Published:Updated:

``தொகுப்பூதிய செவிலியர்கள் பணிநீக்கம்; திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு" - சீமான் காட்டம்

சீமான்

``திமுக அரசு தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பணிநீக்கம் செய்திருப்பது, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது" - சீமான்

``தொகுப்பூதிய செவிலியர்கள் பணிநீக்கம்; திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு" - சீமான் காட்டம்

``திமுக அரசு தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பணிநீக்கம் செய்திருப்பது, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது" - சீமான்

Published:Updated:
சீமான்

``தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மை” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும், "கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மையாகும்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன், கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 4,000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்பு பணிகளுக்காக, முந்தைய அ.தி.மு.க அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

இரவு பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தபடி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த இரண்டு ஆண்டிற்கும் மேலாக போராடி வந்தனர். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரம் செய்யாததோடு, அரசு பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல், மிகக் குறைந்த ஊதியமாக மாதம் ரூ 7,700 மட்டுமே வழங்கி, கொத்தடிமை போல் நடத்தியது அன்றைய அ.தி.மு.க அரசு.

 ஸ்டாலின்
ஸ்டாலின்
ம.அரவிந்த்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து, அதிகாரத்தை அடைந்த தி.மு.க அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 20 மாதங்களாகியும், பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, தற்போது திடீரென அவர்களை பணி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோத போக்காகும்.

தமிழ்நாட்டில் தற்போது புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கடுமையான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றக்குறை நிலவி, நோய்களை உரிய நேரத்தில் கவனிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் செவிலியர்கள் சேவை தேவைப்படும் நிலையில், திமுக அரசு தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பணிநீக்கம் செய்திருப்பது, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாது அரசு அழைத்தவுடன் ஓடோடி வந்து சேவை புரிந்த செவிலியர்களுக்கு, அரசு செய்யும் கைமாறு இதுதானா? என்ற கேள்வி எழுகிறது.

 சீமான்
சீமான்

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டால், செவிலியர்கள் யாரும் உதவ முன் வராத அளவிற்கு தன் மீதான நம்பகத்தன்மையை முற்றாக சீர்குலைத்துள்ளது தி.மு.க அரசு.

ஆகவே, ஒப்பந்த செவிலியர்களை பயணிக்கம் செய்யும் முடிவை கைவிட்டு, அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து, ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைபடாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

போற்றுதலுக்குரிய செவிலியர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக முன்னெடுக்கும் அறப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கும். கோரிக்கைகள் வெல்லும் வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.