Published:Updated:

`பாஜக-வுக்குப் பயப்படுகிறது திமுக’ - சீமான் குற்றச்சாட்டு | இடும்பாவனம் கார்த்தி Vs இராஜீவ் காந்தி

சீமான் - இராஜீவ் காந்தி - இடும்பாவனம் கார்த்தி

எதனடிப்படையில் சீமான் இப்படியொரு கருத்தைச் சொல்கிறார் என நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். அவர் தெரிவித்த கருத்துகளும், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி அளித்த பதில்களையும் காணலாம்.

Published:Updated:

`பாஜக-வுக்குப் பயப்படுகிறது திமுக’ - சீமான் குற்றச்சாட்டு | இடும்பாவனம் கார்த்தி Vs இராஜீவ் காந்தி

எதனடிப்படையில் சீமான் இப்படியொரு கருத்தைச் சொல்கிறார் என நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். அவர் தெரிவித்த கருத்துகளும், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி அளித்த பதில்களையும் காணலாம்.

சீமான் - இராஜீவ் காந்தி - இடும்பாவனம் கார்த்தி
''தி.மு.க அரசை பா.ஜ.க-தான் இயக்குகிறது, விரைவில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி அமைக்கும்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கருத்தைச் சொல்ல, ''சீமான் தன் சொந்தக் கற்பனையில் ஏதேதோ பேசுகிறார்'' என தி.மு.க அவருக்கு பதிலடி கொடுக்க அதகளமாகியிருக்கிறது தமிழக அரசியல் களம்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் கொலை வழக்கில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

''மத்திய அரசின் தயவில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. அதை அடிமை ஆட்சி என்றார்கள். இன்று மத்திய அரசை அனுசரித்து இவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். இது கொத்தடிமை ஆட்சி. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆளுநரைப் பார்க்கிறார்கள், அவர் ஓர் உத்தரவு போட்டதும் இல்லம் தேடி கல்வித் திட்டம் வருகிறது. திரும்பவும் ஆளுநரைப் பார்க்கிறார்கள், புதிய கல்விக்கொள்கையில் சில விஷயங்களை எடுத்துக்கொள்வோம் என்கிறார்கள். இதிலிருந்தே இந்த அரசை யார் இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது'' என்றார்.

சீமான்
சீமான்

தொடர்ந்து பேசியவர், ``விரைவில் பா.ஜ.க-வோடு தி.மு.க கூட்டணிவைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த ஆட்சி அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. பிரச்னைகளின் அடிப்படையில் பா.ஜ.க-வை ஆதரிக்கத் தயார் என்கிறார்கள். பிரச்னையே பா.ஜ.க-தான். நாட்டின் நலன் கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்போம் எனச் சொல்வார்கள் என இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே நான் சொல்லிவிட்டேன்'' என்றார் சீமான்.

அவரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்றிவருகின்றனர். இந்தநிலையில் எதனடிப்படையில் சீமான் இப்படியொரு கருத்தைச் சொல்கிறார் என நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். அவர் தெரிவித்த கருத்துகளும், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி அளித்த பதில்களையும் அடுத்தடுத்து இங்கே காணலாம்.

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

''அண்மையில் ஒரு பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் இருக்கிறது. அதற்கு ஆளுநர் ஆதரவுதர வேண்டும் என தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறார். ஆளுநருக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை என்பதுதான் இவ்வளவு காலம் பேசப்பட்டுவந்த ஒரு விஷயம். ஆளுநர் தலையிடுவது மாநிலத் தன்னாட்சிக்கு எதிரானது என்பதுதான் முழக்கம். ஆளுநர் ஆதரவுதர வேண்டும் என்கிற கருத்து ஆளுநருக்கு அடிபணிவதுபோலிருக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்குப் புறப்பட்டபோது எதிர்த்த தி.மு.க., இந்த ஆட்சியில் துறைவாரியான செயல்திட்டங்களை பவர் பாயின்ட் பிரசன்டேஷன் கொடுக்க, சுற்றறிக்கை வெளியிடுகிறார்கள்.''

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி
பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி

இராஜீவ் காந்தி, தி.மு.க

``கடந்த ஆட்சியில், ஆளுநர் ஆய்வு சென்றபோது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆட்சியில் அப்படி நடந்ததாக எந்தச் செய்தியும் இல்லை. ஆளுநர் தன் அதிகாரங்களை மீறி, தன்னிச்சையாக ஆலோசனை செய்வது, உத்தரவு போடுவது போன்ற விஷயங்கள்தான் தவறு. கடந்த ஆட்சியில் அது நடந்தது. இந்த ஆட்சியில் அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை. ஆளுநர் பதவியையே மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை. அதேவேளையில், ஆளுநர்தான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதற்காக ஆளுநரை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தமல்ல. நிர்வாகம் குறித்து விளக்கம் கேட்பதற்கு, அறிவுரை கூறுவதற்கு அரசியலமைப்புச் சட்டப்பட்டி ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதையும், அவர் நேரடியாக அதிகாரிகளிடம் கேட்கவில்லை. முதல்வரின் ஒப்புதலோடு, தலைமைச் செயலகத்தில் இருந்துதான் அதற்கான சுற்றறிக்கை சென்றது.

