Election bannerElection banner
Published:Updated:

`போராடிச் சாவோம்' - நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் ஆவேச உரை!

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகும் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றth தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்க, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மூன்றாவது அணி உருவாக்கும் நோக்கில் தனி ரூட்டில் பயணித்துவருகிறார். இந்தநிலையில், எந்தக் கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்துத் தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அந்தக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைத்தார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி, நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

234 தொகுதிகளில் ஆண், பெண் எனச் சரி சமமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சீமான், ``ஆணுக்குப் பெண் சமமல்ல. ஆணும் பெண்ணும் சமம். விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும். விவசாயிகள் செத்தால் அது நாடல்ல, சுடுகாடு'' என்றார்.

மேலும், ``நம் தலைவர் நமக்குச் சொல்லியிருக்கிறார். மற்ற இனங்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவது போராட்டம் வரும். ஆனால், தமிழ்த் தேசிய மக்களுக்குப் போராட்டமே வாழ்க்கையாக மாறி நிற்கிறது. போராடினால் சாவோம். போராடவில்லை என்றாலும் சாவோம். ஆனால், போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. போராடிச் சாவோம்.''

``உலகத்தின் தலைசிறந்த நாடாக இந்தத் தாய் நிலத்தை மாற்றிப் படைக்க வேண்டும் என்ற ஆகப்பெரும் கனவை, சிந்தனையை வைத்திருக்கிறோம். கோடி கனவு கண்டோம், அதை நிறைவேற்றக் கூடி ஓடி வாருங்கள் என் அன்பான மக்களே என்று கூறுகிறோம். ஒற்றை மனிதனாக வந்தேன். இவ்வளவு பெரிய படையை கட்டியெழுப்புவேன் என்று எவரும் நம்பியிருக்க மாட்டார்கள். நல்ல தமிழ்த் தாய்க்கும், தமிழ்த் தகப்பனுக்கும் பிறந்த பிள்ளைகள், மானத்தமிழச்சியின் மார்பில் பால் குடித்த இன்னும் கோடிக்கணக்கான பிள்ளைகள் பல பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

நான் இந்த சைடிலிருந்து அடிப்பேன்... சீமான் அந்த சைடிலிருந்து அடிப்பார்!
முன்னதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடவில்லை என்று முடிவெடுக்கக் காரணம் என்ன என்றும் அவர் விளக்கினார். அதில், ``கொளத்தூரில் போட்டியிடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மக்களின் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் கிடையாது. ஒருவரை வீழ்த்துவதைவிட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறேன் ” என்றார்.

`` பண மழை பொழிந்தது, கூட்டணிகள் குவிந்தன. ஆயினும் 17 லட்சம் பேர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த எளிய பிள்ளைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஐந்தாண்டுகள் இந்த நிலம் நமக்கு வந்தால், உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும்." என்று ஆவேசமாகப் பேசினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு