Election bannerElection banner
Published:Updated:

விஐபி தொகுதி: துறைமுகம்... சேகர்பாபுவுக்கு சேதாரம் இல்லை!

சேகர்பாபு
சேகர்பாபு

தொகுதியை மீண்டும் தக்கவைக்க கடந்த ஓராண்டாகவே வேலை பார்த்துவருகிறார் சேகர்பாபு. இவருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம்.

சென்னை உயர் நீதிமன்றம், பிராட்வே பேருந்து நிலையம், சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது துறைமுகம் தொகுதி. இதுவரை இங்கு தி.மு.க-தான் அதிகமுறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சேகர்பாபு இங்கு மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் வினோஜ் பி.செல்வமும், அ.ம.மு.க சார்பில் சந்தானகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள்.

வினோஜ் பி.செல்வம்
வினோஜ் பி.செல்வம்

தொகுதியை மீண்டும் தக்கவைக்க கடந்த ஓராண்டாகவே வேலை பார்த்துவருகிறார் சேகர்பாபு. இவருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம். அதனால், ஒவ்வொரு மாதமும் கோயிலில் 700 பெண்களை வரவழைத்து விளக்கு பூஜை நடத்தினார். ‘ஒருமுறை கலந்துகொண்ட பெண்கள், மறுமுறை கலந்துகொள்ளக் கூடாது; புதியவர்கள்தான் வர வேண்டும்’ என்கிற நிபந்தனையுடன் நடத்தப்பட்ட விளக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கலந்துகொள்ள வைத்ததுடன் கையோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தவிர, ஐந்தாண்டுகளாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி மையங்களை இலவசமாக நடத்திவருகிறார். இவையெல்லாம் ஓட்டுகளாக மாறும் என்பது சேகர்பாபுவின் நம்பிக்கை.

அதேசமயம், “தொகுதியில் கணிசமாக இருக்கும் மார்வாடி சமூகத்தினரிடம் சேகர்பாபுவின் ஆட்கள் கடந்த காலங்களில் பல்வேறு பஞ்சாயத்துகளைப் பேசி முடித்திருக்கிறார்கள். அந்தக் கோபம் சேகர்பாபு மீது அவர்களுக்கு இருக்கிறது” என்கிறார்கள் பா.ஜ.க-வினர். “கட்சித் தலைமையுடன் நெருக்கம் என்பதால், லோக்கல் கட்சி நிர்வாகிகளை அதிகார தோரணையுடன் நடத்துகிறார். இதனால், அவர்கள் மனமுவந்து இவருக்கு வேலை பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது” என்கிறார்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள். இவையெல்லாம் சேகர்பாபுவுக்கு மைனஸ்.

சேகர்பாபு
சேகர்பாபு

அ.தி.மு.க-வில் இந்தத் தொகுதியை முன்னாள் எம்.பி பாலகங்கா மிகவும் எதிர்பார்த்தார். ஆனால், தமிழிசை சௌந்தரராஜன் மூலம் அழுத்தம் கொடுத்து தொகுதியைப் பெற்றுவிட்டது பா.ஜ.க. அந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் வினோஜ், தொகுதியில் கணிசமாக இருக்கும் தனது சமூகம் சார்ந்த செட்டியார் வாக்குகளும், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் மார்வாடி சமூகத்தினரின் வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார். இன்னொரு பக்கம் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் பாலகங்கா ஆதரவாளர்கள் இங்கு தேர்தல் வேலை செய்யவில்லை. இது வினோஜுக்கு மைனஸ். அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணனுக்குத் தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லை என்றாலும், அவர் பிரிக்கும் சொற்ப ஓட்டுகளும்கூட அ.தி.மு.க கூட்டணிக்கு மைனஸ்தான்.

கள நிலவரம் சேகர்பாபுவுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு