Published:Updated:

சட்டமன்றத்தில், வரம்பு மீறுகிறாரா செல்வப்பெருந்தகை? - கனல் கக்கும் காங்கிரஸார்...

செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

நீங்கள் பேசியதில் சில விஷயங்கள் சரியில்லை. அதை சபாநாயகரிடம் சொல்லி நீக்கிவிடுங்கள்’ என விஜயதரணி நேரடியாக செல்வப்பெருந்தகையிடமே சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றத்தில், வரம்பு மீறுகிறாரா செல்வப்பெருந்தகை? - கனல் கக்கும் காங்கிரஸார்...

நீங்கள் பேசியதில் சில விஷயங்கள் சரியில்லை. அதை சபாநாயகரிடம் சொல்லி நீக்கிவிடுங்கள்’ என விஜயதரணி நேரடியாக செல்வப்பெருந்தகையிடமே சொல்லியிருக்கிறார்.

Published:Updated:
செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

‘‘எங்கள் கட்சி உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசியது சரியில்லை. அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்!’’ எனச் சட்டமன்றத்தில் குரலெழுப்பி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 27-ம் தேதி, தஞ்சை மாவட்டம் களிமேட்டில், தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த நிகழ்வு குறித்து, சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, ‘இந்நிகழ்வில் ஆளுங்கட்சி உரிய பாதுகாப்பு வழங்கவில்லை’ எனக் கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவைக்குத் திரும்பிய நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிக்கொண்டிருந்தார். அதில், ‘அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மகாமகம் விபத்து குறித்தும், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அது பற்றி எடுத்துரைத்த கருத்துகள்’ குறித்தும் செல்வப்பெருந்தகை பேசினார். ஆனால், அவர் வரம்புமீறிப் பேசியதாகவும், அந்தப் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வப்பெருந்தகையின் பேச்சு அவைக்குள்ளேயே, அனைத்துத் தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பதிலளித்துப் பேச வாய்ப்பு கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, வாய்ப்பு மறுக்கப்படவே... அ.தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் காவலர்களால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சட்டமன்றத்தில், வரம்பு மீறுகிறாரா செல்வப்பெருந்தகை? - கனல் கக்கும் காங்கிரஸார்...

இந்த விவகாரத்தில், செல்வப்பெருந்தகை மீது அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியினரிடையேயும் மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, செல்வப்பெருந்தகை மீது டெல்லி தலைமைக்குப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ``சட்டமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் மாண்பையே சீர்குலைத்துக்கொண்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை. மகாமகம் குறித்து அவர் பேசியதோ, அவைக்குறிப்பில் இருந்த விஷயங்களை வாசித்துக் காட்டியதோகூட தவறில்லை. ஆனால், அவர் பேசிய தொனி, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் தொடர்புபடுத்திப் பேசியது, சட்டமன்றத்தில் இருந்த பெண்கள் அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. எனவே அவர் பேசியதை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களேகூட ரசிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை.

‘நீங்கள் பேசியதில் சில விஷயங்கள் சரியில்லை. அதை சபாநாயகரிடம் சொல்லி நீக்கிவிடுங்கள்’ என விஜயதரணி நேரடியாக செல்வப்பெருந்தகையிடமே சொல்லியிருக்கிறார். ஆனால், ‘நீங்க என்ன அ.தி.மு.க எம்.எல்.ஏ-வா... இல்லை பா.ஜ.க எம்.எல்.ஏ-வா?’ என அவரிடமும் எகிறியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதற்குப் பிறகுதான் விஜயதரணியே எழுந்து, ‘எங்கள் கட்சிக்காரர் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

இந்த விஷயத்தில் மட்டுமல்ல... பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்துக்கொள்ளலாம் என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், ஜெயலலிதா குறித்து செல்வப்பெருந்தகை பேசிய தொனி சரியில்லை. யாரையோ திருப்திப்படுத்தி, தன்னுடைய பொருளாதார நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளவே அவர் இப்படித் தொடர்ந்து பேசிவருகிறார்’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

``தி.மு.க தங்கள் அமைச்சர்களை, உறுப்பினர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, தடாலடியாகப் பேச இவரைப் பயன்படுத்திக்கொள்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் மாண்புதான் கெடுகிறது. இதற்கு முன்பாகவும் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசியவர்கள், எதிர்க்கட்சியினரை விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் அளவுக்கு யாரும் நடந்துகொண்டதில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருப்பதற்கான தகுதியே அவருக்கு இல்லை. அவரை மாற்ற வேண்டும்’’ என்றனர் ஆவேசமாக.

‘தி.மு.க-தான் செல்வப்பெருந்தகையைத் தூண்டிவிடுகிறது’ என்கிற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனிடம் பேசினோம்.

``செல்வப்பெருந்தகை சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகள் வரம்பு மீறியவையோ, மரபு மீறியவையோ இல்லை. ஏற்கெனவே அவைக்குறிப்பில் பதிவான விஷயங்களைத்தான் அவர் பேசியிருக்கிறார். அவரின் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை. ஆனால், அ.தி.மு.க-வினரால் அந்த விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பிரச்னை செய்கின்றனர். கடந்தகாலங்களில் இவர்கள் வரம்பு மீறி என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பதை எங்கள் அமைச்சர் பொன்முடி சபையிலேயே பட்டியலிட்டார். யாரையும் தூண்டிவிட்டுப் பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ என்றார்.

பரந்தாமன்
பரந்தாமன்

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து செல்வப்பெருந்தகையிடமே பேசினோம். ``முன்னாள் முதல்வர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது தவறில்லை எனக் கடந்த ஆட்சியில், சபாநாயகராக இருந்த தனபாலே கூறியிருக்கிறார். தவிர, மகாமகம் விஷயத்தில் அவைக்குறிப்பில் இருந்த விஷயங்களைத்தான் நான் பேசினேனே தவிர, நானாக எதுவும் பேசவில்லை. கடந்த காலங்களில், இவர்களது அம்மா (ஜெயலலிதா) கொண்டுவந்த தீர்மானத்தையே இன்றைக்கு இவர்கள் (அ.தி.மு.க-வினர்) எதிர்க்கிறார்கள். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். நான் வளர்ந்த சூழலின் காரணமாக என்னுடைய வார்த்தைப் பிரயோக தொனியில் ஏதாவது மாற்றமிருக்கலாம். நான் தரவுகளோடு பேசுவதற்குக் கடுமையாக உழைக்கிறேன். என் கட்சி எம்.எல்.ஏ-க்கள் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். மிதவாதக் கட்சி எங்களுடையது. அ.தி.மு.க-வினர்போல முற்றுகையிட மாட்டார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி வட மாநிலத் தலைவர்கள் வரை, பலர் இந்த ஆட்சியைப் பாராட்டுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? மேட்டுக்குடிகள், சாதியவாதிகள்தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்துகின்றனர்’’ என்கிறார் அவர்.

நாகரிகமான அரசியல் சூழலுக்கு வித்திடவேண்டிய சட்டமன்றத்தில், கண்ணியமான உரையாடலை மேற்கொள்ளவேண்டியது ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பு. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism