Published:Updated:

சீனியர்கள் மட்டுமே அறிந்த உண்மை; பெருக்கெடுத்த ராணுவப் படைகள் - ஒரு வாரமாக ஜம்முவில் என்ன நடந்தது?

சத்யா கோபாலன்

இந்திய சுதந்திரத்தின்போது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர் ( AP )

இன்று காலை முதல் மொத்த இந்தியாவும் பரபரப்பாகவுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப் பிரிவு 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு எப்படி ரத்து செய்தது எனப் பார்ப்போம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய உள்துறை அமைச்சகம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒரு நாளை கெடுவாகக் கொடுத்தது. அந்த நாளில் மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்களின் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த நாள் ஆகஸ்டு 5, இன்று தான். மத்திய அமைச்சகத்தின் அறிவுரைப் படி இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் சுமார் 430 ராணுவப் படைகள் அணிவகுத்துள்ளன.

இன்று என்ன நடக்கவுள்ளது, எது மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் போன்றவை ஜம்முவில் உள்ள சீனியர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். இது பற்றி என்.டி.டி.வி ஊடகத்திடம் பேசியுள்ள ஜம்முவை சேர்ந்த சீனியர் அதிகாரி, ``தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடப்பது முன் எப்போதும் நடக்காத நிகழ்வு, 1971-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் அந்த மாநிலத்தில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

ஜம்மு சட்டத்தில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் போது நிச்சயமாகக் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதால் கூடுதலாக 60 சிறப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ‘மொபைல் நீதிபதிகளான அவர்கள், கலவரத்தில் ஈடுபடுவோர்களை உடனே கைது செய்து விரைவாகத் தண்டனை வழங்குவார்கள். இதற்காக ஜம்மு நகரில் ஆறு தற்காலிக சிறைச்சாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அமர்நாத் பயணிகள் வெளியேறிய பிறகு அவர்கள் இருந்த விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனைவரும் காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டனர். ஜம்முவில் குவிக்கப்பட்டுள்ள அனைத்து ராணுவ வீரர்களும் நேற்று மாலை முதலே தங்களின் நிலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து ஜம்முவில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களான, தொலைப்பேசி, இணையம், தொலைக்காட்சி போன்றவை நேற்று இரவு துண்டிக்கப்பட்டன.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

இன்று அதிகாலை 4 மணிக்கு லேண்ட் லைன் போன்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் உள்ள அதிகாரிகள், சீனியர் அதிகாரிகளுக்கு சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, ஸ்ரீநகரில் தங்கியிருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இவை அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே செய்யப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் கடந்த ஒரு வாரமாக மெது மெதுவாகச் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தொடர்பான அறிவிப்பு வெளியாவதால் நேற்று இரவு முதல் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது காஷ்மீரில் போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு நீண்ட நாள்களுக்குத் தொடரும் எனவும் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

இதுநாள் வரையில் ஜம்மு-காஷ்மீரில் ஏதேனும் சட்டவிதிகள் அமல்படுத்த வேண்டும் என்றால் இந்திய அரசு மட்டுமல்லாது அம்மாநில அரசும் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அப்போது மட்டுமே சட்டம் காஷ்மீரில் நடைமுறைக்கு வரும். ஆனால், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜம்முவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அங்கு மாநில அரசு செயல்படாத நிலையில் அதைப் பயன்படுத்தியே மத்திய அரசு சட்டப்பிரிவு 35A-வை எளிதாக ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை குடியரசுத் தலைவர் ரம்நாத் கோவிந்த், சிறப்பு சட்டப்பிரிவு ரத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சட்டமன்ற அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எடுத்துக்கொண்டு அதிக பெரும்பான்மையுடன் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளன.

News Credits : NDTV