Published:Updated:

ரஜினிக்கு நோ... விஜய்க்கு எஸ்... சீமானின் அரசியல் கணக்கு என்ன?

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளின்போதும் சோர்வடையாத சீமானும் அவரது தம்பிகளும், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிக சோர்வுக்கு ஆளாகினர். அதற்குக் காரணம் என்ன?

சீமான்
சீமான்
"யார் யாரோ அரசியலுக்கு வரும்போது, என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு? ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. விஜய் என்னுடைய தம்பி. மக்கள் அவருக்கு வாக்களிச்சா, நான் பாராட்டுகளைத் தெரிவிப்பேன். எனக்கு வாக்களிச்சா நன்றியைத் தெரிவிப்பேன்."
'உலக காணாமல் போனவர்கள் (ஆகஸ்ட் 30 ) தினத்தன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதிர்த்த வார்த்தைகள் இவை.
Vijay
Vijay

சீமானின் இந்தக் கருத்தை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று, 'தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்' என்ற அவர் கட்சியின் கொள்கைப்படி, நடிகர் விஜய்யைத் தமிழனாகப் பார்ப்பது. (ரஜினி அரசியல் வருகைக்கு அவர், ஒரு மராட்டியர் வரக்கூடாது எனத் தொடர்ந்து சீமான் பேசிவருவதை இங்கு கவனிக்க வேண்டும்.) மற்றொன்று, தன் கூட்டணிக்கான பங்காளியாக நடிகர் விஜய்யை, அவரின் அரசியல் வருகையை எதிர்பார்ப்பது.

'அவர் வந்தால் வரவேற்போம் என்றுதான் சொன்னோம், கண்டிப்பாக அவர் வரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை' என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி, சமூக ஊடக விவாதங்களில் தெரிவித்துவந்தாலும், சீமானும் அவரின் தம்பிகளும், விஜய்யின் அரசியல் வருகையை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதே யதார்த்த உண்மை. மற்ற யார் வருவதைக் காட்டிலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், நாம் தமிழர் கட்சிக்கான இயல்பான கூட்டணியாக அது அமையும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல் முடிவுகளில் கிடைத்த கசப்பான சில அனுபவங்கள்தாம் கூட்டணிகுறித்து அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.

Adhithanaar
Adhithanaar

சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்டு, எதிர்கால சந்ததியினர் இதை எடுத்து நடத்துவார்கள் என அவரால் கைவிடப்பட்ட ஓர் இயக்கம்தான் 'நாம் தமிழர் இயக்கம்'. 2009-ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு எதிராக, தமிழகத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியை ஒருங்கிணைக்க மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக சீமான் தேர்ந்தெடுக்கப்பார். தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே, அதைக் கட்சியாகப் பரிணமிக்கச் செய்தார் சீமான். அதைத் தொடர்ந்து, நடந்த 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை.

"அவர், பனியன் விளம்பரம்தான் பண்ணுறார். அவர் ஒண்ணும் கட்சி ஆரம்பிச்சது மாதிரி தெரியல. ஒரு பனியன் எடுத்து காட்டுறார் அவ்வளவுதான். அவர், மக்கள் நல இயக்கம்தான் ஆரம்பிச்சிருக்கிறார். அது யாரு வேணும்னாலும் செய்யலாம். பெரியார், தேர்தலில் போட்டியிடாம, பதவிக்கு வராம மக்களுக்கு சேவை செய்தார். அதுபோல விஷால் செஞ்சா வரவேற்கலாம். அவரை இந்த மக்கள் வாழவைக்கிறார்கள். அதனால், அதை அவர் செய்வதில் தப்பில்லை. ஆனால், தமிழகத்தை ஆள வேண்டும் என நினைப்பது தவறு. தமிழகத்தை ஆள விஷால் நினைக்கக் கூடாது!"
சீமான்

முதன்முறையாக, 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. தமிழகமெங்கும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார் சீமான். கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், அதிகபட்சமாக 12,497 வாக்குகளையும், அவருக்கு அடுத்ததாக சென்னை சோழிங்கநல்லூரில் போட்டியிட்ட ராஜன் என்பவர், 8,000 வாக்குகளையும் பெற்றனர். சில தொகுதிகளில் 5,000, 3,000, 2,000 என நான்கிலக்கங்களிலும், ஒரு சில தொகுதிகளில் மூன்றிலக்கங்களிலும் வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக 4,58,104 வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிதம் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றது. தி.மு.க, அ.தி.முக, பா.ம.க, மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் என ஐந்து முனைப்போட்டி நிலவியதாலேயே, கடலூரில் சீமானால் வெல்ல முடியவில்லை என அவரது கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.

கமலுடன் சீமான்
கமலுடன் சீமான்

தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொண்டிருந்த தமிழகத்தில், தொடர்ந்து அ.தி.மு.க வெற்றிபெற, அதைவிட தி.மு.க தோல்வியடைய நாங்கள் பெற்ற வாக்குகள்தான் காரணம் என மார்தட்டிக்கொண்டனர் நாம் தமிழர் கட்சியினர். அதற்கு, தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவிகிதம்தான். நாங்கள் வாங்கியதும் அதே 1.1 சதவிகிதம்தான் என ஒரு கணக்கைச் சொன்னார்கள். 2017-ம் ஆண்டு, ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 3,802 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி.

ரஜினி அரசியலுக்கு வருவதாக நீண்ட காலமாகவே கூறிக் கொண்டிருக்கிறார். அவர் வரட்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம். மராட்டியனா, மானத் தமிழனா? என்று பார்த்து விடுவோம். அவரது வருகைக்காகக் காத்திருக்கிறேன். ஐ ஆம் வெயிட்டிங்.
சீமான்

இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை, 40 தொகுதிகளிலும் நம்பிக்கையுடன் சந்தித்தனர், நாம் தமிழர் கட்சியினர். 20:20 என ஆண்களையும் பெண்களையும் சரிசமமாக வேட்பாளராக்கினார் சீமான். வட சென்னையில் போட்டியிட்ட காளியம்மாள் என்கிற பெண் வேட்பாளர், ஒரேயொரு வீடியோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அதிக வாக்குகளைப் பெறுவோம் என நம்பிக்கையோடு காத்திருந்தனர். தேர்தல் முடிவும் வந்தது. 38 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 16,45,185 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07-லிருந்து 3.87 ஆக அதிகரித்தது. எனினும், ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரம், நிரந்தரச் சின்னம் என ஆவலோடு காத்திருந்த சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் தேர்தல் முடிவுகள் ஒன்றும் அவ்வளவு உவப்பாக இல்லை.

Kaliyammal
Kaliyammal

கட்சி தொடங்கி பத்தாண்டுகள் ஆன நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள், 16,45,185 லட்சம். எனில், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளோ 15.73 லட்சம் . ஒப்பீட்டளவில் நாம் தமிழர் கட்சியினர் செய்த அளவுக்கு, மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் வேலை செய்யவில்லை என்பதே கள யதார்த்தம். ஒருசில இடங்களில் மூன்றாம் இடத்துக்கு வந்திருந்தாலும், பெருநகரங்களில் எல்லாம் மக்கள் நீதி மய்யமே மூன்றாம் இடத்தைப் பிடித்தது. அதற்குக் காரணம், கமல் என்கிற பிரபல பிம்பம்தான் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர் நாம் தமிழர் கட்சியினர். கூடுதலாக, கூட்டணி குறித்தும் சிந்திக்க ஆரம்பித்தனர்.

"தேர்தலில் அவருடைய (கமல்) பங்களிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்படத்தைப் போலவேதான் அரசியலையும் பார்க்கிறார். 50 வருடம் நடித்திருக்கிறார். என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள், 'வெள்ளையாக இருப்பவர் பொய் பேசமாட்டார்' என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவரை ஒரு பர்சனாலிட்டியாகப் பார்ப்பவர்கள்தான் அதிகம்!''
சீமான்
NRK - MDMK
NRK - MDMK

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளின்போதும் சோர்வடையாமல் இருந்த சீமானும் அவரது கட்சியினரும், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிக சோர்வுக்கு ஆளாகினர். 'பணபலம், அதிகார பலம் மிக்க இருபெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை' என யோசிக்கத் தொடங்கினர். கூட்டணி ஒன்றுதான் இனிவரும் தேர்தலில் வெல்வதற்கான ஒரே வழி எனவும் உணரத் தொடங்கினர். எனில், யாருடன் கூட்டணி அமைப்பது? தேசிய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. சொந்தக் கட்சியினரே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தினகரனின் அ.ம.மு.க-வும் ஏறக்குறைய இன்னொரு அ.தி.மு.க என்பதுதான் நாம் தமிழர் கட்சியினரின் எண்ணம். வைகோ வெளிப்படையாகவே நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை எச்சரித்துப் பல இடங்களில் பேசி வந்தது உட்பட, ம.தி.மு.க-வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.

`எங்களுடன் வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி’ என்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பா.ம.க, சீமானைத் தன்னுடன் இழுத்துக்கொள்ள நினைத்தாலும் சீமான் அதற்குத் தயாராக இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டும்தான் இருக்கிறது. அதுவும் தொடர்ந்து தி.மு.க ஆதரவு நிலையிலேயே இருப்பதால், அதற்கான வாய்ப்புகளும் மங்கிய நிலையிலேயே இருக்கிறது. வி.சி.க-வும் தி.மு.க கூட்டணியில்தான் தொடர்ந்துவருகிறது.

நீங்க எம்.ஜி.ஆரா... ரஜினியா? இதுல `am waiting' வேணாம் விஜய்!

நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருப்பது கமலின் மக்கள் நீதி மய்யம்தான். ஆனால், கமலின் சில அரசியல் கருத்துகள் சீமானின் அரசியல் கருத்துகளுக்கு நேர் எதிராக இருப்பதும், கமல் கட்சி தொடங்கும் போது, அவரை சீமான் நேரில் சென்று சந்தித்ததும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியினரின் லிஸ்ட்டில் இல்லை.

தமிழகம் முழுவதும், கடந்த 40 நாள்களுக்கும் மேலாக அத்தி வரதருக்குத்தான் தொலைக்காட்சிகளில் அதிக வரவேற்பு இருந்தது. தற்போது அவர், குளத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கடைசியாக ரஜினிகாந்த்தும், நயன்தாராவும் பார்த்து குட்பை வைத்து அனுப்பியுள்ளனர். இங்கு குறிப்பிட்டுக் கூறி மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம் என்னவென்றால், அத்தி வரதர் வருகையால், திருப்பதி வெங்கடாசலபதியின் மவுசு குறைந்துவிட்டது என்பதுதான். அதாவது, தம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்ததுபோல.
சீமான்

கருத்தியல் ரீதியாக ஒத்துப் போகக்கூடியவராகவும், நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்படி அசல் தமிழராக இருப்பதாலும், விஜய் அரசியலுக்கு வந்தால் அது இயல்பான கூட்டணியாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள், நாம் தமிழர் கட்சியினர். தவிர, ரஜினி, விஷாலின் அரசியல் ஆசைகளை எல்லாம் தம்பி விஜய்யின் அரசியல் வருகையின் மூலம் சிதறடிக்கலாம் என நினைக்கிறார் அண்ணன் சீமான். அதைத் தொடர்ந்துதான், ''ரஜினிக்கும் விஷாலுக்கும் அரசியல் ஆசை இருக்கும்போது, மண்ணின் மைந்தன் என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு?'' என மேடை அதிரப் பேசினார் சீமான். தம்பிகளின் கைதட்டல்களால் வான் அதிர்ந்தது.

Vijay
Vijay

'சர்கார்' படத்தின்போது விஜய்யை விமர்சித்துப் பேசிய சீமான், ''விஜய் மீதான அக்கறையில்தான் அப்படிப் பேசினேன்'' என தானாக முன்வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பதில் தந்தார். ''சிம்புவை சூப்பர் ஸ்டார் என்றீர்களே?'' என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''எட்டுக் கோடி மக்கள்தொகை கொண்ட தமிழினத்தில், இரண்டு சூப்பர் ஸ்டார் இருந்தால் என்ன தப்பு? விஜய்க்குப் பிறகு தம்பி சிம்பு இருந்துவிட்டுப் போகட்டுமே!'' என்று பதிலளித்தார்.

காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை அத்தி வரதராகவும், ரஜினியை திருப்பதி வெங்கடாஜலபதியாவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். ''அத்தி வரதருக்குக் கூடிய கூட்டம், உள்ளூர் ஸ்டார் தம்பி விஜய்க்குக் கூடிய கூட்டமாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்'' என்றார்.

Seeman
Seeman

அது மட்டுமன்றி, ''ரஜினி, அஜித், விஜய் மூன்று பேரும் பேசும் அரசியல் வசனங்களில், தற்போது யாருடைய வசனம் மக்களிடம் அதிகமாகச் சென்று சேர்கிறது?'' என்று கேள்வி எழுப்பி, ''தம்பி விஜய்யின் வசனங்கள், பாடல்கள்தான் தமிழ் இனத்துக்கும் சமூகத்துக்கும் பயன்படும் வகையில் இருக்கின்றன'' என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து, ''ரஜினிக்கும் விஜய்க்கும் தான் தற்போது போட்டி. ரஜினி இன்னும் எத்தனை படங்களில் நடிப்பார். எவ்வளவு நாள்கள் நடிப்பார். இனி ‘விஜய்’தான். இதை நான் மட்டும் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது'' என்றார். மேலும், "நான் இதை இப்போது சொல்லவில்லை, 2006 - லேயே சன் டி.வி-யின் வணக்கம் தமிழகத்தில் சொல்லியிருக்கிறேன்'' என்றும் பேசினார்.

``ரஜினி யாரோ... ஆனால், விஜய் என் தம்பி!" - சீமான் சிறப்புப் பேட்டி

தரையில் அண்ணன், திரையில் தம்பி என்பது மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை சீமானின் கணக்காக இருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தரையிலும் தம்பியின் வருகையை, கூட்டணியை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறார் சீமான். தவிர, மற்றவர்கள் தன்னுடன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வேன், நான் யாருடனும் கூட்டணிக்குச் செல்ல மாட்டேன் என்றவர், தம்பி விஜய்க்காக அதையும் தளர்த்திக்கொள்வார் என்றே தெரிகிறது.