Published:Updated:

`அவரை குடும்பத்தினரிடம் ஒப்படையுங்கள்’ - முகிலனுக்கு ஆதரவாக ஒலிக்கும் சீமான் குரல்!

``சகோதரர் முகிலனை மீட்டு உடனடியாக அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்
சீமான் ( நாம் தமிழர் கட்சி )

முகிலன் எங்கே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 141 நாள்களுக்குப்பிறகு விடை கிடைத்துள்ளது. ஆந்திராவிலிருந்து அவரை மீட்டு சென்னை கொண்டுவந்துள்ளனர் காவல்துறையினர். சென்னையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைக்காண அவரின் மனைவி வரும் வழியில், சிறிய விபத்து நேர்ந்துள்ளது.

முகிலன்
முகிலன்

இதனிடையே முகிலனை விடுவிக்க வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் குளித்தலை பாலியல் வழக்கில் அவர் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தமிழகத்தின் போராட்டக்களங்களில் அயராது பங்கேற்று வந்தவர், சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முகிலன். ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொலி ஆதாரத்தைச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்ட பிப்ரவரி 15 அன்று முதல் அவர் காணாமல் போனார்.

சீமான்
சீமான்

அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தமிழகமெங்கும் அடையாளப் போராட்டங்களும், ஆட்கொணர்வு மனுவின் வாயிலாக சட்டப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட வேளையில், தற்போது வெளியாகியிருக்கிற காணொலியின் மூலம் அவர் ஆந்திரக் காவல்துறையின் வசமிருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, சகோதரர் முகிலனை விரைவாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் அளித்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.