Published:Updated:

`கட்டுத்தொகையைக் கட்டக்கூட காசில்லை தம்பி!' - கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் மீது பாயும் சீமான்

"விளையாட்டுப் போட்டிகளில் யாராவது ஒருவர் தவறு செய்தால், அவரை மட்டும்தான் நீக்குவார்கள். ஒட்டுமொத்த போட்டியையே யாரும் நிறுத்துவதில்லை. ஆனால், இங்கு மட்டும்தான் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்கிறவர்களையும் பழிவாங்குகிறார்கள்." - சீமான்

சீமான்
சீமான்

வேலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தும் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. `விளையாட்டுப் போட்டிகளில் யாராவது ஒருவர் தவறு செய்தால், அவரை மட்டும்தான் நீக்குவார்கள். ஒட்டுமொத்த போட்டியையே நிறுத்துவதில்லை. அதைப் போன்ற அணுகுமுறையைத் தேர்தல் ஆணையம் கையாள்வதில்லை' எனக் கொதிக்கிறார் சீமான்.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் அ.தி.மு.க சார்பாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாகக் கடந்தமுறை போட்டியிட்ட தீபலட்சுமி களமிறங்குகிறார். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 18-ம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள். இந்த மனுவை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேலூர் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது சரியானதுதானா?

"பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். சொல்லப்போனால், இந்தத் தேர்தல் அமைப்பு முறையையே வெறுக்கிறோம். வேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டது போல தேர்தல் ஆணையம் காட்டுகிறது. எங்களைப் போன்ற நபர்கள்மீது வலுக்கட்டாயமாகத் தேர்தல் திணிக்கப்படுகிறது. இது, மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது. தேர்தல் நடந்தாலும் எப்படியும் அவர்கள் பணம் கொடுக்கத்தான்போகிறார்கள். ஏற்கெனவே நடந்த ஆர்.கே.நகர், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த தேர்தலிலும், `அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டது' என்றார்கள். இதனைக் காரணம் காட்டியே தேர்தலை நிறுத்தினார்கள்.

அதிகப்படியாகப் பணம் கொடுத்தார்கள் என்றால், குறைந்த அளவு பணம் கொடுத்தால் சரியானதா... தேர்தல் ஆணையத்தின் வார்த்தைகளிலிருந்து கவனித்தால், ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கலாம் என நிர்ணயித்து வைத்ததுபோல இருக்கிறது. அதிகப்படியாகப் பணம் கொடுத்தது ஆணையத்தின் கண்களுக்குத் தெரிகிறது என்றால், ஏன் அவர்கள்மீது நடவடிக்கையை எடுக்கவில்லை... கொடுத்தவர்கள், வாங்கியவர்களில் எத்தனை பேரைக் கைதுசெய்தார்கள். அப்படி அவர்கள் பணம் கொடுத்ததைப் பார்க்கவில்லையென்றால், பணம் கொடுத்தார்கள் என எந்த அடிப்படையில் சொன்னார்கள்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

விளையாட்டுப் போட்டிகளில் யாராவது ஒருவர் தவறு செய்தால், அவரை மட்டும்தான் நீக்குவார்கள். ஒட்டுமொத்த போட்டியையே யாரும் நிறுத்துவதில்லை. ஆனால், இங்கு மட்டும்தான் தேர்தலை நியாயமாக, நேர்மையாக எதிர்கொள்கிறவர்களையும் பழிவாங்குகிறார்கள். காசு கொடுத்தவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதன்மூலம் தேர்தல் ஆணையம் நாடகம் போடுவதாகத்தான் அறிய முடிகிறது. பணத்தைக் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானாவர்களே போட்டியிட்டும் வெல்கிறார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்ப்பது?

40 நாடாளுமன்றத் தொகுதிகளில், வேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டதா... வேறு எங்கும் பணம் கொடுக்கப்படவில்லை என ஆணையம் கருதுகிறதா... மற்றவர்கள் எல்லாம் மிக நேர்மையாகத் தேர்தலை எதிர்கொண்டார்களா... பணம் கொடுத்தவர்கள் மீதும் அந்தக் கட்சி மீதும் தடை முயற்சிகளை மேற்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். அப்படிச் செய்யாமல், ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்துப் போட்டியிடும் எங்களையும் பாதிப்படைய வைக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் கட்டுத் தொகையை (டெபாசிட்) இழக்கிறோம். திரும்பத் திரும்ப கட்டுத்தொகையைக் கட்டுவதற்குப் போராடுகிறோம். இந்தத் தொகையையாவது தேர்தல் ஆணையம் திருப்பித் தருவதுதானே முறையானதாக இருக்கும். இப்போதும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிடுகின்றனர். ஏ.சி.சண்முகமும் பணம் கொடுப்பார், கதிர் ஆனந்தும் பணம் கொடுப்பார். அப்படியானால், இந்தத் தேர்தலை அப்போதே நடத்தியிருக்கலாமே? தேர்தலை இடைநிறுத்தம் செய்ததன் மூலமாகத் தேர்தல் ஆணையம் சாதித்தது என்ன? எவ்வளவு பெரிய வேடிக்கையான விளையாட்டாக இருக்கிறது.

ஏ.சி.சண்முகமும் பணம் கொடுப்பார், கதிர் ஆனந்தும் பணம் கொடுப்பார். அப்படியானால், இந்தத் தேர்தலை அப்போதே நடத்தியிருக்கலாமே..?
சீமான்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக வசந்தகுமார் இருந்தார். அவர் நாடாளுமன்றத்துக்கும் போட்டியிடுகிறார். அந்தக் கட்சி, `உங்களுக்கு எதற்கு இரண்டு பதவி; வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்' எனக் கூறியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், அவர் கன்னியாகுமரி தொகுதியில் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்த தொகுதிக்கு தேவையில்லாமல் தேர்தல் வருகிறது. இதற்கான செலவு, 100 நாள் வேலைக்குச் செல்பவர்கள், அன்றாடங் காய்ச்சிகள் ஆகியோர் தலையில்தான் வந்து விழுகிறது.

இடைத்தேர்தல் நடக்கக்கூடிய சூழலுக்குக் காரணமானவர்களிடம் தேர்தலுக்கான செலவை வசூலிக்க வேண்டும். நாங்குநேரி தேர்தல் செலவை வசந்தகுமார்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பென் ஜான்சன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் ஊக்க மருந்து சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து இரண்டாவதாக வந்த கார்ல் லூயிஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல், தேர்தலில் ஒருவர்மீது குற்றச்சாட்டு வந்தால், இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவித்துவிடலாம். இங்குள்ளவர்கள் தேர்தல் என்பதை விளையாட்டாகப் பார்க்கிறார்கள்".

அப்படியானால், வேலூர் தேர்தல் செலவை துரைமுருகன் தரப்பினர் ஏற்க வேண்டும் என்கிறீர்களா?

சீமான்
சீமான்

"நான் கதிர் ஆனந்தை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் மாற்ற வேண்டும் என்றுதான் சொல்கிறேன். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்ததன் மூலம், மக்களுக்கு நிலவரத்தை தெரியப்படுத்துகிறோம். வேலூர் தேர்தலில் பெரும் பணக்காரர்களோடு போட்டிபோட இருக்கிறோம். மீண்டும் அதே வேட்பாளர் போட்டியிடுவதும் அவர் வெல்வதும்தான் நடக்கப் போகிறது. தி.மு.க. தரப்பில் போடப்பட்டுள்ள பொறுப்பாளர்களைக் கவனியுங்கள். மாநிலத்தில் உள்ள அத்தனை நிர்வாகிகளையும் நியமித்திருக்கிறார் ஸ்டாலின். புளி ஏப்பக்காரனும் கடும் பசிக்காரனும் ஒன்றாகப் போட்டியிட முடியாது. கட்டுத் தொகையைக்கூட கட்ட முடியாமல் நாங்கள் சிரமப்படுகிறோம்".