Published:Updated:

`சட்டவிரோத பணப்பரிமாற்றம்; சி.பி.ஐ வழக்கு!’ - திருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சி.பி.ஐ கைதுசெய்ததால், திருப்பதி தேவஸ்தான பதவியை இழந்தார் சேகர் ரெட்டி. தேவஸ்தான குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக மீண்டும் அவரையே நியமித்திருப்பது, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

வேலூர் காட்பாடியை அடுத்த தொண்டான் துளசிதான் சேகர் ரெட்டியின் ஊர். ஆரம்ப காலத்தில் சிறிய கான்ட்ராக்டராக இருந்த சேகர் ரெட்டிக்கு `அரசியல்’ தொடர்புகள் விரிவடைந்ததால் பெரிய கான்ட்ராக்ட்கள் கிடைத்தன. மணல் கான்ட்ராக்ட்டும் இவரிடம் கை மாறின. ஜெயலலிதா ஆட்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை அவர் அவ்வளவு பிரபலம் இல்லை. 

ஓ.பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி
ஓ.பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி

ஓ.பன்னீர்செல்வத்துடன் மொட்டைப் போட்டபோதுதான் அவரது புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிந்து கைதுசெய்தது.

தேவஸ்தானத்திலிருந்தும் சேகர் ரெட்டி நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த அவர் சென்னையில் அ.தி.மு.க வட்டாரத்துடன் நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் சேகர் ரெட்டி. எந்த பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்தார் என சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்ததோ, அதே பதவியில் மீண்டும் அவரையே அமரவைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு ஆணை
அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு ஆணை

அமலாக்கத்துறை வழக்குகள் உட்பட இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம், பெரிதாகப் பொருட்படுத்தாமல் சேகர் ரெட்டியைத் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், பெரிய அளவில் பேரம் நடந்திருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதுதொடர்பாக விளக்கம் கேட்க சேகர் ரெட்டியின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். நீண்டநேரம் ‘ரிங்’ அடித்தது. அவர் எடுக்கவில்லை.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சேகர்ரெட்டி போன் மூலம் பேட்டி கொடுத்தார். அதில், ``இதுவரைக்கும் பெருமாளை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இடையில் ஏதோ நிகழ்வுகள் நடைபெற்றுவிட்டது. அதில், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே வியாபாரம். அதில் நான் பங்குதாரர் மட்டுமே. தேவஸ்தானத்துக்கு முக்கியப் பணிகளை நான் செய்துகொண்டிருந்தேன். வெளியில் தெரியாமலும் பெருமாளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறேன்.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

அறங்காவலர் குழுவில் பதவி கேட்டு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். `என் மீது நியாயம் இருந்தால் மீண்டுமொரு வாய்ப்பு கொடுங்கள்’ என்றேன். ஆந்திர முதல்வர், நல்ல மனசு வைச்சு எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்’’ என்று கூறினார்.