமான்
பிரசாரத்தில் சீமான்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமியின் வெற்றிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள். பிரசார இடைவெளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்.

வேலூர் பிரசாரப் பணிகள் எப்படிச் சென்றுகொண்டிருக்கின்றன?

ஓ.பி.எஸ்., சீமான் ஒருபக்கம்; கமல், தமிழிசை மறுபக்கம்! - இது 'கேட்ஜெட்' கூட்டணி

"நாங்கள் எப்போதும்போல பிரசாரம் செய்து வருகிறோம். எங்கள் நிலவரம் நன்றாக இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க நிலவரம்தான் கலவரமாக மாறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். `ஏ.சி.சண்முகத்தை வெல்ல வைக்க வேண்டும்' என அ.தி.மு.க-வும் `கதிர் ஆனந்த்தை வெற்றி பெற வைக்க வேண்டும்' எனத் தி.மு.க-வும் போராடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரையும் வீழ்த்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களை வைத்திருக்கிறது தி.மு.க. கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால் 38 உறுப்பினர்களாக இது மாறும். அப்படியே வெற்றி பெற்றாலும் அவர்கள் எதையும் அங்கே செய்யப் போவதில்லை. ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் தம்பி ரவீந்திரநாத் உடன் சேர்ந்து பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவார். இந்த இருவராலும் மக்களுக்கு எந்தப் பயனும் வரப்போவதில்லை. எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் மாற்று அரசியலுக்கான தொடக்கமாக இருக்கும்."

களத்தில் தினகரனும் கமலும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3 சதவிகித வாக்குகளை வாங்கினீர்கள். இப்போது என்ன இலக்கை வைத்திருக்கிறீர்கள்?

வேட்பாளர் தீபலட்சுமி, சீமான்
வேட்பாளர் தீபலட்சுமி, சீமான்

"நாங்கள் வாங்கியது 3.89 சதவிகித வாக்குகள். அதை நீங்கள் குறைக்க வேண்டாம். 4 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். தேர்தல் காலங்களில் இவ்வளவு வாக்குகளைப் பெற வேண்டும் என நினைத்துப் பணியாற்றுவதில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோம். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு, இந்த இரண்டு தீய அரசியல் கட்சிகளையும் கூட்டணிகளையும் தூக்கி வீசுவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் போராடுகிறோம். 3 சதவிகிதம், 4 சதவிகிதம் என்ற கணக்குகளைப் பார்ப்பதில்லை. தொடர்ச்சியாக நாங்கள் களத்தில் நிற்கிறோம் என்பதுதான் முதன்மையானது."

வேலூர் தேர்தலில் பணவிநியோகம் எந்தளவுக்கு நடக்கிறது?

``2021 சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டம்தான்!’ - வேலூரில் சீமான்

"நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குக்கு 200, 300 எனக் கொடுத்தார்கள். அனைத்துத் தொகுதிகளுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்ததால் இந்தத் தொகையைக் கொடுத்தார்கள். இப்போது ஒரே தொகுதிக்குத் தேர்தல் என்பதால் 2,000 ரூபாய், 3,000 ரூபாய் எனவும் சில பகுதிகளில் வாக்குக்கு 5,000 ரூபாய் எனவும் கொடுக்கிறார்கள். இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் பெரும் பணக்காரர்கள். அவர்கள் எப்படிச் செலவு செய்வார்கள் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை."

தி.மு.க, அ.தி.மு.க பிரசாரப் பணிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிரசாரத்தில் ஸ்டாலின்
பிரசாரத்தில் ஸ்டாலின்

"அ.தி.மு.க வெளிப்படையாக பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்துவிட்டது. என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தை திருத்தியது, முத்தலாக் மசோதாவை நிறைவேற்றியது என இஸ்லாமிய மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. இவையெல்லாம் யாரைக் குறிவைத்து நடத்தப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் தி.மு.க போடும் இரட்டை வேடத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என்.ஐ.ஏ-வை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்கு செலுத்திவிட்டு,`பா.ஜ.க உள்நோக்கத்தோடு செயல்படுகிறது' என அறிக்கைகளாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் வாக்கு செலுத்திவிட்டு இங்கு வந்து அறிக்கை வெளியிடுவது என்பது இரட்டை முகத்தையே காட்டுகிறது.

வேலூர் தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் இருக்கின்றன.`இந்த வாக்குகள் எல்லாம் வராமல் போய்விடக் கூடாது' என்ற நடுக்கத்தில்தான், `இஸ்லாமியனாகவே வந்து வாக்கு கேட்கிறேன்' எனப் பேசுகிறார் ஸ்டாலின். இஸ்லாமியனாகவே இருக்கிறவர், எப்படி என்.ஐ.ஏ-வை ஆதரித்து வாக்களிப்பார். இந்த நடுக்கத்தின் காரணமாகத்தான் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவை அழைத்து வந்து கூட்டம் போடுவது, இந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்ப காட்டுவது எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க நேரடியாக பா.ஜ.க-வோடு நட்பில் இருக்கிறது. தி.மு.க-வோ மறைமுகமாக பா.ஜ.க-வோடு நெருக்கம் காட்டுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம்."

அ.தி.மு.க அமைச்சர்கள் திண்ணைப் பிரசாரம் எல்லாம் செய்து வருகிறார்களே?

எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

"ஒரு பிரசாரமும் இல்லை. இவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது. திண்ணையில் உட்காருவது என்பது கணக்குப் பார்த்துக் காசு கொடுப்பதற்காகத்தான். திருட்டுக் கோழி பிடிப்பது போல, `எத்தனை வாக்குகள் இருக்கிறது, அலைபேசி எண் கொடுங்கள்' எனக் கேட்பதற்காகத்தான் கூடுகின்றனர். இவர்கள் பேசுவதற்கு என்ன கொள்கை இருக்கிறது? காசை நம்பித்தான் அவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்."

பணவிநியோகத்தின் மீது தேர்தல் ஆணையம் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

`கனிமொழி டெல்லியிலேயே இருக்கட்டும்!' 
- வேலூர் பிரசாரத்தில் புறக்கணிக்கப்பட்ட பின்னணி

"தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா... பறக்கும் படை என்ற ஒன்றைக் கண்ணால்கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் இங்கு வரவே இல்லை. பணம் கொடுக்கட்டும் என அனுமதித்துவிட்டார்கள். மாநில ஆட்சி, மத்திய ஆட்சி ஆகியவற்றின் துணை இருப்பதால், ஏ.சி.சண்முகத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் எனப் போராடுகிறார்கள். இரண்டு கட்சிகளின் மீதும் மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. இந்த வெறுப்புகளால் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது."