Published:Updated:

ஒன் பை டூ: வேளாண் சட்டங்கள் ரத்து... ஐந்து மாநிலத் தேர்தல்தான் காரணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்வப்பெருந்தகை - இராம.ஸ்ரீனிவாசன்
செல்வப்பெருந்தகை - இராம.ஸ்ரீனிவாசன்

இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு

பிரீமியம் ஸ்டோரி

செல்வப்பெருந்தகை, சட்டமன்றக்குழுத் தலைவர், காங்கிரஸ்.

“நிச்சயமாக. அதனால்தான், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், `இந்த முடிவு பிரதமர் மோடியின் இதயத்திலிருந்து வந்த மாற்றம் இல்லை’ என்று கூறியிருக்கிறார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் இங்கெல்லாம் பா.ஜ.க மீது விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தில் வேறு வழியில்லாமல், நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் வேளாண் சட்டங்களை இந்த அரசு திரும்பப் பெற்றிருக்கிறதே தவிர, விவசாயிகள் மீதான அக்கறையால் அல்ல. தவிர, 15 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், வட உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நுழைய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட விஷயங்களும் பா.ஜ.க-வை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கின்றன. கடந்த ஓராண்டாகப் போராடிய வேளாண்குடி மக்கள் 700 பேருக்கும்மேல் உயிரிழந்திருக்கின்றனர். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் என்ன இழப்பீடு தரப்போகிறது பா.ஜ.க அரசு? விவசாயிகள் குளிரிலும் மழையிலும் செத்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கொஞ்ச நஞ்சமா பேசினார்கள்... `காலிஸ்தானிகள்’ என்றார்கள்; `தேசத்துரோகிகள்’ என்றார்கள்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘வேளாண் சட்டங்களில் ஒரு கமாகூட மாற்ற மாட்டோம். இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை’ என்று சவடால் பேசினார். ஆனால், விவசாயிகளின் போராட்டத்துக்கு, மன உறுதிக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு.’’

ஒன் பை டூ: வேளாண் சட்டங்கள் ரத்து... ஐந்து மாநிலத் தேர்தல்தான் காரணமா?
ஒன் பை டூ: வேளாண் சட்டங்கள் ரத்து... ஐந்து மாநிலத் தேர்தல்தான் காரணமா?

இராம.ஸ்ரீனிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க.

“நாங்கள் அல்ல... எதிர்க்கட்சிகள்தான் ஐந்து மாநிலத் தேர்தல்களை மனதில்வைத்து விவசாயிகளின் போராட்டத்தை இத்தனை நாள்கள் பெரும் பிரச்னையாகக் கொண்டு சென்றன. அதனால்தான் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகக் கூறியும், எங்களை எதிர்க்கட்சியினர் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதும்கூட இந்தச் சட்டம் தவறு என்றோ, விவசாயிகளுக்குப் பலன் அளிக்காது என்கிற காரணத்தாலோ திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் மோடி எங்கேயும் சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு சட்டத்தை அமல்படுத்தும்போது, மக்களின் ஆதரவு அவசியம். இத்தனை நாள்கள் இந்தச் சட்டத்திலுள்ள நன்மைகளை விவசாயிகளுக்குப் புரியவைக்க முயன்றோம். அது முடியாத காரணத்தால் வாபஸ் வாங்கியிருக்கிறோம். அப்பாவி விவசாயிகளை திசைதிருப்பி, எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் குளிர்காய இனியும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள்கூட திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. இதில் தவறேதும் இல்லை. அதேசமயம், எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னதும் சரிதான்... இப்போதும்கூட வேளாண் சட்டத்தில் ஒரு கமாவைக்கூட நாங்கள் மாற்றவில்லை. விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும்போது இந்தச் சட்டங்களை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு