Election bannerElection banner
Published:Updated:

`தொகுதி மாற நினைத்தும் கைவிடாத வாக்காளர்கள்..!’ -செல்லூர் ராஜூவின் `ஆச்சர்ய’ வெற்றி #TNelections2021

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மாள் களமிறக்கப்பட்டார். அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டதால் சின்னமாளுக்கான தேர்தல் செலவில் திமுக-வும் தாராளம் காட்டியது.

தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ போட்டியிட்ட மதுரை மேற்குத் தொகுதி, 1980-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அப்போதிருந்தே இந்தத் தொகுதி, மக்களின் கவனம் ஈர்த்த தொகுதியாக இருந்துவந்தது.

இந்தத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரானார். அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்கள் அரசியலில் உச்சத்துக்குச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுக., திமுகவினர் மத்தியில் உண்டு.

கடந்த தேர்தலில் 82,529 வாக்குகளைப் பெற்று செல்லூர் ராஜூ வெற்றிபெற்றிருந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கோ.தளபதி 66,131 வாக்குகள் பெற்றிருந்தார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இந்த முறை, தொகுதியில் நிலவிய உட்கட்சிப் பூசல், அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செய்யாததால் மக்களிடையே காணப்பட்ட அதிருப்தி போன்றவற்றால், வெற்றி வாய்ப்பு கடினம் என்பதை உணர்ந்த செல்லூர் ராஜூ, இந்த முறை தொகுதி மாற நினைத்தார். மதுரை மேற்குடன், தெற்கு மற்றும் வடக்குத் தொகுதிகளுக்கும் சேர்த்து விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்குத் தொகுதியிலேயே போட்டியிடுமாறு வலியுறுத்தியதால், வேறு வழியின்றி அந்தத் தொகுதியிலேயே போட்டியிட்டார்.

செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மாள் களமிறக்கப்பட்டார். அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டதால் சின்னமாளுக்கான தேர்தல் செலவில் திமுக-வும் தாராளம் காட்டியது. ஆளுங்கட்சி செல்வாக்கு, அமைச்சரின் பண பலம் போன்றவை அதிமுக-வுக்குச் சாதகமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதியில் சிபிஎம்., சிபிஐ கட்சியினருக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு.  முன்னர் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம்வகித்த மதிமுக., சிபிஎம்., சிபிஐ., தற்போது திமுக கூட்டணியில் உள்ளன. இது திமுக வேட்பாளர் சின்னமாளுக்குக் கூடுதல் பலமாகச் சொல்லப்பட்டது.

கள நிலவரங்கள் இப்படி இருந்த சூழலில் காலையிலிருந்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவந்ததில், தபால் வாக்குகள் எண்ணும்போது  செல்லூர் ராஜூவுக்கு அது சாதகமாக இல்லை . ஆரம்பத்தில் பின்னடைவிலேயே இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்னம்மாள் முன்னிலையில் இருந்தார். ஆனால், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது செல்லூர் ராஜூ முன்னிலைக்கு வரத் தொடங்கினார். தொடர்ந்து எண்ணப்பட்ட வாக்குகளில் செல்லூர் ராஜூ முன்னிலை வகிக்க, முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சின்னம்மாளைவிட 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 11 அமைச்சர்கள் தோல்வியடைந்த நிலையில் வெற்றிபெற்றுள்ளார் செல்லூர் ராஜூ.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு