Published:Updated:

`ஓட்டுகளைக் காணல!' - 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற சேந்தமங்கலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன்

எம்.எல்.ஏ.,சந்திரசேகரன்
எம்.எல்.ஏ.,சந்திரசேகரன்

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் மகன் யுவராஜ் தோல்வி.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட நடுக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் மகன் யுவராஜ் 4 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதையடுத்து, ஓட்டு எண்ணும் மையத்தில் சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

யுவராஜ்
யுவராஜ்

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சந்திரசேகரன். அவரின் மகன் யுவராஜ் நடுக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பூட்டு சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க தரப்பில் அழகப்பன் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார். யுவராஜ், ஒவ்வொரு வாக்காளருக்கும் பூட்டு மற்றும் 500 ரூபாயும், பெண் வாக்காளர்களுக்கு சேலை மற்றும் ஆண் வாக்காளர்களுக்கு வேட்டியும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அவர் தரப்பில் இருந்து வந்தது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. யுவராஜுக்கு ஒரு தபால் வாக்கை சேர்த்து மொத்தம் 802 வாக்குகளும், அழகப்பனுக்கு 5 தபால் வாக்குகளுடன் மொத்தம் 806 வாக்குகளும் கிடைத்தன. யுவராஜ், 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால், அதிருப்தியடைந்த யுவராஜ் தரப்பினர், `சில ஓட்டுகள் காணாமல் போய்விட்டன. செல்லாத 31 ஓட்டுகளும் சரியாக பார்க்கவில்லை. அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்' என உதவித் தேர்தல் அலுவலர் புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

உற்சாகத்தில் தி.மு.க... உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

இதை அறிந்த சேந்தமங்கலம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், வேட்பாளர் அழகப்பன் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள், `தேர்தல் அதிகாரிகள், பூத் ஏஜென்டுகள் பார்வையில் எண்ணப்பட்ட வாக்குகள் எப்படி தவறானதாக இருக்கும்? மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது' என்று அவர்களும் வாக்குவாதம் செய்தார்கள். காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு