Published:Updated:

கரூர்: 'எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை!' - செந்தில் பாலாஜி

ஆக்ஸிஜன் பேருந்து
ஆக்ஸிஜன் பேருந்து

தற்போதைய முதல்வர் மார்ச் 9 -ஆம் தேதி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக முதல் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்தும் கூட, தாமதமாக தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான நடமாடும் ஆக்ஸிஜன் பேருந்தினை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் வழங்கினார்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க, புகளூர் டி.என்.பி.எல் சமுதாயக் கூடத்தில் தயாராகிவரும் 156 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் சிகிச்சை மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மற்றும் உபகரணங்கள் வாங்க இந்திய தொழில் கூட்டமைப்பினர் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழில் முனைவோர் சார்பாக ரூ. 2 கோடியே 80 லட்சம் நிதியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

கரூர்: 'தளபதி கிச்சன்; மூன்று வேளை இலவச உணவு!'- தொடங்கிவைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. ஸ்டாலின் தலைமையினான தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ) சார்பில் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட நடமாடும் ஆக்ஸிஜன் பேருந்தில் 3 படுக்கை வசதிகள், 7 அமரும் இருக்கைகள் உள்ளன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தப் பேருந்து பயன்பாட்டில் இருக்கும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் படுக்கை வசதி அளிக்கப்படும் வரை பேருந்தில் உள்ள ஆக்ஸிஜன் வசதியை பயன்படுத்தி கொள்வார்கள். இதன்மூலம், உயிரிழப்புகள் தடுக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் தயாராகிவரும் 156 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைப்பார்” என்றார்

தொடர்ந்து, பேசியவர், ``சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை தமிழக அரசு மீது சுமத்தியுள்ளார். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பதவியேற்று 21 நாட்களே ஆன நிலையில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபொழுது சேலத்தில் 1,412 பேருக்கு மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 5,800 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

அதேபோல, ஆக்ஸிஜன் வசதி சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது, 10 கே.எல் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது, 27 கே.எல் அளவுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் மார்ச் 9 - ஆம் தேதி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக முதல் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்தும் கூட, தாமதமாக மார்ச் 11 - ஆம் தேதி தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதேபோல், எடப்பாடி பழனிசாமி, இறப்பு விகிதத்தை தமிழக அரசு மறைத்து வருவதாக கூறி இருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு வருகிறது. பழனிசாமி தலைமையிலான அரசு, 444 பேர் இறப்பை மறைத்து, பின்னர் ஒரேநாளில் வெளியிட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு விவரம், தடுப்பூசி விவரம், சிகிச்சை விவரம், இறப்பு விகிதம் ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையோடு தமிழக அரசு அறிவித்து வருகிறது. அனைவருக்கும் சமமான மருத்துவம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு