Published:Updated:

``அணில் விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்”: சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ -செந்தில் பாலாஜி
செல்லூர் ராஜூ -செந்தில் பாலாஜி

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். தனக்கு அது கிடைக்காமல் போயிவிட்டது என்றும் வேதனைப்பட்டுள்ளார். காரணம் என்ன?

தமிழக அரசியல் தலைவர்களில் சமீபத்தில் மீம் கன்டென்டாக ட்ரெண்டிங்கில் இருப்பவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. மின் வெட்டிற்குக் காரணம் மின் கம்பிகளில் செல்லும் அணில்கள்தான் என்று அவர் பேசியதுதான் சமூக வலைத்தளங்களில் அவர் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதற்குக் காரணம். ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை. அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் ஓடுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன, என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாகச் சித்திரிக்கும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; இணையத்தில் தேடிப் படித்திருக்கலாம்.

மின் கம்பத்தில் அணில்
மின் கம்பத்தில் அணில்
ட்விட்டர்

பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் போதும் மின்தடை ஏற்படுகிறது.” என செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தாலும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. தற்போது முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு மின் தடைக்கு அணில்கள்தான் காரணம் எனச் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனக் கேலியாகப் பேசியிருக்கிறார்.

செந்தில்பாலாஜி விளக்கம் சரியா? 
'அணிலாடும் மின்கம்பம்; மின்வெட்டுக்கு காரணமா?- விளக்கும் பொறியாளர்

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட மாணவரணி உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார். அதன் பின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த செல்லூர் ராஜு, `` நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று தி.மு.க-வினர் கிண்டல் செய்தார்கள்.

தெர்மாகோல் விஞ்ஞானி!
தெர்மாகோல் விஞ்ஞானி!

மின் தடைக்கு அணில்கள் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்து தற்போது என்னையும் மிஞ்சிவிட்டார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க ஆட்சியில் அணில் எல்லாம் வெளி நாடுகளுக்குச் சென்று விட்டன போல. அதனால்தான் அப்போது எந்த மின்தடையும் ஏற்படவில்லை. இந்த கண்டுபிடிப்பைச் செய்த செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

மேலும், ``கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை எனத் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது ஏற்பட்டவைதான். ‘தமிழ்நாட்டிற்கு உரியனவற்றைப் பெற்று வருவேன்’ என வீர வசனம் பேசிக்கொண்டு டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஆனால், தற்போது நீட் தேர்வுக்குத் தயாராகச் சொல்கின்றனர். இன்று உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி இருக்கிறது. அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்துள்ளார்? ‘கோ பேக் மோடி’ என்று பிரதமர் மோடியை அவமதித்திருந்த போதும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார் மோடி. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அ.தி.மு.க ஆட்சியிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதேபோல இரண்டு தலைவர்களின்கீழ் அ.தி.மு.க வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அ.தி.மு.க-வை பிளவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கும் சிலரின் (சசிகலா) நோக்கம் நிறைவேறாது.

செல்லூர்  ராஜு
செல்லூர் ராஜு

அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆனால், தி.மு.க எத்தனை கடைகளை அடைத்திருக்கிறார்கள்? உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் தான் தி.மு.க கூட்டணி நீடிக்கும், அதன் பிறகு ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் எல்லோரும் பிரிந்து சென்று விடுவார்கள். சட்டசபையில் ஸ்டாலின் போலச் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப் பூர்வமாகச் சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம்” எனவும் பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு