Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்?

சீமான்
சீமான்

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார் சீமான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையிலிருக்கும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 17,000 வாக்குகளுக்கு மேல் அள்ளியது நாம் தமிழர் கட்சி. ‘‘சென்னைக்கு மிக அருகில் எங்கள் கட்சிக்கு கிளைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கும் தொகுதி இதுதான். இதன் அடிப்படையில்தான், திருவொற்றியூரைத் தனது களமாகத் தேர்வுசெய்திருக்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’’ என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்!

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார் சீமான். முதல் பயணத்திலேயே தொகுதி மக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதில் உற்சாகத்திலிருக்கிறார். அதே உற்சாகத்துடன், மார்ச் 15-ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தவர், தொடர்ச்சியாக சில நாள்கள் வெளியூர் சுற்றுப்பயணம், இடையிடையே திருவொற்றியூரில் தேர்தல் பிரசாரம் என்று தன் பிரசாரப் பயணத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார். சீமானுக்கான வரவேற்பு ஒருபக்கமிருந்தாலும்... தி.மு.க., அ.தி.மு.க வேட்பாளர்கள் களத்தில் இறங்கிவிட்டால், அந்த வரவேற்பு நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்?

மறைந்த கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.சங்கரை, வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது அறிவாலயம். கே.பி.பி.சாமி இரண்டு முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, அவருக்கு ஆல் இன் ஆலாக இருந்தவர் சங்கர்தான். தொகுதியில் கணிசமாக வாழும் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், அந்தச் சமூகத்தின் வாக்குகளை வளைத்துவிடலாம் என்று தி.மு.க கணக்கு போடுகிறது.

அதேபோல, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.குப்பன், ஏற்கெனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். பதவியில் இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி குப்பன் மீது இருந்தாலும், கட்சியில் சீனியர் என்ற மதிப்பும், மீனவர் என்பதால் சமூக ஆதரவும் உண்டு.

 கே.பி.சங்கர் ,  கே.குப்பன்
கே.பி.சங்கர் , கே.குப்பன்

விளிம்புநிலை மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதைக் கணக்கிட்டுத்தான் இந்தத் தொகுதியில் களமாடுகிறார் சீமான். அதையே கழகங்கள் அவருக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. சீமானை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திருவொற்றியூரில் கரன்சி மழையைப் பொழியவைக்கத் தயாராகிவிட்டன கழகங்கள். ‘சீமானின் பேச்சை, வாக்குறுதிகளைத் தொகுதி மக்கள் ரசித்தாலும், பணத்தை இறக்கினால் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள்’ என்பது கழகங்களின் கணிப்பாக இருக்கிறது. தவிர, சீமானை அறிந்திருக்கும் அளவுக்கு, அவரது கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தைப் பெருவாரியான மக்கள் அறிந்திருக்கவில்லை. அதைக் கொண்டுசேர்ப்பது சீமானுக்குச் சவால்.

ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்?

பலமான கட்சிக் கட்டமைப்பையும், தொகுதிக்குள் நல்ல அறிமுகத்தையும் பெற்றுள்ள தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை சீமான் எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு