Published:Updated:

`ரஜினி சொன்னது சரியா.. சோ கொடுத்த விளக்கம் என்ன?' - 1971 சம்பவத்தை விவரிக்கும் சாவித்திரி கண்ணன்

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்

இறைவனைத் தொழுவதற்கு எனக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதைப் போல, நாத்திகத்தைப் பிரசாரம் செய்வதற்கான அவர்களுக்கான ஜனநாயக உரிமையையும் நான் ஏற்கிறேன். அதுதான் பண்பட்ட நாகரிகத்தின் அடையாளம்.

`துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சரியா?' என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், 1971ம் ஆண்டு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அப்போது துக்ளக் ஆசியர் சோ கொடுத்த விளக்கத்தையும் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.

துக்ளக் விழாவில் ரஜினி
துக்ளக் விழாவில் ரஜினி

துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழா ஜனவரி 14 -ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ``1971-ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா இருவரின் ஆடை இல்லா படத்துக்குச் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக எடுத்துப் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. ஆனால், அந்தச் செய்தியை துக்ளக் இதழின் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார் சோ. அந்தச் செய்தி அப்போதைய தி.மு.க. அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்தது. இதனால் தி.மு.க-வினர் துக்ளக் பிரதிகளைக் கைப்பற்றினார்கள். ஆனால், அந்த இதழை மீண்டும் அச்சடித்து சோ வெளியிட்டார். அதோடு இல்லாமல் அடுத்த இதழிலேயே நம்முடைய `பப்ளிசிட்டி மேனேஜர்' எனக் கருணாநிதியைக் குறிப்பிட்டு துக்ளக் இதழின் அட்டைப்படம் வெளியானது. முரசொலி வைத்திருந்தால் தி.மு.க-காரர். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'' என்றார்.

ரஜினி
ரஜினி
http://www.pictureperfect.studio

நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சுக்கு எதிராக தி.மு.க-வினரும் திராவிடர் கழகத்தினரும் கொதித்தார்கள். தொடர்ந்து ரஜினிக்கு எதிராக சில மாவட்ட காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. `ஆதாரம் இல்லாமல் ரஜினி பேசியிருக்கக் கூடாது' என தி.க நிர்வாகிகள் பேட்டியளித்தனர். இந்தநிலையில், மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு அடுத்த விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. பத்திரிகையாளர் மணா தொகுத்த சோ பற்றிய `ஒசாமஅசா' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைத்தான் சாவித்திரி கண்ணன் விவரித்துள்ளார்.

துக்ளக் இதழில் ஒருகாலத்தில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த சாவித்திரி கண்ணன், தற்போது இயற்கை உணவுகளை மக்களுக்குக் கொண்டு செல்வதில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.

அவர் தன்னுடைய முகநூல் பதிவில், `ரஜினி பேசியதற்கெல்லாம் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பதில்தான் தங்களின் வெற்றி அடங்கியுள்ளதாக நினைக்கிறார்கள். அவரைத் தயார்ப்படுத்தினீர்கள், சற்று விவரமாகத் தவறில்லாமலாவது பேசவைத்திருக்கலாமே. பத்திரிகையில் வந்ததைத்தான் சொன்னாராம் ரஜினி. அப்படியானால், அன்றைய துக்ளக் விலை பத்து ரூபாய் என்றும் பிளாக்கில் ஐம்பது ரூபாய்க்கு விற்றதாகவும் பேசியது எந்த ஆதாரத்தில்? அன்றைய துக்ளக் விலை நாற்பது பைசா!(போட்டோவைப் பார்க்க)அந்தச் சம்பவம் குறித்த சோவின் பேட்டியே என்ன நடந்தது என்பதற்குப் போதுமானது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணா எழுதியுள்ள ’ஒசாமஅசா’ என்ற நூலில் சோவே பேசியுள்ளார்.

துக்ளக் பத்திரிகை
துக்ளக் பத்திரிகை

``சம்பந்தப்பட்ட துக்ளக் இதழ் கடைகளுக்கு விற்பனைக்குச் செல்லும் முன்பே, (துக்ளக் பத்திரிகை ஆனந்த விகடன் அலுவலகத்தில்தான் அச்சடிக்கப்பட்டது) தி.மு.க அரசு முன்கூட்டியே ஆனந்தவிகடன் அலுவலகம் வந்து, மொத்தப் பத்திரிகையையும் பறிமுதல் செய்ய முயற்சி மேற்கொண்டபோது, ஆசிரியர் சோ, ஆனந்தவிகடன் எம்.டி-யிடம், `அரசு பறிமுதல் செய்வதற்குள், இந்தப் பத்திரிகையில் உள்ள விசயங்கள் மக்களிடம் போகணும். அதனால், துக்ளக் இதழ் கட்டுகளை முடிந்த அளவுக்கு ஜன்னல் வழியாக வீசி எறிந்துவிடுவோம்' என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார். முடிந்தவரை புத்தகங்களை வீசி எறிந்தோம்! அப்படியே அந்த இதழ் வெளியே பரவி பிளாக்கில் சிலர் விற்கும் நிலைக்குச் சென்றுவிட்டது’’ என்கிறார் சோ.

துக்ளக் பொன் விழாவில்...
துக்ளக் பொன் விழாவில்...

அதாவது இதன்மூலம் அந்த துக்ளக் இதழ் கடைகளில் விற்பனைக்கே செல்லவில்லை என்பது உறுதியாகிறது. வீசி எறியப்பட்டதன் மூலம் விலையில்லாமல்தான் சிலர் கைகளுக்குச் சென்றுள்ளது. அது ஒரு சிலரால் கூடுதலாக விற்கப்பட்டிருப்பது ஒரு செவிவழிச் செய்தி! அவ்வளவே!

துக்ளக் பத்திரிகை
துக்ளக் பத்திரிகை

ரோட்டில் விழுந்த துக்ளக் இதழ் உண்மையான விலைக்கு மாறாக ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய்க்குக்கூட விலை போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஐம்பது ரூபாய்க்கு எப்படி விலை போகும்? நான் சொன்னதற்கு ’அவுட்லுக்’ ஆங்கில இதழ்தான் ஆதாரம் என்கிறார் ரஜினி. அவுட்லுக் 1990-களில் இருந்து வரும் இதழாகும்.1971 சம்பவத்தை அது எழுதியிருக்கக் கூடும். ஆனால், அதை நேரடி ஆதாரமாகக் கொள்ள முடியுமா.

இதைவிட்டு அந்தச் சம்பந்தப்பட்ட துக்ளக்கின் ஒரிஜினலையே குருமூர்த்தியிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே. துக்ளக் அலுவலகத்தில் அலுவலக ஃபைலுக்கென்று ஒன்று இருக்கிறதல்லவா. அதைக் காண்பிக்க என்ன தயக்கம், மேலும் ரஜினி, `இது மறக்க வேண்டிய விஷயம்’ என்கிறார். ரொம்பச் சரி, அப்படியானால், இதை உங்களை இப்படிப் பேச வைத்தவர்களிடம் சொல்லியிருக்கலாமே ரஜினி. என்னைப் பொறுத்தவரை நான் ஆன்மிக நம்பிக்கை உள்ளவன்.

இறைவனைத் தொழுவதற்கு எனக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதைப் போல, நாத்திகத்தைப் பிரசாரம் செய்வதற்கான அவர்களுக்கான ஜனநாயக உரிமையையும் நான் ஏற்கிறேன். அதுதான் பண்பட்ட நாகரிகத்தின் அடையாளம்.

ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்பவர்களுக்கு இது அழகல்ல! ஆன்மிகம் என்பது நாத்திகரையும் கூட அரவணைக்கக் கூடிய அன்பின் பெரு வெள்ளமாக இருக்கவேண்டும்
சாவித்திரி கண்ணன்
தி இந்து ஆங்கிலப் பத்திரிகை
தி இந்து ஆங்கிலப் பத்திரிகை

அவர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற வகையில் ஒரு ஊர்வலம் நடத்துகிறார்கள். அங்கே அவர்களுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுகிறது ஒரு இந்து இயக்கம். அதற்கும் ஜனநாயகத்தில் இடம் தரப்படுகிறது. அப்படிக் காட்டுகிற யாரையும் தாக்க தி.கவினர் முயலவில்லை. ஆனால், அதே சமயம், இந்து இயக்கத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தி.க.வினர் மீது செருப்பை எறிய, அந்தச் செருப்பை எடுத்த தி.க தொண்டர் ஒருவர், ’செருப்பா எறிகிற.. உன் செருப்பாலேயே உன் சாமியை அடிக்கிறேன்' என அடிக்கிறார்!

பத்திரிகை செய்தி
பத்திரிகை செய்தி

இது எதேச்சையாய் நடந்த சம்பவம். ஆனால், மனிதர்கள் மீது செருப்பை எறிந்தவர் குறித்து இதுவரை யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை, துக்ளக் உட்பட. அப்படியிருக்க, அந்தச் சம்பவத்தை ஐம்பது ஆண்டுகளாக அணையாப் பெரு நெருப்பாக நெஞ்சில் சுமந்து, பொதுவெளியில் பதற்றத்தையும் சச்சரவுகளையும் உருவாக்குவது எந்த வகையிலும் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்பவர்களுக்கு இது அழகல்ல. ஆன்மிகம் என்பது நாத்திகரையும்கூட அரவணைக்கக் கூடிய அன்பின் பெரு வெள்ளமாக இருக்கவேண்டும். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பர்யத்தில் - இந்த மண்ணில் - ஆன்மிகமானது நாத்திகர்களையும் உள்ளடக்கி, மரியாதை காட்டியே வந்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் பேசினோம். `` இந்தக் கருத்தைப் பரபரப்புக்காகவும் சுவாரஸ்யத்துக்காகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யவில்லை. சோ அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயத்தையும் உண்மைச் சம்பவம் என்ன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதினேன்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

சாவித்திரி கண்ணன் வெளியிட்ட புகைப்படம்
சாவித்திரி கண்ணன் வெளியிட்ட புகைப்படம்

சாவித்திரி கண்ணனின் கருத்து குறித்து துக்ளக் இதழின் மூத்த செய்தியாளர் ரமேஷிடம் பேசினோம். ``ரஜினி பேசியது உண்மைதான். 1971-ல் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடந்த திராவிடர் கழகப் பேரவையில் இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்திரிக்கும் அட்டைகள், பொம்மைகள் எடுத்துச் செல்லப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், இப்போது இல்லை என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி படங்கள் எடுத்துச் செல்லப்பட்டதை 1971 பிப்ரவரி இதழில் துக்ளக் செய்தி வெளியிட்ட காரணத்துக்காக தி.மு.க ஆட்சியால் புத்தகத்தின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இச்சம்பவம் குறித்து அடுத்த இதழில் சோ அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார். இதைத் தவிர திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ஆபாசக் கடவுளின் படங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

சேலத்தில் நடந்த திராவிடர் கழகப் பேரவையில் இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்திரிக்கும் அட்டைகள், பொம்மைகள் எடுத்துச் செல்லப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் இப்போது இல்லை என்று சொல்வது அப்பட்டமான பொய்.
`துக்ளக்' ரமேஷ்

இதை அடுத்தடுத்த நாள்களில் தினமணி, தி இந்து ஆங்கில நாளேடு ஆகியவற்றில் இப்பேரணி குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கின்றன. ஆகவே, ரஜினிகாந்த் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையைத்தான் பேசியிருக்கிறார். `நான் மன்னிப்பு கேட்க முடியாது' என்று சொல்லியிருப்பது அவரது துணிச்சலையும் தைரியத்தையும் காட்டுகிறது. இது சம்பந்தமாக எந்த விளக்கம் வேண்டுமானாலும் எங்களது அலுவலகத்துக்கு வாருங்கள், நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு