Published:Updated:

`மோடி அரசைப் படங்களில் சாடிய தம்பி; குறிவைக்கும் வலதுசாரிக் கும்பல்!' - விஜய்க்கு ஆதரவாக சீமான்

விஜய் - சீமான்
விஜய் - சீமான்

``'ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு' என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள்போல, தம்பி விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்." - சீமான்

நடிகர் விஜய்யும், அவரது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும்தான் சமீபத்திய பரபரப்பு. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு நுழைவுவரி கூடாது என எல்லா ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களையும்போலவே விஜய்யும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல், விஜய்யைப் பற்றி நீதிபதி வெளியிட்ட கருத்துகள் விவாதத்துக்குள்ளாகின.

இந்த விவகாரத்தில், முதலில் விஜய்க்கு எதிரான குரல்கள் எழுந்தன. பின்னர், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலதரப்பட்டவர்களும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``இந்தியக் குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்டவர்களை நடிகர் எனப் பார்ப்பது தவறு'' என விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். பா.ஜ.க-வின் காயத்ரி ரகுராமும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன?

இந்தநிலையில், இன்று விஜய்க்கு ஆதரவாகவும், மக்கள்மீது அரசாங்கம் சுமத்தியிருக்கும் வரிச்சுமை பற்றியும் மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அந்த அறிக்கையில், ``தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய், 2012-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரி செலுத்திவரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அவர் வரி ஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணமும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர்மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி, மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கு எதிராகக் குரலெடுக்கக் கூடாது என்பதற்காகவுமே வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

அந்த சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை என்றபோதிலும், பாஜக-வின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சிகொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

தான் வாங்கிய சொகுசு காருக்காகச் செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது.

ஒன்பது ஆண்டுக்கு முன்பாகத் தொடுத்த வழக்கின் கீழ் தற்போது வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. கடந்தகாலங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வாறு வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்நாட்டில் நடந்துள்ளன. எனவே, நுழைவு வரிக்கு விலக்கு கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல'' என்று குறிப்பிட்டிருக்கிறார் சீமான்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரி விலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால், அந்தத் தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப்போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக் கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது.
சீமான்

மேலும், ``பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல், வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்துக்காக, தம்பி விஜய்யைக் குற்றவாளிபோல சித்திரித்து அவர்மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த நாட்டில் வரி, வரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்த பிறகு, வியாபாரிகள், தொழில்துறையினர் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு வயது அன்பு மகள் மித்ரா முதுகெலும்பு தசை நார் சிதைவு எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, நோயை குணப்படுத்த மரபணு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ரூ 16 கோடி ரூபாயை உலகெங்கும் வாழும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் மித்ராவின் பெற்றோர் அரும்பாடுபட்டுத் திரட்டியபோதும், அந்த மருந்துகளைப் பெறுவதற்கான மத்திய அரசின் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்காக மேலும் 6 கோடி ரூபாய் தேவைப்படும் நிலை. அதற்கு விலக்கு கேட்டுப் பெறும் கொடுஞ்சூழல் இந்த நாட்டில் தற்போது நிலவுவதை மறுக்க முடியுமா?

சீமான்
சீமான்
நீதிமன்றத்தின் கண்டிப்பு, அப்பாவோடு சண்டை, மத அடையாளம் - விஜய்யை வட்டமடிக்கும் சர்ச்சைகள்!
விஜய் வரிவிலக்குச் சலுகை கேட்டதற்காகப் பொங்கித் தீர்க்கும் பெருமக்கள் பல ஆயிரம் கோடியிலான மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்... அவர்களைத் தப்பிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த மோடி அரசுமீது என்ன விமர்சனத்தை வைத்தார்கள்?

இன்றுவரை பல லட்சம் கோடியிலான மக்களின் வரிப்பணம், வாராக்கடனாக மாற்றப்பட்டு, ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரும் முதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்?

`வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு' என வள்ளுவப்பெருந்தகை கூறியதுபோல, வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையாக இருக்கக் கூடாது என்பதைக் கூறிக் கண்டிக்கிறோம்.

வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகளே மக்களுக்கெதிராக இருக்கும்போது அதைக் கூறினாலும், அரசாங்கம் செவிமடுக்காதபோது ஒரு குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? ஆகவே, சட்டம் தனக்கு வழங்கியுள்ள வாய்ப்பின்படி முறையாகவே நீதிமன்றத்தை நாடினார் தம்பி விஜய்.

கடந்தகாலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சிமுறைகளைச் சாடி, திரைப்படங்களில் தம்பி விஜய் கூறிய கருத்துகளுக்காக, தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, அவரைப் பழிவாங்கத் துடிப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாகும். அதை முறியடிக்கவும், அவதூறு பரப்புரைகளையும், மறைமுக அழுத்தங்களையும் எதிர்கொண்டு மீண்டுவரவும் அவருக்குத் துணை நிற்பேன்.

விஜய்
விஜய்
`ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு' என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள்போல, தம்பி விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் சீமான்.
அடுத்த கட்டுரைக்கு