தமிழக அரசு ஒருபோதும் ஆளுநருக்கு வகுப்பெடுக்க முடியாது. அதேவேளையில், தனிப்பட்ட ரவி என்பவர் மும்மொழிக் கொள்கை நல்லது என ஒரு கருத்து சொல்லும்போது, அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அமைச்சர் பொன்முடி அவரின் கருத்துக்கு ஒரு பதில் கருத்தை முன்வைத்தார். அது ஒரு உரையாடல் அவ்வளவுதான்.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

'' புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்கள். தமிழ்நாட்டுக்கு மாற்றுக் கல்விக் கொள்கையை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்து அதைத்தான் செயல்படுத்துவோம் என்றார்கள். ஆனால், தற்போது, புதிய கல்விக் கொள்கையை மறுக்காமல், அதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம் என்கிறார்கள். எதனடிப்படையில் நல்லது என்று தீர்மானிக்க முடியும்... நம்மிடம் இல்லாத ஒன்று அதில் என்ன இருக்கிறது?''

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இராஜீவ் காந்தி,தி.மு.க

``புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியாவிலேயே மிக வெளிப்படையாகச் சொன்ன ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரித்துவிட்டோம். அதனால்தான், கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் வழக்கு தொடர்ந்துள்ளார். மாநில அரசுக்கென ஒரு கல்விக் கொள்கையைக் கொண்டுவந்துவிட்டோம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் எங்கும் சொல்லவில்லை. நாங்கள் எங்களுக்கான கல்விக் கொள்கையை உருவாக்குகிறபோது பிற நாடுகளில், மாநிலங்களில் உள்ள கல்வித் திட்டங்களில் உள்ள நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் அதையும் எடுத்துக்கொள்வோம் என்றுதான் சொன்னோம்.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

''கடந்த ஆட்சியில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவராக ஜெகதீஷ் குமார் என்பவரைக் கொண்டுவந்ததற்கு, அவர் ஆர்.எஸ்.எஸ் பின்புலம்கொண்டவர், அவரை நியமனம் செய்யக் கூடாது எனக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். ஆனால், இந்த ஆட்சிக்காலத்தில், பாலகுருசாமியை மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கிறார்கள்.''

பாலகுருசாமி
பாலகுருசாமி

இராஜீவ் காந்தி, தி.மு.க 

'' ஒரு கல்வியாளராக பாலகுருசாமி தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அவர் தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரராக எங்கேயும் காட்டிக்கொள்ளவும் இல்லை. கல்விக்குச் சம்பந்தமில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் அறிமுகமும் இல்லாத, முழுமையாக ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இவரும் நபர்களைக் கொண்டுவரும்போது நாங்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறோம். ஆனால், பாலகுருசாமிக்குப் புதிய கல்விக் கொள்கை சார்ந்து ஒரு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு கல்வியாளர் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

``இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறு. இன்னும் சொல்லப்போனால் அது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் விரும்புகிற ஒரு திட்டம். பள்ளிக்கூடம் என்கிற கட்டமைப்பைச் சிதைத்துவிட்டு, ஆதிக்கம் நிறைந்த சாதிய வேறுபாடுடைய ஒரு கல்விமுறையை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காகத்தான் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.''

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்

இராஜீவ் காந்தி, தி.மு.க 

``கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி போய்ச் சேராத அரசுப்பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு கல்விமுறை 'இல்லம் தேடி கல்வி.’ இடைநிற்றலைக் கருத்தில்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் அதிகமான பாடத்திட்டங்களைக் கொடுக்க முடியாது. அதனால், அரசே வீடுகளுக்குச் சென்று சொல்லிக்கொடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை. இதை பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

`` ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது என ஒரு கோஷத்தை முன்வைக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அப்பாவி இஸ்லாமியர்கள் என்கிற வாதத்தை முன்வைத்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு மதத்தை அளவுகோலாக வைத்து இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கிறது. மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமையை மறுக்கிற பா.ஜ.க-வுக்கும், விடுதலையை மறுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது?''

குடியுரிமை மாநாடு
குடியுரிமை மாநாடு

இராஜீவ் காந்தி, தி.மு.க

``அரசின் அறிவிப்பாணையில் மதம், சாதி, மொழி குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. கருணையை இதற்குள் அடக்கவும் கூடாது என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. ஆனால், கருணை மனுக்களில் குற்றவாளிகளின் பின்புலம் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும்கூட சில வழக்குகளில் விடுதலை செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறது. அதை மீறி நாம் செயல்படும்போது, அதைக் காரணம் காட்டி மற்ற சிறைவாசிகளின் உரிமை மறுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில் இஸ்லாமியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாகப் பரிசீலிக்கும். ஏற்கெனவே ஒருசிலர் விடுதலையும் ஆகியிருக்கிறார்கள்.

அதேவேளையில் இஸ்லாமிய சிறைவாசிகள் என்கிற கருத்துருவாக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் சிறைவாசிகள்தான். சட்டப்படி அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை இந்த அரசு பரிசீலனை செய்யும். இந்த விவகாரத்தை, இன, மொழி அடையாளத்துக்குள் கொண்டு வந்து நாம் தமிழர் கட்சிதான் அரசியல் செய்கிறது. எழுவர் விடுதலையை சீமான் சிக்கலாக்குகிறார் என்றுதான் நான் பார்க்கிறேன்.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

``திருப்பூரில் அரசுப் பள்ளி நூலகத்துக்குப் பெரியார் இயக்கத் தோழர்கள், `பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை வழங்கினர். இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டு பா.ஜ.க-வினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். அந்த விவகாரத்தில், பிரச்னை செய்த பா.ஜ.க-வினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக அந்தப் புத்தகம் வைக்கப்படாது என உறுதியளிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்களில் அரசு நிகழ்வு இல்லாத மோடியின் மதம் சார்ந்த நிகழ்வு தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. அறநிலையத்துறையின் ஒப்புதலோடு நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இது சட்டத்துக்கு எதிரான செயல் இல்லையா?

அடுத்ததாக, 'இந்தியாவை இந்துக்கள் நாடு' என்கிறார் ராகுல் காந்தி. அதற்கு இது மதச்சார்பற்ற நாடு, ஜனநாயக நாடு என தி.மு.க பேசாமல் இருப்பது ஏன், இல்லை என்றால் இந்தக் கருத்துக்கு கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் ரியாக்‌ஷன்தான் என்ன?''

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இராஜீவ் காந்தி, தி.மு.க

``அந்தப் பகுதி சார்ந்து சட்டம், ஒழுங்கு பிரச்னையை சரிசெய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. அதற்காக ஒட்டுமொத்த அரசும் அடிமையாகிவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை எதுவும் இல்லை. புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்பனையாகிற புத்தகமாகவும் அதுதான் இருக்கிறது.

கோயில்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது தொடர்பாக, அறநிலையத்துறையின் சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அது சார்ந்த நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துதான் வருகிறது.

சட்டப்படி ராகுல் காந்தி இந்துதான். அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், சீமானின் கூட்டாளிகளான இந்துத்துவவாதிகளைப் பற்றி அவர் விமர்சிப்பதால், இந்தக் கேள்வியை எழுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

`` `கொங்கு நாடு' என ஒரு நாளிதழ் எழுதியபோது உடனடியாக ரியாக்ட் செய்த தி.மு.க., அந்தக் கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்போகிறது என அதே நாளிதழ் முதற்பக்கத்தில் எழுதியபோது அமைதியாகக் கடந்துபோகிறது. அதற்கு வாய்ப்பே இல்லை என மறுக்கவில்லை?''

பா.ஜ.க - தி.மு.க
பா.ஜ.க - தி.மு.க

இராஜீவ் காந்தி,தி.மு.க

``கொங்குநாடு விஷயத்துக்கு எதிர்வினை ஆற்றினோம் என்றால் அது ஒட்டுமொத்த மாநிலம் சார்ந்த பிரச்னை. அதனால், உடனடியாக எதிர்வினை ஆற்றினோம். ஆனால், இது கட்சி சார்ந்த விஷயம். அதுவும் கற்பனையான விஷயம். அதற்கு நாங்கள் ஏன் ரியாக்ட் செய்ய வேண்டும்... பத்திரிகைகளில் ஆயிரம் விஷயங்கள் எழுதுவார்கள். சீமானுக்கு பல கோடிகள் சொத்து இருக்கிறது என்றுகூடத்தான் எழுதுகிறார்கள். அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாரா என்ன?''

இடும்பாவனம் கார்த்தி, நா.த.க

''பா.ஜ.க எதிர்ப்பு என்பதைப் பிரதானப்படுத்திதான் தி.மு.க அதிகாரத்துக்கு வந்தது. அதிகாரத்துக்கு வந்த பிறகு, நீட், எழுவர் விடுதலை, மீனவர் படுகொலை, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட அனைத்து விஷயத்திலும் பா.ஜ.க விரும்புவதைத்தான் இந்த அரசு செயல்படுத்துகிறது. மாநிலத் தன்னாட்சி என்பதை விடுங்கள். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தவே இந்த அரசு திணறுகிறது. மோடியை எதிர்ப்பதாகச் சொன்ன தி.மு.க., ஆளுநரை எதிர்ப்பதற்கே தயங்குகிறது. தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், பா.ஜ.க புகுந்துவிடும் என்றார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க-வே பா.ஜ.க-வுக்குள் புகுந்துவிட்டது''

இடும்பாவனம் கார்த்தி - இராஜீவ் காந்தி
இடும்பாவனம் கார்த்தி - இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி, தி.மு.க 

``சீமான் பேசுவது எல்லாமே அவருடைய சொந்தக் கற்பனை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து பேசிவருகிறார். தி.மு.க-வை எதிர்த்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும். அப்போதுதான் தன் பின்னாள் திரண்டிருப்பவர்களைத் தக்கவைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்.''