Published:Updated:

ஆ.ராசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான் - ரியாக்‌ஷன்கள் என்னென்ன?

ஆ.ராசா - சீமான்

திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ஆ.ராசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான் - ரியாக்‌ஷன்கள் என்னென்ன?

திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Published:Updated:
ஆ.ராசா - சீமான்

``மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்திருக்கும் கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், `திமுக தலைமையே ஆதரவு தெரிவிக்காத நேரத்தில் எங்கள் அண்ணன் எப்படி துணிச்சலாகப் பேசியுள்ளார்' என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், சீமானின் கருத்துக்கு திமுகவுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

வீரமணி, ஆ.ராசா
வீரமணி, ஆ.ராசா

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி, சென்னை பெரியார் திடலில், `60 ஆண்டுகால விடுதலை ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் விடுதலை சந்தா வழங்கும் விழா' என்கிற தலைப்பில் திராவிடர் கழகத்தால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அதில், யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. உனடியாக, பா.ஜ.கவினரும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவருக்கெதிராக மிகப்பெரிய அளவில் போர்க்கொடியை உயர்த்தினர். ஆ.ராசாவுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். `ஆ.ராசா எம்.பி பதவி விலகவேண்டும், அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும்' என ஒருசில இடங்களில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்தநிலையில் ராசாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சீமான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், ``மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ராசாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார் சீமான். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பாகவும் பலமுறை ஆ.ராசாவுக்கு ஆதரவாக பலமுறை பேசியிருக்கிறார் சீமான். திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஆ.ராசாவை முன்னிறுத்தினால் நான் கட்சியைக் கலைத்து திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இடும்பாவனம் கார்த்தி டிவிட்டரில்
இடும்பாவனம் கார்த்தி டிவிட்டரில்

நாம் தமிழர் கட்சியினர் ரியாக்‌ஷன் :

ஆ.ராசாவின் பேச்சை ஆதரிக்காமல் திமுகவினர் ஒதுங்கிச் செல்வதாகவும் சீமான் மிகத் துணிச்சலாக அவருக்கு ஆதரவாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். பத்திரிகையாளர் சந்திப்பில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருவரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்ப, காதில் விழவில்லை என்கிற தொனியில் பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு இருவரும் கிளம்பிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் பரப்பி வருகின்றனர். அதேபோல, அமைச்சர் பொன்முடியும் பதிலளிக்காமல் சென்ற வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், `ஆ.ராசா மீது அளிக்கப்படும் புகார்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும். வழக்கை அவர் பார்த்துக்கொள்வார்' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்தையும் சீமான் தெரிவித்த கருத்தையும் ஒப்பிட்டும் பதிவிட்டு வருகின்றனர்.

திமுகவுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்பும் ;

திமுகவுக்குள்ளேயே ஒருசிலர் ராசாவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கும் சீமானை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். `அவரின் அரசியல் மீது மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் சீமானின் இந்தக் கருத்துகளை ஆதரிக்கிறோம்' என சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை, சீமானுக்கு ஆதரவாக திமுகவினர் ஃபயர் விடுவது ஆபத்தான போக்கு எனவும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 2ஜி வழக்கில் விடுதலையான பிறகும், தன் கட்சியின் வரைவில் இன்னும் அதை நீக்காமல் வைத்திருக்கிறார் என ஒருசிலரும், சீமான் நித்தியானந்தாவுக்கு பாஜகவைச் சேர்ந்த பலருக்கும்தான் ஆதரவாகப் பேசியிருக்கிறார். சீமானின் கருத்து என்பது ஆட்டுத்தாடி மாதிரி எனவும் ஒருசிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். சீமான் ஆதரித்துப் பேசுவதே திமுக ஆதரிக்கவில்லை என அரசியல் செய்யத்தான் என்கிற ரீதியிலும் ஒருசிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் பயணித்தவரும் தற்போது திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான இராஜிவ் காந்தி, ``பெரியாரின் கொள்கைகளைத்தான் ராசா பேசுகிறார். ஆனால், பெரியாரை எதிர்த்துவிட்டு ராசாவை ஆதரிப்பது என்பது சாதி அடிப்படையிலானது'' என கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி டிவிட்டரில்
ராஜீவ் காந்தி டிவிட்டரில்

திமுக, நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து பொதுவாக அரசியல் இயக்கங்களில், அமைப்புகளில் செயல்பட்டுவரும் பலரும் சீமானை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். `மநு ராஜாவிற்கு எதிராகவும், ஆ ராசாவுக்கு ஆதரவாகவும் வலுவாக அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். அவருக்கு எனது அன்பான பாராட்டு' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார். அதேபோல, சீமானுக்கு இருக்கும் தைரியம் திமுக தலைமைக்குத் தேவை எனவும் ஒருசிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ராசாவை சீமான் ஆதரிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜென்டா. அது திமுகவை டேமேஜ் செய்வதற்காகவே ஆதரிக்கிறார் என்றும் ஒருசிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆகமொத்தம், ராசாவுக்கு ஆதரவாக சீமான் பற்றவைத்த நெருப்பு சமூக வலைதளங்களில் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.