Published:Updated:

கரும்புக் கொள்முதலில் முறைகேடு: "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல்" - சீமான் காட்டம்!

சீமான்

பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

கரும்புக் கொள்முதலில் முறைகேடு: "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல்" - சீமான் காட்டம்!

பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

Published:Updated:
சீமான்

தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு, அரசு நிர்ணயித்திருக்கும் விலையில் பாதி அளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `அரசின் பொங்கல் தொகுப்புக்கு வழங்க கொள்முதல் செய்யப்படும், கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.

பொங்கல் தொகுப்பு வழங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பொங்கல் தொகுப்பு வழங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நடப்பாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததால், அதை நம்பி அதிகளவில் செங்கரும்பை விளைவித்த விவசாயிகள் மிகுந்த நஷ்டமடையும் நிலைக்கு ஆளாகி, போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் பெருங்குடி மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து, வேறு வழியின்றி பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டங்களுக்குள்ளேயே செய்திட வேண்டும் எனவும், கரும்பு ஒன்றுக்கு ரூபாய் 33 கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், கரும்பு ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, வாகன வாடகை என்று கூறி, கரும்புக்கென அரசு நிர்ணயித்த 33 ரூபாயில் பாதி அளவுக்கு எடுத்துக்கொண்டு, வெறும் 15 முதல் 20 ரூபாய் அளவுக்கு மட்டுமே, மாவட்ட நிர்வாகம் வழங்குவதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையில் 15 ரூபாய் வீதம் ஒவ்வொரு கரும்புக்கும் பிடித்தம் செய்யப்படும் மொத்தத் தொகை, ஏற்றுக் கூலி இறக்குக் கூலியைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு முறைகேடாகப் பறிக்கப்படும் தொகை, யாருக்குச் செல்கிறது?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மாவட்டத்துக்கு உள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது, வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்புக்கும் பாதித் தொகையைப் பறிப்பது எவ்வகையில் நியாயமானது? கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாக வழங்க முடியும் என்றால், அறிவிப்பாணையிலேயே அதை வெளிப்படையாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கலாமே... அதைவிடுத்து கரும்பு ஒன்றுக்கு ரூபாய் 33 வழங்கப்படும் என்று கொள்முதல் விலையை அறிவித்துவிட்டு, அதில் பாதித் தொகையை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றுவது என்பது சிறிதும் நியாயமற்ற கொடுஞ்செயலாகும்.

ஆளுங்கட்சியினரின் தலையீட்டினாலே கரும்புக்கான விலை குறைத்து வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, கரும்பு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்குச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.