Published:Updated:

கரூர்: `உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர்!' - செந்தில் பாலாஜி ஆவேசம்

இறந்துவிட்டதாகப் பட்டியலில் உள்ள பெண்கள்
இறந்துவிட்டதாகப் பட்டியலில் உள்ள பெண்கள்

``பல வாக்காளர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத, தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தைத் தாங்களாகவே தயாரித்து, அதில் உயிரோடு இருக்கும் பல வாக்காளர்களை இறந்துவிட்டதாகப் பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறார்கள்.”

``கரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமில், உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக அ.தி.மு.க-வினர் பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திருக்கிறார்கள்" என்று செந்தில் பாலாஜி அதிரடியாகக் குற்றச்சாட்டினார். இதற்கு ஆதாரமாக, இறந்துவிட்டதாக அ.தி.மு.க-வினர் அளித்த மனுவையும், இறந்ததாகக் கூறப்பட்ட நபர்களையும் செய்தியாளர்கள் முன்பு நேரில் நிறுத்திய அவர், கரூர் அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார்.

பட்டியல்
பட்டியல்
`பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ம் ஆண்டு, மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்காக, கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு, புதிய வாக்காளர் சேர்ப்பது, உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, இடமாறுதல் செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளில் ஆளுங்கட்சியினர் தி.மு.க-வுக்கு வாக்களிக்கக்கூடிய நபர்கள் என்று கூறக்கூடிய நபர்களைத் திட்டமிட்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதாகவும், முறைகேடாகப் பல வாக்காளர்களை அ.தி.மு.க-வினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்துவருவதாகவும், செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். இது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்தார்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ``வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தை அ.தி.மு.க-வே தயார் செய்து, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பூத்களிலும் பல வாக்குகளை நீக்கிவருகின்றனர். குறிப்பாக, உயிரோடிருக்கும் பலரையும் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் கையொப்பத்துடன்கூடிய படிவத்தில், இறந்தவர்களாகக் குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திருக்கிறார்கள்" என்று அதிரடியாகக் குற்றம்சாட்டிய செந்தில் பாலாஜி, இரண்டு பெண்களை பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தினார்.

``இவர்கள் இருவரும் கரூர் தொகுதியிலுள்ள சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் அனிதா" என செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, ``இவர்கள் இருவரும் நிரந்தரமாகச் சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையத்தில் வசித்துவருகின்றனர். இந்தநிலையில், இவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக, அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் தனது கைப்பட கடிதம் எழுதி, அதை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறார். இதுபோலவே, மாவட்டம் முழுவதுமுள்ள ஒவ்வொரு பூத்திலும், பல வாக்காளர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத, தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தைத் தாங்களாகவே தயாரித்து, அதில் உயிரோடு இருக்கும் பல வாக்காளர்களை இறந்துவிட்டதாகப் பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் உடந்தையாக இருக்கிறார். மாவட்டம் முழுவதும் சட்டத்துக்குப் புறம்பாக வாக்காளர்களை நீக்கும் பணியில் அ.தி.மு.க-வினர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. இது தொடர்பாக, இன்று வழக்கு ஒன்றை தி.மு.க சார்பில் தாக்கல் செய்யவிருக்க்றோம்" எனத் தெரிவித்தார்.

அதோடு, அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய ஒரு படிவத்தையும் செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார் செந்தில் பாலாஜி.

அடுத்த கட்டுரைக்கு