திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறவிருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ``தமிழகத்தில் வரும் 22-ம் தேதிதான் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் நடைபெறவிருக்கிறது. தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பட்டினப்பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக ஆத்திகர்கள், நாத்திகர்கள் என இல்லாமல், அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதலமைச்சர் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் எந்தப் பிரச்னையும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய ஒவ்வோர் அடியையும் யோசித்து எடுத்து வைக்கிறோம். மக்களுக்கான அரசாக தி.மு.க அரசு செயல்படுகிறது" என்றார்.

அதையடுத்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `நானே பல்லக்கு தூக்குவேன்' எனக் கூறினார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ``யாருக்கும் யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது. நியாயத்துக்குத்தான் பல்லக்கு தூக்க வேண்டும் என அவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.