Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க: சட்டமன்ற உறுப்பினராக 9-வது முறையாக செங்கோட்டையன்... 7-வது முறையாக சபாநாயகர் தனபால்!

செங்கோட்டையன் - தனபால்
செங்கோட்டையன் - தனபால்

இந்தத் தேர்தலோடு ஒன்பதாவது முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைகிறார் செங்கோட்டையன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களிலும் முன்னிலைவகிக்கின்றன. 125 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைக்கவிருக்கிறது. அ.தி.மு.கவை-ப் பொறுத்தவரை, போட்டியிட்ட 179 தொகுதிகளில் 65 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடுமையான இழுபறிக்கு இடையே வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார்.

 கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்

ஆனால், கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ராஜலெட்சுமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர். அதேவேளையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒன்பதாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.வி.மணிமாறனைவிட 28,563 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தலோடு ஒன்பதாவது முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைகிறார் செங்கோட்டையன்.

சக்சஸ் பார்ட்டி... சசி பாசம்... அதிர்ச்சியில் அ.தி.மு.க!

1977, 1980, 84, 89, 91, 2006, 11, 16, 21 ஆகிய ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். 1996 தேர்தலில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 2001-ம் ஆண்டு அவருக்குக் கட்சியில் சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து, வருவாய், வனம், வேளாண், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி எனப் பல துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் செங்கோட்டையன்.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

அவரைப்போலவே அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட முதல் தேர்தலிலிருந்து இப்போது வரை போட்டியிட்டுவருபவர் சபாநாயகர் ப.தனபால். இந்தமுறை அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமானைவிட, 50,902 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறார். இவர், 1977, 80, 84, 2001, 11, 16, 21 ஆகிய ஏழு முறை வெற்றிபெற்றிருக்கிறார். அவற்றில், 1977, 80, 84, 2001 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011-ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 21-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபப்ட்டிருக்கிறார். 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க - ஜெ அணியின் சார்பில் போட்டியிட்டு சங்ககிரி தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் தனபால். இவருக்கு 1991 மற்றும் 96 ஆகிய இரண்டு தேர்தல்களில் கட்சியிலிருந்து வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு