தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் திமுக-வினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சிலர் அதிகாரிகளிடம் அடையாள அட்டையைக் கேட்டுக் கூச்சலிட்டனர். பின்னர் நடந்த தள்ளு முள்ளுவில் நான்கு அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அசோக் குமார் என்பவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த கரைவேட்டிகள் சிலர், "தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒரே தம்பிதான் இந்த அசோக் குமார். அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. திமுக-வுக்கு வந்த பிறகு அந்தக் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையெல்லாம் ஒருங்கிணைத்துச் செய்தவர் அசோக் குமார்தான்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அசோக் குமார் வைத்ததுதான் சட்டம் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர். சமீபத்தில்கூட கரூர் கம்பெனி ஆட்கள் டாஸ்மாக் கடைகளில் வசூல்வேட்டையில் ஈடுப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதிலும் அசோக் குமாருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பார்கள் இயங்கிவருவது குறித்த தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. அவர்கள் தங்களது கடுமையான விமர்சனத்தை இந்த விவகாரத்தில் முன்வைத்தனர்.

இதையடுத்து சட்டவிரோத பார்கள் மூடப்பட்டுவருகின்றன. இதற்குப் பின்னாலும் அசோக் குமாரும், அவரின் ஆதரவாளர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக் குமாருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
இதையடுத்து டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் அசோக் குமார். அங்கு வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளத் தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்" என்றனர் விரிவாக.

செந்தில் பாலாஜியின் முதுகெலும்பே அசோக் குமார்தான். தற்போது அவரைக் குறிவைத்து வருமான வரித்துறை ஆய்வு மூலமாக தனது அஸ்திரத்தைச் செலுத்தியிருக்கிறது, டெல்லி. இந்த அஸ்திரத்தின் குறி தவறுமா அல்லது சரியாக இலக்கைத் தாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!